இத்தாலி சென்று பாரம்பரியத்தை பறைசாற்றிய கொல்லிமலை பெண்கள்!

இரண்டு பழங்குடி பெண்கள் விவசாயம் மற்றும் பாரம்பரிய சிறுதானியத்தின் மீதுள்ள பற்றால், வெற்றிப் பாதையை அமைத்துக்கொண்ட கதை!

3

வெற்றிக் கதைகள் நிறைய படித்திருந்தாலும், கேட்டிருந்தாலும், கிராமத்திலிருந்து எழும் வெற்றிப் பயணத்திற்கு என்றுமே தனி சிறப்பு தான். அந்த வகையில் கொல்லிமலையிலிருந்து இத்தாலி சென்று நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றி உள்ளனர் பழங்குடி மக்களான மல்லிகா மற்றும் ஜெயலலிதா. இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய அவர்களிடம் தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய பிரத்யேக நேர்காணல் இதோ...

இத்தாலி பயணம்

விவசாயத்தை நம்பியே தங்களது வாழ்க்கையை நடத்தி வந்த மல்லிகா மற்றும் ஜெயலலிதா குடும்பத்தினருக்கு வருமானம் குறைவாகவே இருந்தது. எனினும் பாரம்பரிய தொழிலை விட்டுக் கொடுக்க என்றுமே நினைத்ததில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் தங்களை ஒரு குழு வாயிலாக இணைத்துக் கொண்டு தொழிலை மேலும் திறம்பட செய்யத் தொடங்கினர். அந்த விடாமுயற்சி, புதியதை கற்றுக் கொள்ளும் ஆர்வம், பிறருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி ஆகியவையே இவர்களின் இத்தாலி பயணத்திற்கு வழி வகுத்தது என்று கூறினால் மிகையல்ல.

இத்தாலி கருத்தரங்கில் மல்லிகா மற்றும் ஜெயலலிதா
இத்தாலி கருத்தரங்கில் மல்லிகா மற்றும் ஜெயலலிதா

இந்தியாவின் பிரதிநிதிகளாக இத்தாலியில் நடைப்பெற்ற பயோவர்சிட்டி சர்வதேச விவசாய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் நடத்திய 'உயிரியல் பெண்கள் கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்ற இந்த கொல்லி மலை விவசாயிகள், தங்களது மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அங்கு வெளிப்படுத்தினர். கேழ்வரகு கொண்டு முறுக்கு செய்து காண்பித்து அங்குள்ளவர்களை அசத்தினர்.

பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காமல்.....

இன்றுள்ளது போல், சிறுதானியத்துக்கு சில வருடங்களுக்கு முன் சந்தை வாய்ப்புகளோ, மதிப்போ இருக்கவில்லை. தாங்கள் விளைத்த தானியங்களை அவர்களின் தேவைகள் போக ஊருக்குள்ளே விற்று வந்தனர். பெரிதாக வாய்ப்புகள் இல்லாத சூழலில் பாரம்பரிய தானியங்களை பயிரிடுவது வெகுவாக குறைந்து போனது. இது தவிர அறுவடைக்கு பிறகு இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் செயல்முறை மிக கடினமானகவும் இருந்தது.

இத்தகைய சூழலிலும் இவற்றை விட்டுக்கொடுக்காமல் கேழ்வரகு, சாமை, நெல், திணை, குச்சிக்கிழங்கு, மிளகு, காபி இவற்றுடன் சோளம், அவரை, துவரை, அனாசிப்பழம், கொய்யா மற்று வாழை வகைகளையும் மல்லிகாவும், ஜெயலலிதாவும் பயிரிட்டனர்.  

 இந்த சமயத்தில்வழிகாட்டிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், தானியங்களை பதப்படுத்தும் முறை கடினமாக உள்ளதே இவை அழிந்து போவதற்கான பிரதான காரணம் என்று கண்டறிந்து, சிறிய அளவிலான இயந்திரங்களை இந்த பெண்களுக்கு வழங்கினர். பாரம்பரிய தானியத்தை பாதுகாக்க இவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க திட்டம் வகுத்தனர்.

சுய உதவி குழு அமைத்து...

"மூன்று மணிநேர வேலை, இயந்திரத்தின் உதவியால் அரை மணி நேரத்தில் சாத்தியமானது", இது எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியது, அவர்களின் வழிகாட்டுதலில் பாரம்பரிய சிறுதானியங்களை அதிகமாக பயிரிட ஆரம்பித்தோம்" என்கிறார் ஜெயலலிதா

தற்போது 109 குழுக்களும் 1500 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது கொல்லிமலை. மல்லிகாவும், ஜெயலலிதாவும் 13 உறுப்பினர்களை கொண்ட முல்லை மகளிர் உதவிக்குழுவை வழி நடத்துகின்றனர். இவர்கள் ஆறு வகையான தானியங்களை பயிரிடுகின்றனர்.

ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பயணம்

கடந்த பத்து வருடங்களாக விவசாயத்தை முழுமூச்சாக மேற்கொள்ளும் ஜெயலலிதாவிற்கு , 27 வயது தான் ஆகிறது. தனது நான்கு ஏக்கர் நிலத்தில் சிறு தானியங்களை பயிரிடுவதாக கூறுகிறார்.

பதினெட்டு வயதிலேயே திருமணம் முடித்து மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர், தான் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றதாக கூறுகிறார். "வெளி உலகமே அறிந்திராத எனக்கு இந்த திட்டத்தில் இணைந்த பின், மிகுந்த நம்பிக்கையும், முன்னேறவேண்டும் என்ற முனைப்பும் வந்தது. பயிற்சிக்காக தார்வாட், புது டில்லி, அவினாஷி, நாமக்கல் போன்ற இடங்களுக்கு சென்றது நல்ல அனுபவமாக இருந்தது" என்கிறார். இத்தாலி சென்றதை பற்றி கூறுகையில் அவரது முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது.

மல்லிகாவும் ஜெயலலிதாவும் தங்களின் சிறுதானிய பொருட்களுடன்
மல்லிகாவும் ஜெயலலிதாவும் தங்களின் சிறுதானிய பொருட்களுடன்
"ஆண்களை சார்ந்து இல்லாமல் பெண்கள் முன்னேற வேண்டும்." என்று ஆணித்தரமாக கூறுகிறார் ஜெயலலிதா.

சிறு தானியங்களில் இருந்து செய்யப்படும் களி,கஞ்சி குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. "பயிற்சியின் மூலமாக மதிப்பு கூட்டல் பொருட்களாக இதை மாற்றி சந்தை படுத்துகிறோம், இதற்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது." என்கிறார் இவர்.

மல்லிகாவின் வாழ்க்கை பயணம்

ஏழாவது வரை படித்திருக்கும் மல்லிகா கடந்த பத்து வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். தனது பத்தொன்பதாவது வயதிலேயே திருமணம் முடித்து மூன்று குழந்தைகளுக்கு தாயானார். தற்பொழுது 35 வயதாகும் இவர் பேசுகையில் மிகுந்த தன்னம்பிகையை பார்க்க முடிகிறது.

"பாரம்பரிய சிறுதானியங்களை பயிரிடுதல் வெகுவாக குறைந்த சூழலில், எம்.எஸ்.எஸ்.ஆர்.எஃப் வழிகாட்டுதலால், எங்களுக்கு தேவையான விதைகளை தெரிவு செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்" தரமான விதைகளை என்றுமே கைவிடக்கூடாது என்கிறார் மல்லிகா.

"திறமைகளை வளர்த்துக் கொண்டு, பெண்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ள வேண்டும்." என்கிறார் மல்லிகா.

ஆரோக்கியத்தை பறைசாற்றி மேலும் பல சந்தைகளில் இவர்களின் பொருட்களை கிடைக்க செய்வதே மல்லிகாவின் இலக்காக இருக்கிறது.

நம்முடன் உரையாற்றிய நேரத்தில் அவர்கள் மிக அதிகமாக உச்சரித்த வார்த்தைகள் "நமது பாரம்பரியத்தை விட்டு கொடுக்காமல், சிறுதானிய பயிர்களை மேலும் செம்மையாக பேண வேண்டும்" என்பதே. ஆரோக்கியத்தை இன்னும் பல பேர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற அவர்களது ஆவலை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. இதற்கு காரணமும் இருக்கத் தான் செய்கிறது. இவர்கள் கிராமங்களில், நம்மில் பெரும்பாலானோர் இன்று அவதிப்படும் "சர்க்கரை நோய்" என்ற வார்த்தைக்கே இடம் இல்லை என்பதுதான்.

இத்தாலியில் நடைப்பெற்ற பயோவர்சிட்டி சர்வதேச விவசாய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம் நடத்திய 'உயிரியல் பெண்கள் கருத்தரங்கில், இந்திய நாட்டின் சார்பாக சென்ற மல்லிகா, ஜெயலலிதா அங்கு வந்திருந்த மற்ற நாட்டு பிரதினிதிகளை சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியோடு பகிர்கின்றனர். மேலும் நமது பாரம்பரிய சிறுதானியங்களை பற்றி அனைவரும் அறிந்து கொள்வது அவசியம் என்று வலியுறுத்தும் இவர்கள் இத்தாலி வரை சென்றது மிகுந்த ஊக்கம் அளிப்பதாக கூறினர். முதல் முதலாக வெளிநாட்டு பயணம் நெகிழ்சியளிப்பது மட்டுமல்லாமல், உத்வேகத்தையும் அளித்துள்ளதாக கூறுகின்றனர். பொலிவியா, மாலி நாட்டு விவசாயிகளும் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில், மல்லிகா மற்றும் ஜெயலலிதா நமது பாரம்பரிய சிறுதானிய வகையான கேழ்வரகு மாவு கொண்டு முறுக்கு செய்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இத்தாலியில் இவர்கள் முறுக்கு செய்து காண்பித்த காணொளி இதோ உங்கள் பார்வைக்கு: http://livestream.com/accounts/13310590/events/4332926