திட்டமில்லா திட்டமே 'ஆலம் விழுதுகள்'- இயற்கையோடு ஒரு 'நாடோடி' முகாம்!

சூழலியல் பகுதியில் குடும்பத்துடன் மூன்று நாட்கள் இயற்கையோடு ஒன்றி 'நாடோடி' போன்ற புத்துணர்வு முகாம்களை நடத்தும் 'ஆலம் விழுதுகள்' குழு.

0

பெரியவர்களுக்கு வாழ்வியல், கலை, இலக்கியம், சுற்றுச்சூழல், இயற்கையை ஒட்டிய தொழில்கள் என பற்பல கருப்பொருள்களில் கருத்தரங்குகள், சிறுவர்களுக்கு காகித மடிப்புக் கலை, மண் பொம்பைகள் செய்தல், இசைப் பயிற்சிகள், நாடகக் கலை என பல்வேறு பயிலரங்குகள் உள்ளிட்டவை 'ஆலம் விழுதுகள்' புத்துணர்வு முகாமின் முக்கிய அம்சங்கள்.

ஃபேஸ்புக் மூலம் நட்பை வளர்த்துக்கொண்ட நண்பர்கள் சிலர் ஒன்றிணைந்து, தமிழகத்தில் இந்த முன்முயற்சியை செயல்படுத்தி வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

சத்தியமங்கலம் திருமூர்த்தி, கோவை செந்தில்குமார், திருச்சி ஹரி, திருப்பூர் தங்கவேல், ஆழியாறு ரவிச்சந்திரன், சேமனூர் பிரபு ராமகிருஷ்ணன், அமீரகம் மோகன் பிரபு, சென்னை செந்தில், கார்த்தி, சுந்தர், நற்றிணை செந்தில் மற்றும் மதன் ஆகியோர் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகி, 'ஆலம் விழுதுகள்' புத்துணர்வு முகாம்களை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.

"...காலை சுடச்சுட ஆவாரம்பூ தேனீர் வந்தது. தேனீருடன் சேர்த்து வையம்பட்டி அய்யாவின் சில பாடல்களை ருசித்துப் பருகினோம். அடுத்ததாக சுகமான ஓர் ஆற்றுக் குளியல். தண்ணீர் சற்று குறைவாகவே ஓடினாலும், சாயக்கழிவுகள், பாட்டில்கள், நெகிழி குப்பைகள் போன்ற எதுவுமே தீண்டாத ஒரு நீரை பார்த்ததே ஒரு பேரானந்த அனுபவம்தான்.
ஒரு கி.மீ. நடைக்கு பிறகு, சற்றே ஆழமான ஒரு பகுதியை கண்டடைந்தோம். இந்த ஆற்றில் ஒரு பெரிய வசதி என்னவென்றால், நாம் மெனக்கெட்டு கை, கால்களை தேய்த்துக் குளிக்க வேண்டியதில்லை. அசையாமல் "சும்மா" மல்லாக்கப்படுத்துக் கொண்டாலே போதும். நூற்றுக்கணக்கான மீன்கள் நமது உடலை மொய்க்கும் ஆனந்தமே தனி. நம் புற அழுக்குகளை நிமிடத்தில் சுத்தம் செய்துவிடும்.
சிறப்பு விருந்தினர்களின் உரைகளுக்குப் பின் சும்மா ஜம்மென்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஐம்பது பேர் கொண்ட குழு 'பேர்ட் வாச்சிங்' செய்ய புறப்பட்டது. காட்டிற்குள் நுழையும் முன், யாரும் பேசக்கூடாது. அமைதியாக குழுத் தலைவர் பின்னால் செல்ல வேண்டும். தேவைப்பட்டால் குழுத் தலைவர் குமார் மட்டும் பறவைகள் பற்றி விளக்குவார் என்று அறிவுறுத்தப்பட்டது. அதிகமான மனித கூட்டத்தை பார்ததாலோ என்னவோ, பறவைகள் அனைத்தும் அமைதியாக மரங்களில் ஒளிந்து "ஹியூமன் வாட்ச்” செய்ய ஆரம்பித்து விட்டது..."

ப்படியாக, புத்துணர்வு முகாமை விவரிக்கிறது 'ஆலம் விழுதுகள்' ஃபேஸ்புக் பக்கம்.

உருவானது எப்படி?

எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் குறித்து யுவர் ஸ்டோரி தமிழுக்கு விவரித்த 'தோழர் செ' என்று செல்லமாக அழைக்கப்படும் செந்தில்குமார், "எங்களை இணைத்தது ஃபேஸ்புக்தான். நம்மாழ்வாரின் நினைவுநாளில் நண்பர்களில் சிலர் ஒன்று கூடினோம். அப்போது, சத்தியமங்கலத்தில் இயற்கை விவசாயம் செய்துவரும் திருமூர்த்தியின் இடத்தில் ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்த முடிவு செய்தோம். ஐந்து நண்பர்களும் குடும்பத்துடன் அவரது இயற்கை விவசாயம் நடைபெறும் இடத்தில் ஒன்று கூடினோம். இரண்டு நாட்கள் தங்கினோம். புது அனுபவம் கிடைத்தது. அடுத்த முறை பெரிய அளவில் இதைச் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது.

அதன்பின் ஆழியாறில் இயற்கை விவசாயம் செய்து வரும் ரவிச்சந்திரனின் 12 ஏக்கர் நிலப் பரப்பில் ஆலம் விழுதுகள் முகாமை நடத்தினோம். அங்கு சுமார் 200 பேர் தங்கக் கூடிய வசதி உண்டு. இம்முறை எங்கள் நண்பர்கள் வட்டத்தைத் தாண்டிய பல குடும்பங்கள் எங்களுடன் இணைந்தனர். அந்த நிகழ்வில் முகிலன் அய்யா, பியூஷ் மனுஷ் முதலானோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்து பேசினர். மதுரை நாணல் நண்பர்களின் கலை நிகழ்ச்சியும், குழந்தைகளுக்கு கோவை ராமராஜன் நாடகக் குழுவின் நாடகப் பயிற்சியும் நடந்தன.

இந்த மூன்று நாள் முகாமில் ரூ.33,000 ஆயிரம் வசூலானது. ஆனால், செலவினமோ ரூ.38,000 ஆனது. எஞ்சிய தொகையை எங்கள் குழுவினர் பகிர்ந்து செலவிட்டோம்.

அடுத்த முறை தர்மபுரியில் உள்ள சூழலியல் செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷின் ஃவனப்பகுதியில் நடந்தது. அவரது முயற்சியில் மே மாதத்திலும் அங்கு பசுமை நிறைந்திருந்தது. சுமார் 200 பேர் பங்கேற்ற முகாமில் நல்ல தொகை வசூலானது. செலவினங்கள் போக மீதமிருந்த தொகையை முகாமுக்கு இடம் அளித்து உறுதுணைபுரிந்த பியுஷ் மனுஷிடமே அளித்துவிட்டோம்," என்றார் தோழர் செ.

ஆம், இயற்கைச் சூழ்ந்த பகுதியில் முகாம்களுக்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூ.3,000 வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு திரட்டப்படும் நிதியில் எஞ்சியிருக்கும் அனைத்துத் தொகையையுமே முகாமுக்கு இடவசதி அளித்தவருக்கே வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறர்கள், லாப நோக்கத்தைக் கருத்தில்கொள்ளாத 'ஆலம் விழுதுகள்' முகாம் ஏற்பாட்டாளர்கள்.

இதேபோல், விழுப்புரத்தில் சிருஷ்டி வில்லேஜ், திருவண்ணாமலையில் 'குக்கூ' அமைப்பின் இடம், கரூரில் நம்மாழ்வாரின் வானகம் முதலான சூழலியல் பகுதிகளிலும் இம்முகாம்களை நடத்தியுள்ளனர்.

'ஆலம் விழுதுகள்' புத்துணர்வு முகாமின் சிறப்பு அம்சங்களாக செந்தில்குமார் கூறியவை:

* சூழல் சார்ந்து இயங்கும் இடத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு குடும்பங்களாக ஒன்று கூடுதல் நடக்கும். ஒரு குடும்பத்துக்கு 2,000-ல் இருந்து ரூ.3000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். இப்படித் திரட்டப்படும் தொகையில்தான் அனைத்து ஏற்பாட்டுச் செலவுகளும் நடக்கும். முகாம் முடிவில், எஞ்சியிருக்கும் தொகையை எந்த இடத்தில் முகாம் நடந்ததோ, அதற்கு உரியவர்களிடம் அளித்துவிடப்படும்.

* இயற்கையோடு இயற்கையாகவே அன்றாட நாட்கள் நகரும். பல் துலக்குவது வேப்பங்குச்சியில்தான். ஓடை, கிணற்று நீரில்தான் குளியல் நடக்கும்.


* மூன்று வேளையும் ரசாயனக் கலப்பில்லாத இயற்கை உணவுகள் மட்டுமே வழங்கப்படும். கஞ்சி, கூழ் முதலான உணவு வகைகள் இடம்பெறும்.

* சுற்றுச்சூழல், அறிவியல், வாழ்வியல், உளவியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட கருத்தரங்குகள் பல்வேறு தலைப்புகளில் பெரியவர்களுக்காக நடைபெறும்.

* சிறுவர்களுக்கு காகித மடிப்புக் கலை, மண் பொம்மைகள் செய்தல், பாடல்கள் சொல்லித் தருதல், பறை உள்ளிட்ட இசைப் பயிற்சி அளித்தல், குழந்தைகளைக் கொண்டே நாடகங்களை அரங்கேற்றுதல் உள்ளிட்டவை நடைபெறும்.

* முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வர். அவர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் தொழில் அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வர்.

* பெரியவர்களுக்கு கல்வி முறை, சுவரில்லா கல்வி முறை என குழந்தை வளர்ப்பு சார்ந்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.

* பாரம்பரிய உணவுகள், இயற்கை உணவுகள், சமைக்காத உணவுகள் முதலானவை குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். அடுப்பில்லாத சமையல் என்ற முறை சொல்லித் தரப்படுகிறது. காய்கறிகளை வைத்து அடுப்பில்லாமல் சத்தான உணவு வகைகளைத் தயாரிப்பது குறித்து விரிவாகக் கற்றுத் தரப்படுகிறது.

* மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவதற்கு உரிய புத்துணர்வு செயல்பாடுகளுக்கு முக்கிய இடம் உண்டு.

திட்டமிடாததே எங்கள் திட்டம்!

தங்கள் முகாமில் என்னென்ன நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்பது திட்டமிடப்படாததுதான் தனிச் சிறப்பு என்று கூறும் செந்தில்குமார், 

"எங்கள் முகாமுக்கு வருபவர்களிடம் 'வெள்ளைக் காகிதம் போல் உள்ளே வாருங்கள்... உங்களுக்குத் தேவையானதை நிரப்பிச் செல்லுங்கள்' என்று சொல்வது வழக்கம். ஆம், எந்தத் திட்டமிடலும் இருக்காது. அப்போதைக்கு எந்த வசதிகள் இருக்கிறதோ, யாரெல்லாம் வரக்கூடுமோ அவர்களை அழைத்து முகாம்களை நடத்துவோம்.

'சூழலியல் சார்ந்த விழிப்புணர்வு, சூழலியல் சார்ந்த தொழில்களைச் செய்வது எப்படி?' என்று பியூஷ் மனுஷ் எடுத்துக் கூறியிருக்கிறார். திருச்செந்தூரைச் சேர்ந்த நண்பர் ராதாகிருஷ்ணன் பேக்கரியை சிறு தானியங்களில் எப்படி நடத்துவது? என்று சொல்லித் தந்திருக்கிறார். விழுப்புரம் அருகே சிறப்புக் குழ்ந்தைகளைப் பராமரித்து வரும் நண்பர் கார்த்தி, மனநலம் பாதித்த குழந்தைகளை அணுகுவது எப்படி என்று விவரித்திருக்கிறார். 'கதை இரவு' என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லதுரை கதை சொல்வார். இப்படி பெரியவர்களுக்காக பல்வேறு துறை சார்ந்த பலரும் வருகை தந்து எங்கள் முகாமில் பேசுவர்.

அதேபோல், குழந்தைகளுக்கென எடுத்துக்கொண்டால், தியாக சேகரின் காகித மடிப்புக் கலைப் பயிற்சி, வேலு சரவணனின் நாடகம், வையம்பட்டி முத்துசாமியின் பாடல்கள், திருக்குறள் தாத்தாவின் நிகழ்ச்சி, குமார் ஷா முதலானோரின் கதை சொல்லும் நிகழ்ச்சிகள் நடக்கும். எப்போதும் எல்லாருமே மிகவும் ஜாலியாக எங்கேஜிங்காக இருப்பதுதான் இந்த முகாமின் சிறப்பு. எல்லாமே சுதந்திரமாக நடக்கும்.

இதுவரை 10-க்கும் மேற்பட்ட முகாம் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். வெளி மாநிலங்களில் இருந்து சிலர் வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஃபேஸ்புக் மூலம்தான் ஒருங்கிணைப்புப் பணிகள் நடக்கும். இதில் பங்கேற்றவர்கள் தங்கள் அனுபவங்களை தங்கள் நண்பர்களுக்குப் பகிர்ந்து எங்கள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துகின்றனர். குடும்பத்துடன் வருபவர்களுக்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். 

வெவ்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் மூன்று நாட்கள் ஒன்றாக இருந்து வாழ்ந்து, முகாம் முடிந்த பிறகு பிரிவதற்கு மனமின்றி பிரியாவிடை கொடுக்கும் நெகிழ்ச்சியான அனுபவத்தையும் பெற்றிருக்கிறோம்.

சென்னையில் பெரிய நிறுவனம் ஒன்றில் மேலதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர் பகிர்ந்த அனுபவக் கருத்துதான் எங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன்.

"எனக்கு மனரீதியில் புத்துணர்வு கிடைப்பதற்காக வெளிநாடுகளுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை செலவு செய்து என் நிறுவனமே என்னை வெளிநாட்டுக்குச் சுற்றுலா அனுப்பும். ஆனால், இங்கே அப்படி பெரிய செலவுகள் ஏதுமில்லாமல் மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்வு கிடைக்கிறது. இதுபோன்ற அனுபவம் வேறெங்குமே பெறவில்லை."

இப்படி அவர் சொன்னதுதான் நாம் சரியான திசையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையைத் தந்தது. எங்கள் நண்பர்கள் குழு விடுமுறைக் காலத்தில் தாத்தா - பாட்டி வீட்டுக்குப் போய் வருவதுபோல் தொடங்கப்பட்ட 'ஆலம் விழுதுகள்' முகாம் திட்டம் இப்போது எங்களைப் போன்ற நூற்றுக்கணக்கானோருக்கும் இயற்கையோடு ஒன்றிய நாடோடி அனுபவத்தைத் தருவதும், அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார் தோழர் செ.

மேலதிக தகவலுக்கு > ஆலம் விழுதுகள் ஃபேஸ்புக் பக்கம்

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்