தொடர் தொழில்முனைவில் ஈடுபட்டு மூன்று ஸ்டார்ட்-அப்’களை வெற்றிகரமாக நடத்திவரும் சென்னை இளைஞர்!

1

ஹேசல் ஸ்டேஷனரி மற்றும் மேட்கேப் மெர்சண்டைஸ் சிஇஓ ஜிகே.கோகுல்ராஜ். தனது பட்டப்படிப்பு முடித்த பிறகு இவர் தொடங்கிய மூன்றாவது ஸ்டார்ட் அப் இது. எஸ்ஆர்எம்-ல் மெக்கானிக்கல் என்ஜினியர்ங் இளநிலை பட்டமும் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் என்ஜினியர்ங் மேனேஜ்மெண்ட் முதுகலை பட்டமும் பெற்றவர் கோகுல்ராஜ்.

ராஜபாளையத்தில் பிறந்து சென்னையில் வளர்ந்தார். இவரது தந்தை ஒரு சார்டட் அக்கவுண்டண்ட். அவர் தனது கடும் உழைப்பாலும் விடாமுயற்சியாலும் பல்வேறு துறைகளிலுள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து தொழில்புரிந்தார். தனது தந்தையைவிட ஒரு வெற்றிகரமான தொழில்முனைவராவதே கோகுல்ராஜின் விருப்பமாக இருந்துள்ளது.

பட்டப்படிப்பு முடித்ததும் கிடைத்த அனுபவம்

”என்னுடைய பட்டப்படிப்பை முடித்ததும் நான் யாரிடமும் பணியாற்றவில்லை. இதில் நன்மை தீமை இரண்டும் கலந்துள்ளது.”

அமெரிக்காவில் முதுகலைப் பட்டத்தை முடித்ததும் அவரது இணை நிறுவனருடன் இந்தியாவிற்கு திரும்பி 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு இகாமர்ஸ் வென்சர் ZAPstore.com என்ற பெயரில் துவங்கினார். ஆனால் இணை நிறுவனருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 2012 இறுதியில் அந்தத் தொழிலை விட்டு விலகிவிட்டார் கோகுல்ராஜ்.

’MyCopie’ என்னும் ஸ்டார்ட் அப்பில் முதலீடு செய்து அதில் பங்களிக்க தொடங்கினார் கோகுல்ராஜ். இவர் முதலீடு செய்த அந்நிறுவன நிறுவனர்கள் நான்கு பேரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்ததால், கோகுல்ராஜ் அவர்களுக்கு வழிகாட்டி சிஇஓ மற்றும் இணை நிறுவனரானார். ’MyCopie’ கல்லூரி மாணவர்களுக்காக அவர்களது உணர்வுகளை கருத்தில் கொண்டு நோட்புக்குகள் வடிவமைக்கும் நிறுவனம். மாணவர்களுக்கு மதிப்பை மேலும் கூட்டும் வகையில் பல்வேறு ப்ராண்டுகளுடன் இணைந்து தள்ளுபடிகளை வழங்குகிறார்கள். 

சென்னை மற்றும் பெங்களூருவிலுள்ள கல்லூரி மாணவர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த பயணத்தில் மற்ற நிறுவனர்கள் அடங்கிய குழுவினர் தங்களது பாணியில் பணியைத் தொடர்ந்தனர். 2016 தொடக்கத்தில் மூன்று நகரங்களில் 10 விநியோகஸ்தர்களுடன் 500க்கும் மேற்பட்ட ஸ்டோர்களில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தொழில்முனைவில் உந்துதல் மற்றும் துவக்கம்

”சொந்தமாக தொழில் துவங்குவது மட்டுமே என்னுடைய விருப்பம். என்னுடைய தலைவிதி எப்படியிருக்கும் என்று மற்றவர் சொல்வதை நான் விரும்பவில்லை. என்னுடைய விதியை நானே உருவாக்க நினைத்தேன்.”

என்னுடைய தந்தையின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் எனக்கு ஊக்கமளித்தது. அதுவே என் வெற்றிக்கு வழிவகுத்தது, என்கிறார். புதிய தொழில் துவங்குவதற்கு இவரது குடும்பத்தினர் ஆதரவளித்து வருகின்றனர். முதல் ஸ்டார்ட் அப்பிற்கு அவர்கள் நிதியுதவி செய்தனர். இவர்களது நோட்புக்குகள் அனைத்தும் லிமிடட் எடிஷனில் மட்டுமே கிடைக்கிறது.

’’MyCopi’-யில் வடிவமைப்பில் கவனம் செலுத்தப்படுவதால் நோட்புக்குகள் தாண்டி மற்ற ஃபார்மாட்டுகளில் தாங்கள் விரும்பும் வடிவமைப்புகளை மாணவர்கள் கேட்கத் துவங்கினர். ’மேட்கேப்’ எனும் மெர்சண்டைஸ் ப்ராண்டை தொடங்கும் எண்ணம் அவருக்கும் அவரது குழுவினருக்கும் அப்படித்தான் தோன்றியது. இதன் வடிவமைப்புகள் மாணவர்களின் ஈகோவை தொடர்பு படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். 

மெர்சண்டைஸ் சந்தை குறித்து ஆராய்ந்தபோது அவர்கள் பெரும்பாலும் 22 வயது முதல் 35 வயதுடையவர்களாக இருந்தனர். அவர்கள் இளமையான உணர்வுடன் இருக்கவும் அவர்களது இளம் மாணவர் பருவம் குறித்த உள்ளுணர்வை ஊக்குவிக்கும் பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.

பெங்களூருவில் மேட்கேப் என்கிற இவர்களது ப்ராண்டை கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தினர், நல்ல வரவேற்வு கிடைத்தது என்கிறார். தற்போது கோப்பைகள், கோஸ்டர்ஸ், டோட் பேக்ஸ், பேட்ஜஸ், மேக்னட்ஸ், நோட்புக்ஸ், To- Do லிஸ்ட் ஆகியவற்றை வடிவமைத்து சில்லறை வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளனர். 

பாரம்பரியம் (traditional), கொள்கைப்பிடிப்பு (obsession), வேலையின்மை (unemployed), பிரகாசம் (vibrance), கவர்ச்சி (glamourous), கலையார்வம் (bohemian), பயண ஆர்வம் (wanderlust) ஆகிய ஏழு வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டே அனைத்து வடிவமைப்புகளும் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு எழுத்துகளில் தொடங்கும் ஏழு வார்த்தைகளைக் கொண்டே உருவாக்குவதால் இவர்களது தயாரிப்புகள் லிமிடெட் எடிஷனிலேயே கிடைக்கிறது. மேலும் உறுதி மற்றும் நீடித்த உழைப்பை உறுதிசெய்யும் மூலப்பொருட்களே தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றனர்.

”வெற்றிகரமான சிஇஓ, கலைஞர்கள், பயணிகள், நிர்வாகிகள் போன்றோர் இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் தங்களது எண்ணங்களை பேப்பரில் எழுதவே விரும்புகின்றனர். யூரோப்பிலிருந்து வாங்கப்படும் விலையுயர்ந்த ஜர்னல்களை எடுத்துச்செல்வது அவர்களது சமூக அந்தஸ்தை உயர்த்திக் காட்டுவதாக கருதுகின்றனர். இந்தத் துறையில் இந்தியாவில் யாரும் கவனம் செலுத்தவில்லை. ஆகவே இதில் ஆய்வு மேற்கொள்ள ஒரு ப்ராடக்ட் டிசைனரை பணியிலமர்த்த முடிவெடுத்தோம். 

”தயாரிப்பை வாங்குவோருக்கு அதிநவீனத்துவம், ஸ்டைல், ஆடம்பரம் ஆகியவற்றை அளித்து ஒரு பெருமிதத்தைத் தரும் ப்ரீமியம் ஸ்டேஷனரி ப்ராண்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டு 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ’ஹேசல் ஸ்டேஷனரி’ அறிமுகப்படுத்தினோம்.”

அமேசான் தளங்களிலும் இந்த ஜர்னல்கள் விற்கப்படுகிறது. ஒரு மிகப்பெரிய இகாமர்ஸ் வலைதளம் வாயிலாக மலேசியாவிற்கும் விற்கின்றனர். தென் சென்னையில் சில குறிப்பிட்ட ஸ்டேஷனரி ஸ்டோர்களில் மட்டும் இந்த ப்ராண்ட் கிடைக்கிறது. விமான நிலையங்கள், லக்சரி வாட்ச், ஜுவல்லரி ஸ்டோர் ஆகியவற்றில் இடம்பெற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. 

மெட்டீரியல், பேப்பர், பேண்ட், பேக்கேஜிங் ஆகியவற்றின் R&D க்காக ஆறு மாதங்கள் செலவிடப்படுவதால் இவர்களது தயாரிப்புகள் தனித்து விளங்குகிறது. இவர்களது ஜர்னல்களில் எழுதுவது வாடிக்கயாளர்களுக்கு எளிதாக இருப்பதை உறுதிசெய்ய பேப்பர்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 699 ரூபாய் முதல் 1099 ரூபாய் வரை இவை விற்கப்படுகிறது. 

இவர்களது முதல் ஜர்னல்களின் தொடர் ‘Noonday Brocade’ என பெயரிடப்பட்டது. இரண்டாவது தொடரில் சிஇஓ, கலைஞர்கள், பயணிகள் அகியோருக்கென பிரத்யேகமான ஜர்னல்கள் அறிமுகப்படுத்துகின்றனர். அவர்கள் தங்களது கலையையும் எண்ணங்களையும் எளிதாக பேப்பரில் கொண்டுவரும் விதத்தில் ஒவ்வொரு ஜர்னலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று விளக்கினார் கோகுல்ராஜ்.

மேட்கேப் மற்றும் ஹேசல் (MadCap & Hazel)

மேட்கேப், ஹேசல் ஆகிய இரண்டு ப்ராண்டுகளும் லைஃப்ஸ்டைல் செக்டாரைச் சேர்ந்தது. மேட்கேப் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் 18 முதல் 35 வயதுடையவர்கள். ஹேசல் சேவையை பெறுபவர்கள் 25 வயது முதல் 50 வயதுடையவர்கள். மேட்கேப் பணிபுரியும் மெர்சண்டைஸ் சந்தையின் அளவு 125 மில்லியன் அமெரிக்க டாலர்கள். Chumbak மற்றும் Happily Unmarried ஆகியவை இதில் வெற்றிகரமாக செயல்பட்டுவருகின்றனர்.

ஹேசல் செயல்படும் ப்ரீமியம் ஸ்டேஷனரி சந்தை இந்தியாவில் மட்டும் 300 கோடி. இவர்களுக்கு வெகு அருகில் இருப்பவர்கள் Nightingale. அதேபோல் Moleskin போன்ற ஐரோப்பாவைச் சேர்ந்த ப்ராண்டுகள் பிரபலமாக உள்ளனர். இரண்டு நபர்களுடன் தொடங்கபட்டு தற்போது 9 நபர்களுடன் குழு இயங்கி வருகிறது. குழுவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆர்டிஸ்ட் மற்றும் க்ராஃபிக் டிசைனர்கள்.

சந்தித்த சவால்கள்

கோகுல்ராஜ் தொடங்கிய அனைத்து ஸ்டார்ட் அப்பிலும் சந்தையில் முறையாக பொருந்துவதில் பிரச்சனைகளை சந்தித்துள்ளார். பலமுறை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட பிறகு நிலைமை சீரானது. தயாரிப்புகளை சந்தைப்படுத்த சரியான வழிமுறைகளைக் கண்டறிவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ரீடெய்லர்ஸ் மற்றும் இகாமர்ஸ் நிறுவனங்களுடன் கையொப்பமிட அதிக நேரம் செலவிட நேர்ந்தது. சரியான வாடிக்கையாளரைச் சென்றடைவது எப்போதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்காக பல புதிய முறைகளை முயற்சித்துக்கொண்டிருக்கிறோம்.

முன்னுதாரணம் அல்லது வழிகாட்டிகள்

பில்கேட்ஸ், மைக்கேல் ஜாக்சன், எலன் மஸ்க், ரிச்சர்ட் ப்ரான்சன், ட்வைன் ஜான்சன் ஆகியோரை தனிப்பட்ட முறையில் பெரிதும் போற்றுகிறார் கோகுல்ராஜ்.

”என் டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் கூறும் வார்த்தைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ’நீங்கள் உங்களது வாழ்நாளில் சந்திக்கும் 99% மக்கள் பயனற்ற வேலைகளில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். நீங்கள்தான் புத்திசாலித்தனமாக அவர்களை புறக்கணிக்கவேண்டும். இல்லையெனில் உங்களையும் அவர்களில் ஒருவராக மாற்றிவிடுவார்கள்.”

தொழில்முனைவை கனவு போல சுமந்து தொடர்ந்து ஊக்கத்துடன் தொழில் புரிகிறார் கோகுல்ராஜ். அவர் தொடங்கிய நிறுவனங்களுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நிதியுதவி செய்தனர். மேலும் தொழிலை விரிவடையவும், தேவைகளை பூர்த்தி செய்யவும் 125000 அமெரிக்க டாலர்கள் நிதியை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கோகுல்ராஜ் தெரிவித்தார்.