கங்கை நதியை பாதுகாக்க களம் இறங்கிய எவரெஸ்ட் சிகர நாயகி பசேந்திரி பால்!

அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ விருது வென்றவரான பசேந்திரி பால், கங்கை நதியை பாதுகாக்கும் முயற்சியில் 40 பேர் அடங்கிய குழுவுடன் ஒரு மாத கால படகுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

0

இமயமலையின் மேற்குத்தொடரில் உருவாகும் கங்கை நதி 2,525 கிலோமீட்டர் நீளம் கொண்ட நதியாகும். இது உலகம் முழுவதும் அதிக மாசுபடும் நதிகளின் வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளைக் கலப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் நதியின் நிலை மேலும் மோசமாகிறது.

அழிந்து வரும் இந்த நதியைப் பாதுகாக்க இந்தியா முழுவதும் பலர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் டாடா ஸ்டீல் அட்வென்சர் ஃபவுண்டேஷன் (TSAF) தலைவர் பசேந்திரி பால் அவர்களது முயற்சியாகும். 

1984-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி என்கிற பெருமைக்குரிய பசேந்திரி, பத்மஸ்ரீ மற்றும் அர்ஜுனா விருது பெற்றவர்.

தற்போது 40 உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் ‘மிஷன் கங்கா’ என்கிற படகுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கழிவு மேலாண்மை, கங்கா நதியை சுத்தப்படுத்துதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

மிஷன் கங்கா

டாடா ஸ்டீல் உடன் இணைந்து ’நேஷனல் மிஷன் ஃபார் க்ளீன் கங்கா’ (NMCG) ஏற்பாடு செய்துள்ள இந்த நோக்கமானது ஏழு முக்கிய நகரங்களை உள்ளடக்கியுள்ளது. அக்டோபர் மாதம் 3-ம் தேதி உத்தர்காண்டின் ஹரித்வாரில் துவங்கி அக்டோபர் 30-ம் தேதி பாட்னாவில் முடிவடைகிறது.

பிஜ்னோர், கான்பூர், அலகாபாத், உத்திரப்பிரதேசத்தில் நதிக்கரையில் அமைந்துள்ள வாரனாசி உள்ளிட்ட எட்டு நகரங்கள் வழியாக இந்தக் குழுவினர் இலக்கை நோக்கி பயணிக்கின்றனர். பசேந்திரி கூறுகையில், 

“நாங்கள் 1,500 கிலோமீட்டர் வரை படகில் பயணிப்போம். பெரிய நகரங்கள் ஒவ்வொன்றிலும் இடையில் மூன்று நாட்கள் தங்குகிறோம். நாங்கள் சுத்தம் செய்து அனைவர் மத்தியிலும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்,” என்றார்.

இந்த நோக்கத்தின் உறுப்பினரான ஸ்நேகா கூறுகையில்,

“நாம் பொறுப்பேற்கவேண்டும். சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் நாட்டைப் பராமரிக்க பசேந்திரி பால் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளார்,” என்றார்.

இந்த புண்ணிய நதியின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நதியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவேண்டும் என்பது இக்குழுவினர் விருப்பம். மேலும் பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்த பயணத்தின்போது கங்கா நதியில் உள்ள கழிவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளூர் நகராட்சி நிறுவனங்களின் உதவியுடன் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படும்.

குழு

எவரெஸ்ட் மலையேறுபவர்கள் எட்டு பேர், ஐஐடி அறிவியல் ஆய்வு பட்டதாரிகள் ஐந்து பேர், ஒரு ரேடியோ ஜாக்கி, பல்வேறு மேலாண்மை பட்டதாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய 40 உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு பசேந்திரி தலைமை வகிக்கிறார்.

என்எம்சிஜி தலைமை இயக்குனர் ராஜீவ் ரஞ்சன் குழுவின் முயற்சியைப் பாராட்டினார். அவர் கூறுகையில்,

“ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வீட்டு வேலைகள் முதல் நீர்பாசனம், வணிகம் வரை கங்கா நதியைச் சார்ந்துள்ளனர். ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக அதன் நீரை விவேகமற்ற முறையில் பயன்படுத்துவதால் கங்கா நதி மாசுபட்டு சில இடங்களில் நச்சுத்தன்மையுடனும் காணப்படுகிறது,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL