சைக்கிளில் ரோந்து செல்லும் போலீசார்: சென்னை நகரத்தை பாதுகாப்பாக ஆக்கும் தோழமை அணுகுமுறை! 

0

சென்னை காவல்துறையினர் மக்களுடன் நல்லுறவை வளர்த்திட, சைக்கிள் மூலம் பயணித்து அவர்களின் குறைகளை கேட்கத் தொடங்கியுள்ளனர். பழைய காலத்து முறையான, சைக்கிள் மூலம் ரோந்து பணிக்கு செல்லும் வழக்கத்தை மீண்டும் கொண்டுவந்துள்ளது சென்னை காவல்துறை. இதன் மூலம், சட்டத்தை பாதுகாப்பதோடு, மக்களின் உரிய பாதுகாவலானகவும் செயல்பட திட்டமிட்டுள்ளனர். 


சென்னை காவல்துறையினர் இரவு நேரங்களில் நகரம் முழுதும் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். கார், பைக் மூலம் குற்றம் நடந்த இடத்தை விரைவாக அடைய முடியும் என்றாலும், சைரன் பொறுத்தப்பட்ட பேட்ரோல் வண்டிகளை கண்டவுடன் திருடர்களும், குற்றம் புரிந்தவர்களும் ஓடிவிடுகின்றனர். சின்ன தெருக்களில் அவர்கள் ஓடும்போது பைக்குகளில் சென்று பிடிப்பது கடினமாக உள்ளது. 

அதனால் சைக்கிளில் செல்வது நடைமுறையில் உதவியாக இருக்கும், நகரத்தை பாதுகாப்பாகவும் வைத்திருக்கமுடியும் என்று நம்புகின்றனர். இதன் மூலம் போலிசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு நம்பிக்கையும் புரிதலும் ஏற்படுகிறது.

“இந்த முறை எங்களை மக்களிடம் நெருக்கமாக பழக வாய்ப்பளிக்கிறது,” என்று துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் கூறினார். 

கடந்த ஜூலை மாதம், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 250 காவல் நிலையத்துக்கு புதிய சைக்கிள்களும் 100 மோட்டார் வாகனத்தையும் அளித்துள்ளார். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரண்டு சைக்கிள்கள் உள்ளன. இதைக்கொண்டு வரும் காலத்தில் சென்னை நகரத்தில் சிறப்பான ரோந்து பணிகளை செய்யவுள்ளனர். 

கட்டுரை: Think Change India