ஸ்மார்ட்போன் மோகத்தை உணர்த்தும் வைரல் புகைப்படங்கள்...

இணையத்தில் வைரலாக பரவிய இரண்டு படங்கள், ஸ்மார்ட்போனுக்கு நாம் அடிமையாகி விட்டோமா? எனும் கேள்வியை எழுப்புகின்றன.

0

ஸ்மார்ட்போன் நம் வாழ்க்கையில் எந்த அளவு தாக்கம் செலுத்துகிறது என்பது, எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான் – ஆனால் நம்மில் பலரும் இன்னும் உணராத இந்த விஷயத்தை இணையத்தில் அண்மையில் வைரலாக பரவிய இரண்டு புகைப்படங்கள் கச்சிதமாக உணர்த்தியிருக்கின்றன. இந்த வைரல் படங்களை பார்த்தால் நாமும் கூட குற்ற உணர்வுக்கு உள்ளாவோம். ஆனால் குற்ற உணர்வு கொள்வதில் அர்த்தம் இல்லை- அதற்கு மாறாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது ஸ்மார்ட்போனை மறந்துவிட்டு, சூழல் தரும் அனுபவத்தில் மூழ்கப் பழகினால் நன்றாக இருக்கும்.

அந்த வைரல் படங்களில் அப்படி என்ன இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். உண்மையில் அவை மிகச்சாதாரணமான படங்கள். கால்ப் விளையாட்டு மைதானத்தில் எடுக்கப்பட்ட அந்த படங்களின் தன்மையிலோ, உள்ளடக்கத்திலோ பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த படங்களை பார்க்கும் போது சாதாரண படங்கள் என கடந்துவிடலாம். ஆனால் அந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது தான், அவை உணர்த்தும் நிஜம் பளிச்சென உறைக்கும்.

இரண்டு படங்களுமே கால்ப் நட்சத்திரம் டைகர் உட்ஸ் கால்ப் ஆடும் காட்சியை சித்தரிக்கின்றன. இரண்டிலுமே ரசிகர்கள் கூட்டமாக இருக்கின்றனர். வெவ்வேறு காலக் கட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த படங்களில் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தான் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

முதல் படத்தில் ரசிகர்கள் டைகர் உட்ஸ் ஆட்டத்தை மெய்மறந்து ரசிக்கின்றனர். இரண்டாவது படத்திலோ ரசிகர்கள் பெரும்பாலானோர் கையில் ஸ்மார்ட்போனை வைத்து படம் எடுப்பதில் ஈடுபட்டிருகின்றனர். கால்ப் போட்டி இயக்குனரான ஜேமி கென்னடி (https://twitter.com/jamierkennedy/status/1027247386723340288) என்பவர் இந்த இரண்டு படங்களையும் ஒப்பிட்டு, 2002/2018 என தலைப்பிட்டு, ஸ்மார்ட்போன் வருகைக்குப்பிறகு டைகர் உட்ஸ் ஆட்டத்தை ரசிப்பது எப்படி மாறியிருக்கிறது என தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

கால்ப் விளையாட்டை காண வந்த ரசிகர்கள், டைகர் உட்ஸ் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசிப்பதை விட்டு விட்டு, அவர் ஆடும் காட்சியை படமெடுப்பதில் மூழ்கியிருக்கின்றனரே என்பதை உணர்த்தும் வகையில் இந்த படங்களை அவர் வெளியிட்டிருந்தார்.

கால்ப் விளையாட்டு என்றில்லை, பெரும்பாலான இடங்களில் இத்தகைய அனுபவத்தை நாம் எதிர்கொள்ளலாம். ஏன், நாமே இப்படி செய்யலாம். திருமண நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பிள்ளைகள் பட்டமளிப்பு விழாவாக இருந்தாலும் சரி, அந்த நிகழ்வில் லயிக்காமல் அதை படமெடுப்பதிலேயே கவனம் செலுத்துகிறோம். ஸ்மார்ட்போன் காமிராவில் படம் எடுப்பது நல்லது தான். அந்த ஆற்றலை கொண்டு பல விஷயங்களை செய்யலாம் தான்.

ஆனால், எந்த நிகழ்ச்சிக்காக செல்கிறோமோ அதன் முழுமையான அனுபவத்தை தவறவிட்டு, கையில் போனை வைத்துக்கொண்டு படம் எடுப்பது அல்லது சுய படம் எடுத்து நிலைத்தகவல் வெளியிடுவது எந்த அளவுக்கு சரி?

ஜேமி கென்னடி டிவிட்டரில் பகிர்ந்து கொண்ட படங்கள் இதே போன்ற கேள்வியை எழுப்பியதால், பலரையும் இந்த படங்கள் கவர்ந்தன. இதனையடுத்து நூற்றுக்கணக்கானோர் இதற்கு விருப்பம் தெரிவித்து, இதை மறு குறும்பதிவிடவும் செய்தனர். இதனால் இந்த படங்கள் வைரலாகி மேலும் கவனத்தை ஈர்த்தன.

இதுவரை 28,000 விருப்பங்களுக்கு மேல் பெற்று, கிட்டத்தட்ட 10,000 முறை ரீடிவீட் செய்யப்பட்டுள்ள இந்த படங்கள், ஸ்மார்ட்போன் காமிரா பழக்கம் தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படங்கள் தொடர்பான குறும்பதிவுக்கு பலரும் தெரிவித்த கருத்துக்கள் வலுவான விவாதமாக அமைந்துள்ளன.

ஆம் காலம் மாறிவிட்டது என்பது முதல் இது தலைமுறை இடைவெளி என்பது வரை பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் இதில் என்ன தவறு என்பது போல கேட்டிருந்தாலும் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போனின் தாக்கம் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சிலர், இதே போல நிகழ்ச்சிகளின் போது காமிராக்களில் மக்கள் மூழ்கியிருக்கும் காட்சிகளை பகிர்ந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் சிலர், காமிரா வைத்து படம் எடுத்துக்கொண்டிருப்பவர்கள் மத்தியில், இன்னமும் அப்பாவியாக ஆட்டம் அல்லது நிகழ்ச்சியில் லயித்திருக்கும் முதியவர் அல்லது சிறுவனின் புகைபப்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தில், ‘இவர்கள் புகைப்படக் கலைஞர் படமெடுப்பதை படம் எடுத்துக்கொண்டிருக்கின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார். 

இன்னொருவர், ஒரு நிகழ்வை நீங்கள் படம் எடுத்தால் அதை நினைவில் நிறுத்திக்கொள்வதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வு ஒன்று தெரிவிப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 

மக்கள் எல்லாம் தங்கள் போனுக்கு அடிமையாகி விட்டனர் என ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். நாம் இப்போதெல்லாம் வாழ்வதில்லை, தருணங்களை அனுபவிப்பதற்கு பதிலாக நினைவுகளை சேமித்துக்கொண்டிருக்கிறோம் என ஒருவர் கவித்துவமாக குறிப்பிட்டுள்ளார். யாருக்கும் நிகழ்ச்சியை அனுபவிக்க விருப்பம் இல்லை, எல்லோருக்கும் விருப்பங்கள் (லைக்) தேவை என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இந்த வைரல் படங்கள் ஸ்மார்ட்போனில் படமெடுக்கும் பழக்கம் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஸ்மார்ட்போனில் படம் எடுக்கும் முக்கியமானது என்றாலும், அதை எப்போது எப்படி பயன்படுத்துவது என்ற புரிதல் இல்லாதது நம் காலத்து பிரச்சனையாக உருவாகி இருப்பதை இந்த படங்கள் உணர்த்துகின்றன.

கடந்த 2015 ம் ஆண்டு அமெரிக்காவின் புருக்ளின் நகரில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றின் போது எடுக்கப்பட்ட படம் வைரலானதையும் இங்கே நினைத்துப்பார்க்கலாம். கூட்டத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் கையில் ஸ்மார்ட்போனை வைத்து படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருக்க அவர்கள் நடுவில் இருக்கும் வயதான பெண்மணி ஒருவர் மட்டும் எந்த பரபரப்பும் இல்லாமல் மிகுந்த ஆர்வத்தோடு தன் கண் முன்னால் நிகழ்வதை ரசித்துக் கொண்டிருப்பதை அந்த படம் உணர்த்தியது. செல்பீ கூட்டத்திற்கு மத்தியில் அந்த வயதான பெண்மணி நிகழ்காலத்தை ரசித்த அந்த காட்சி இணையம் முழுவதும் வைரலானது.

இப்போது நிலைமை மாறிவிடவில்லை. இன்னும் தீவிரமாகி இருக்கிறது. இதில் நீங்கள் எந்தப்பக்கம்: உங்கள் கருத்து என்ன?