வறட்சி, புயல் நிவாரண நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.1,712.10 கோடியை மத்திய அரசு வழங்கியது!

0

தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நிலவும் வறட்சி நிலைமைகள் குறித்து மத்திய அரசு கவலை கொண்டது. இந்த மாநிலங்களிலிருந்து விரிவான கோரிக்கை மனுக்களைப் பெற்ற பிறகு, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்த்து பேரிடர் குறித்த ஸ்தல ரீதியான மதிப்பீட்டை மேற்கொள்ள அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. உதவி குறித்த விரிவான விதிமுறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழுக்களின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் உயர்மட்டக் குழு இந்த மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியுதவியின் அளவை பரிந்துரை செய்தது.

உயர்மட்டக் குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் தேசிய பேரிடர் எதிர்ச்செயல் நிதியிலிருந்து வறட்சிக்காக தமிழ் நாட்டிற்கு ரூ. 1,793.63 கோடியையும், கர்நாடக மாநிலத்திற்கு ரூ.1,782.44 கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

மேற்கூறிய ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாநில பேரிடர் எதிர்ச்செயல் நிதியில் உள்ள இருப்பான ரூ. 345.64 கோடியை சரிசெய்து கொண்டு தேசிய பேரிடர் எதிர்ச்செயல் நிதியிலிருந்து தமிழ்நாடு மாநிலத்திற்கு ரூ. 1447.99 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

கர்நாடக மாநிலத்திற்கு அந்த மாநிலத்தின் மாநில பேரிடர் எதிர்ச்செயல் நிதியில் கையிருப்பாக உள்ள ரூ. 96.92 கோடியை சரிசெய்து கொண்டும், மத்திய அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ. 450 கோடியை கணக்கில் எடுத்துக் கொண்டும், மீதமுள்ள ரூ. 1,235.52 கோடியை தேசிய பேரிடர் எதிர்ச்செயல் நிதியிலிருந்து மத்திய அரசு வழங்கியுள்ளது.

தனிநபர் பயனாளிகளை மையமாகக் கொண்டு இந்த நிதியுதவி அனைவருக்கும் சென்றடையும் வகையில் கட்டாயமாக இந்தப் பயனாளிகளின் வங்கிக் கணக்கின் மூலம் பகிர்ந்தளிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உயர்மட்டக் குழு ஆலோசனை தெரிவித்துள்ளது.

மேலும் 2016 டிசம்பரில் நிகழ்ந்த ‘வார்தா’ புயலுக்காக தமிழ்நாடு மாநிலத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியை வழங்குவதற்காக தேசிய பேரிடர் எதிர்ச்செயல் நிதியிலிருந்து ரூ.264.11 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தத் தொகையும் இந்தப் புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையிலான மத்தியக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உயர்மட்டக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகும்.

இந்த நிதி ஒதுக்கீடுகள் 14வது நிதிக் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க மத்திய வரிகளில் 42 சதவீதத்தை மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டிற்கு மேலாக வழங்கப்படுவதாகும். 2016-17 ஆம் ஆண்டிற்கு மத்திய வரிகளிலிருந்து மாநிலங்களுக்கான பங்காக ரூ. 6.08 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இந்தப் பங்கீட்டு முறையில் 2016-17ஆம் ஆண்டில் தமிழ்நாடு ரூ. 24,538 கோடியும், கர்நாடகா ரூ. 28,750 கோடியும் பெற்றன.

மேலும் 2016-17ஆம் ஆண்டில் மத்திய அரசு கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியுதவியாக அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 48,869 கோடி வழங்கியிருந்தது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டிருந்தது.

விவசாயிகளின் நலனுக்கென பிரதமர் விவசாயக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 13,240 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் 2016-17ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு ரூ. 2,45,435 கோடி தரப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கம், நீர் பாதுகாப்புப் பணிகள் ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புறுதித் திட்டத்திற்கென வழங்கப்பட்ட ரூ. 47,499 கோடியும் இதில் அடங்கும்.

கோடைக்காலம் வரவிருக்கின்ற நிலையில், பிரதமர் விவசாய நீர்ப்பாசன திட்டம், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புறுதித் திட்டம் போன்றவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி அடுத்த மூன்று மாத காலத்தில் நீர் வளத்தைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் அனைத்து மாநிலங்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.