தமிழ்நாட்டில் பனை மரம் ஏறுவோரின் எதிர்காலம் குறித்த ஒரு அலசல்!

0

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கனூர் கிராமத்தில் கிட்டத்தட்ட மாலை 6 மணி அளவில் ஒரு தடிமனான பெல்ட்டைக் கொண்டு தனது இடுப்பையும் பனை மரத்தையும் சேர்த்து கட்டித் தேவையான கருவிகளுடன் பனை மரத்தில் விரைவாக ஏறினார் 38 வயதான பாண்டியன் தேவசகாயம். அவர் தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தின் மீதேறி  பானையில் பனஞ்சாறு சேகரிக்கிறார். தாவரத்தின் சாறு உலர்ந்துபோவதைத் தடுக்க ஒரு நாளைக்கு மூன்று முறை முனையில் வெட்டி விடவேண்டும்.

பனஞ்சாறு புளித்துப்போய் கள்ளாக மாறிவிடுவதைத் தவிர்க்க சாறை சேகரிக்கும் பானையில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்க்கப்பட்டிருக்கும். அவர் வானகம் – நம்மாழ்வார் இகோலாஜிக்கல் ஃபவுண்டேஷனில் பயிற்சிக்கு சென்ற பிறகு ஆர்கானிக் விவசாயியாக மாறியது குறித்தும் பனை மரம் ஏறுபவராக மாறியது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

”பல தலைமுறைகளாக நாங்கள் பனைமரத்தின் மீது ஏறி வந்தாலும் இது கடினமான வேலை என்பதால் நான் இந்த பணியை மேற்கொள்ள என்னுடைய அப்பா விரும்பவில்லை. ஆனால் மரம் என்னை கவர்ந்தது,”

என்று VillageSquare.in-க்கு தேவசகாயம் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தின் பண்டாரவிளை பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஜெனித்தை இந்தக் கடினமான வேலை வெகுவாக கவர்ந்ததாகவும் ஆரோக்கியமாக இருக்க உதவுவதாகவும் தெரிவிக்கிறார். 

“பனை மரத்தில் ஏறுவதை என்னால் விடமுடியாது. இதனால் எனக்கு திருமணம் செய்துகொள்ள பெண் கிடைக்கவில்லை என்றாலும் எனக்குக் கவலை இல்லை. ஏன்னெனில் உடல் உழைப்பு சார்ந்த பணிகளை இன்னனும் மக்கள் தரக்குறைவாகவே பார்க்கின்றனர்,” என்று தெரிவித்தார்.

இது சமூக பாரபட்சம் அல்ல. மரம் ஏறுகையில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுவதும் காவலர்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதும் பனை மரம் ஏறுவோருக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இவர்களுக்கான வாய்ப்புகளும் குறைந்துள்ளது.

தமிழ்நாடு பனை பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின்படி தமிழ்நாட்டில் சுமார் 51 மில்லியன் பனை மரங்கள் உள்ளது. ஆனால் செங்கல் சூளை மற்றும் பிற துறைகளுக்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்திற்கு வெறும் 100 ரூபாய் என்கிற விலையிலேயே விற்கப்படுவதாக தேவசகாயம் தெரிவித்தார்.

எனினும் பனையில் இருந்து கிடைக்கும் பொருட்களை மீட்டெடுக்கவும், பசுமை போர்வையை பாதுகாவலராக இருந்து மீட்பவராக மாறியது, அதிகரிக்கும் மக்களின் முயற்சிகளை மேற்கொண்டு வருவதைப் பார்க்கையில் பனை மரம் ஏறுவோருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது.

பாதுகாவலராக இருந்து மீட்பவராக மாறியது

திருவண்ணாமலை மாவட்டத்தின் நயம்பாடி கிராமத்தில் இரண்டு பனந்தோப்பு உள்ளது. ஒவ்வொரு தோப்பிலும் 1,000-க்கும் அதிகமான மரங்கள் உள்ளன. 

“30 ஆண்டுகளுக்கு முன்னர் பனையைக் கொண்டு பல்வேறு பொருட்களை தயாரிப்பவர்கள் மரம் ஏறுவதற்காக கிராம மக்கள் இந்தப் பகுதியை குத்தகைக்கு விட்டனர்,”

என்று VillageSquare.in-க்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான ஜி கிருஷ்ணன் தெரிவித்தார்.  கிராம சபையின் அனுமதி இன்றி கிராம மக்கள் ஒரு மரத்தைகூட வெட்ட முடியாது. பனையில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படாத காரணத்தால் மக்கள் மெல்ல மெல்ல மரங்களை வெட்டி தங்களது விளைநிலங்களை விரிவுபடுத்தத் துவங்கினர். 

”முன்பு எங்கள் கிராமத்தை அலங்கரித்த பனந்தோப்புகள் இருந்ததற்காக அறிகுறியே இன்று இல்லாமல் போய்விட்டது. எங்கள் நிலங்களை சுற்றி காணப்படும் ஒரு சில மரங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன,” என்றார் கிருஷ்ணன்.

”பனை மரங்கள் எங்களது நிலத்தை சுற்றி வேலியாக இருந்தது. ஆனால் நான் எப்போதும் அதில் கவனம் செலுத்தியதில்லை,” என்றார் தேவசகாயம். வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்து கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது சிதம்பரத்தில் பனை மரம் சார்ந்த கருத்தரங்கு ஒன்றிற்குச் சென்றார்.

தேவசகாயம் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் தனது நிலத்தைச் சுற்றிலும் பனை மரங்களில் இருந்து பனஞ்சாறு போன்றவற்றை சேகரித்து தற்போது நீரா, பனை வெல்லம் மற்றும் பொம்மை, பென்சில் பாக்ஸ் உள்ளிட்ட மற்ற பொருட்களையும் தயாரிக்கிறார்.

”என்னைப் போன்ற விவசாயிகளுக்கு கடுமையான பருவநிலையிலும் நிலைத்திருக்கும் பனை மரங்கள் வருவாய்கான ஒரு மாற்றாக விளங்குகிறது,” என்று VillageSquare.in இடம் தெரிவித்தார்.

பனை மரத்தின் நன்மைகள்

பனையின் பொருட்களில் இருக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த மரங்களை பாதுகாக்க ஒரே வழி என்றார் திருவண்ணாமலை மாவட்டத்தின் நாகபாடி கிராமத்தைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலரான 43 வயது தண்டபாணி. உதாரணத்திற்கு வெள்ளை நிறத்தில் இருக்கும் சர்க்கரையைக் காட்டிலும் பதப்படுத்தப்படாத பனை வெல்லம் ரசாயனங்கள் அற்றது. இதன் கிளைசெமிக் குறியீட்டினால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த தேர்வாகும்.

”நீராவிலும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. நீரா மற்றும் பனை வெல்லத்தின் நன்மை குறித்து பள்ளியின் பாடதிட்டங்களில் இணைத்தல், ஆவணப்படங்கள் எடுத்தல், பிரபலங்கள் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்தல் ஆகிய செயல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்று தண்டபானி தெரிவித்தார்.

மரம் ஏறுபவர்களின் கோரிக்கைகள்

1991-ம் ஆண்டு முதல் கள் விற்பனைக்கு தமிழ்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால் பனை மரம் ஏறுவோர் பொருளாதார ரீதியில் நன்மை அடைவார்கள் என பரிந்துரைத்தார் தண்டபானி.

”சிகரெட், மது போன்ற பொருட்களை நாம் விற்பனை செய்யும்போது நமது உணவு கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்த கள்ளை விற்பனை செய்வதை அரசாங்கம் ஒழுங்குபடுத்தக்கூடாது?” என கேள்வியெழுப்பினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ’ரூரல் வொர்க்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி’ என்கிற அரசு சாரா நிறுவனத்தின் இயக்குனரான 63 வயது சத்தியா இதே கருத்தை ஆமோதித்தார். “மாநில அரசு தலைமையில் இயங்கும் கடைகளில் உள்ள மதுபானங்களில் 48.5 சதவீத ஆல்கஹால் உள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில் பனங்கள்ளில் வெறும் 4.1 சதவீதம் மட்டுமே ஆல்கஹால் உள்ளது,” என VillageSquare.in-க்கு தெரிவித்தார்.

மரம் ஏறுபவரான சத்தியா மாநிலத்தில் உள்ள சுமார் பத்து லட்சம் பனை மரத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தார். அவர் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூட்டிய பனைமரத் தொழிலாளர்கள் சங்க சந்திப்பில் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

மரங்கள் கண்மூடித்தனமாக வெட்டப்படுவதை தடை செய்யவேண்டும். நீர்நிலைகள், தரிசு நிலங்கள் போன்றவற்றை சுற்றிலும் மரங்கள் நடப்படவேண்டும். 60 வயதிற்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும். பனை மரம் ஏறுபவர்கள் விவசாயிகளாக அங்கீகரிக்கப்படவேண்டும்.

பனை மரத்திற்கான ஆதரவு

பனை மரம் ஏறுபவர்கள் மட்டுமல்லாது சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார ஆர்வலர்கள் இந்த மரத்தை பாதுகாக்கவும் இதற்கு ஆதரவாகவும் ஒன்றிணைந்துள்ளனர். ரகுநாத பூபதி என்கிற இளம் பொறியாளார் 10 மில்லியன் பனை மரங்களை நாடு முழுவதும் நடுவதற்காக ’பனைகள் கொடி’ என்கிற முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

"நாங்கள் சமூக முயற்சியாக மரங்களை நட தீர்மானித்தபோது கடினமான பருவநிலையிலும் நீடித்திருக்கும் என்பதாலும் மிகக்குறைவான பராமரிப்பே தேவைப்படும் என்பதாலும் பனை மரத்தை தேர்வு செய்தோம். மண் அரிப்பை தடுப்பதற்காக நீர்நிலைகளுக்கு அருகில் அவற்றை நடுகிறோம்,”

என்று பூபதி VillageSquare.in-க்கு தெரிவித்தார். ஓராண்டு காலத்தில் பனைகள் கொடி தன்னார்வலர்கள் தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்கள் முழுவதும் சில லட்சம் மரங்களை நட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அதிக மரங்களை நடுவதை ஊக்குவிக்கும் முயற்சிக்கு பனைமரம் சிறந்தது என்று ஒப்புக்கொண்டார் ஓய்வுபெற்ற தாவரவியல் பேராசிரியரான டி நரசிம்மன். “இந்த மரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை. நம் முன்னோர்கள் ஏரிகளில் நீர்வரத்தை கட்டுப்படுத்த பனை மரங்களை பயன்படுத்தினர். அத்துடன் காற்றிலிருந்து பாதுகாக்க நிலத்தைச் சுற்றி பனை மரம் நடப்பட்டது. மண் அரிப்பை தடுக்கவும் இவை பயன்படுத்தப்பட்டது. புயல் ஏற்பட்ட போதும் இந்த மரங்கள் நிலைத்திருந்தது,” என்று நரசிம்மன் தெரிவித்தார்.

ப்ளாஸ்டிக்கிற்கான மாற்று

பனை மரங்கள் அதிக பயனுள்ளதாகும்.

“பனை மரத்தின் வேர்கள், இலைகள் என ஒவ்வொரு பகுதியும் 80-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கவும் நூற்றுக்கணக்கான கைவினைப் பொருட்களை தயாரிக்கவும் உதவும். முறையாக திட்டமிட்டால் பனை பொருட்களை ப்ளாஸ்டிக்கிற்கான நிலையான மாற்றுப் பொருளாக பயன்படுத்தமுடியும்."

தொழில்முறையாக விவசாயியான 29 வயது சாமிநாதன் The Palm Climbers என்கிற முகநூல் பக்கத்தை ’செம்மை’ என்கிற அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் சென்னையில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று பனை பொருட்களை விற்பனை செய்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கையை ஊக்குவித்து வருகிறார்.

இவர்கள் வர்த்தக சந்தைகளிலும் பங்கேற்கின்றனர். மரத்தொட்டிகள், தொப்பிகள், பொம்மைகள், விசிடிங் கார்ட் என பல்வேறு பொருட்கள் இதில் அடங்கும். 

“ஒரு குழு தனிப்பட்ட தேவைக்கேற்ப பனைப் பொருட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. மற்ற குழுக்கள் எங்களது தளத்தைப் பயன்படுத்தி அவர்கள் தயாரிக்கும் பனை பொருட்களை விற்பனை செய்கிறது,” என்று சாமிநாதன் VillageSquare.in-க்கு தெரிவித்தார்.

’கருப்பட்டி காய்ச்சுவோம்’ என்பது இவர்களது மற்றொரு முயற்சியாகும். இதில் நகர்புற இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி நேரடியான விற்பனைத் தளமாக இது செயல்படுகிறது. ”கோவாவில் ப்ளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பிறகு மது பாட்டில்களை வைப்பதற்கு பனையினால் தயாரிக்கப்பட்ட பெட்டிகள் பயன்படுத்தப்படுவதால் கோவில்களில் ப்ளாஸ்டிக் கூடைகளுக்கு பதிலாக பனையினால் தயாரிக்கப்படும் கூடைகளை பயன்படுத்தலாம்,” என்றார்.

கிராமப்புற பொருளாதாரம்

“நம்முடைய அருகாமை மாநிலங்களான கேரளா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் கள் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படுகிறது. இது கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு பெரியளவில் உதவியுள்ளது. அருகாமையில் உள்ள கிராமத்தில் போலீஸ் கள் தயாரிக்க பனஞ்சாறு சேகரிக்கும் நபரிடம் இருந்து ஒரு வாரத்திற்கு 12,000 முதல் 15,000 ரூபாய் வரை வாங்குகின்றனர். தினமும் 8,000 முதல் 10,000 வரை கிடைப்பதால் இவர்கள் இந்தத் தொகையை போலீஸிடம் செலுத்துகின்றனர்,” என்றார் தண்டபானி.

”கம்போடியாவைப் போல நாம் பனையின் முழுமையான பலன்களைப் பெற்றுக்கொள்ள முற்படுவதில்லை. நான் கிராமப்புற பொருளாதாரத்தைக் காட்டிலும் தொழில்துறை பொருளாதாரத்தில் கவனம் செலுத்துகிறோம்,” என்றார் நரசிம்மன்.

கடலூரில் உள்ள தமிழ்நாடு மாநில பனை மற்றும் ஃபைபர் மார்கெட்டிங் கூட்டுறவைச் சேர்ந்த கணபதி பனைப் பொருட்களைத் தயாரிக்க 150 மாணவர்கள் அடங்கிய குழுவிற்கு பயிற்சி அளித்துள்ளதாக தெரிவித்தார்

இவர்கள் அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கான இருக்கைகள், தரையை சுத்தம் செய்யும் ப்ரஷ்கள், வாக்கிங் ஸ்டிக் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்தனர். ப்ளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததும் பயிற்சி நிறுத்தப்பட்டது. 20 ஊழியர்கள் இருந்த இடத்தில் தற்போது வெறும் மூன்று ஊழியர்கள் மட்டுமே செயல்படுகின்றனர்.

”கொதிக்கவைக்கப்பட்ட சாறுடன் ஆமணக்கு விதைகள் சேர்க்கப்படுவதைத் தவிர வேறு எந்த பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை. சமீபத்தில் ஆர்கானிக் உணவுப் பொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் எங்களால் பனை வெல்லத்தை ஒரு கிலோ 340 ரூபாய்க்கு விற்பனை செய்யமுடிகிறது,” என்று VillageSquare.in-க்கு கணபதி தெரிவித்தார்.

”அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் பனை வெல்லத்தை அறிமுகப்படுத்தினால் இந்தத் துறை புத்துயிர் பெறுவதோடு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும் வழங்கப்படும்,” என்று பனை மரம் ஏறுபவரான 51 வயது முருகேசன்  தெரிவித்தார்.

அதே போல் பொது விநியோக திட்டத்தில் நியாய விலைக் கடைகளில் வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லத்தை வழங்கினால் பனை மரம் ஏறுவோருக்கு உதவியாக இருப்பதுடன் கிராமப்புற பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என்று அவரது சக ஊழியரான சண்முகம் தெரிவித்தார்.

ஆங்கில கட்டுரையாளர் : கேத்தரீன் கிலான் | தமிழில் : ஸ்ரீவித்யா