தூரிகை பிடித்தோருக்கு வேலையை உத்திரவாதம் செய்யும் நிறுவனம்

ஓவியக் கலையை மேற் கொள்பவர்களுக்கு காலமெல்லாம் வேலை இருப்பதில்லை. அவர்களது வறுமையைப் போக்கியது டைமண்ட் பில்டிங் கேர் நிறுவனம்

0
பகவான் சிங் பகாயா
பகவான் சிங் பகாயா

ராஜஸ்தான் மாநிலம் ஜாகல்வாடைச் சேர்ந்தவர் பகவான் சிங் பாயா. பகவான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பயின்றார். அதன் பிறகு கையில் தூரிகையை எடுத்துக் கொண்டு, போஸ்டர் ஓவியம் வரையும் வேலையில் இறங்கி விட்டார். அந்த வேலை குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே நடைபெறக் கூடியது என்பதால் பல நேரம் வேலையில்லாமல் இருப்பார். அதனால் நகர்ப்புறங்களில் கட்டடக் கட்டுமான வேலைக்குச் செல்வதெனத் தீர்மானித்து, டைமண்ட் பில்டிங் கேர் (DBC) இல் வேலைக்குச் சேர்ந்தார். ”நான் DBCயில் சேர்ந்த பிறகு அவர்கள் எனக்கு சிமிண்ட் பூச்சு, நீர்க் கசிவு தடுப்பு போன்ற கட்டுமானம் தொடர்பான வேலைகளைக் கற்றுத் தந்தனர். பல புதிய புதிய இடங்களுக்குச் சென்று சந்தை மதிப்புள்ள நவீன நுட்பங்கள் பலவற்றைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் இங்கே கிடைத்தது. இப்போது வருடம் முழுதும் எனக்கு வேலை கிடைக்கிறது” ஓவியராக இருந்தபோது நிலையான வருமான வாய்ப்பு இல்லை. இப்போது பகவான் சிங் DBC யில் பன்முகத் திறன் கொண்ட பணியாளராக விளங்குகிறார். தன் பிள்ளைகளை வருங்காலத்தில் டாக்டராக ஆக்குவேன் என்று கனவு காணும் அளவிற்கு அவரது வருமானம் தற்போது அதிகரித்து விட்டது.

DBC இன் பின்னணி

இட்டிஷா சௌஹான் மற்றும் அர்ஷத் கான் ஆகிய இருவரால் உருவாக்கப்பட்டது DBC நிறுவனம். இட்டிஷா முன்னால் விமானப்படை அதிகாரி. பெங்களூர் இந்திய நிர்வாகவியலில் (IIM) பட்டம் பெற்றவர். இந்திய நிர்வாகவியலில் பட்டம் பெற்ற அர்ஷத் கட்டப் பாதுகாப்புத் தொழில் ஆழ்ந்த ஞானம் உடையவர்.

பகவான் சிங்குடன் இட்டிஷா மற்றுமொரு பூச்சாளர்
பகவான் சிங்குடன் இட்டிஷா மற்றுமொரு பூச்சாளர்

அர்ஷத்தும் இட்டிஷாவும் மும்பையில் உள்ள பிரபல கட்டுமான நிபுணரைச் சந்தித்ததும் DBC உதயமாகி விட்டது. மேற்படி கட்டுமானகர்த்தா எண்ணற்ற ஒப்பந்ததாரர் மற்றும் பொருட்கள் வழங்குனர்களுடன் போராடிக் கொண்டிருந்தார். தங்கள் வேலையை முடித்துத் தரமுடியாமல் கண்காணிப்பாளர்களும், நீரிணைப்புப் பணியாளர்களும் திக்குமுக்காடிக் கொண்டிருக்க கட்டடதாரரின் அலுவலகமே குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. கட்டடப் பாதுகாப்பு அளிப்பவருக்கு, இடையில்லாத சேவை காத்திருப்பதைப் புரிந்து கொண்டனர் இட்டிஷாவும், அர்ஷத்தும்.

இன்று கட்டடம் என்றாலே அது இன்று கட்டுபவருக்கு அப்பால் மூன்றாம் நிலை முகவர் மற்றும் பணியாளரின் வேலை என்றாகி விட்ட சூழல். தங்களது சொந்த அனுபவங்களுக்கும் அப்பால் பலவிதமான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதால், இந்தச் சூழலை மனதிற்கொண்டு DBC தனக்கான சொந்த தரஉழைப்பு மற்றும் வழங்கல் (apply and supply) சாத்தியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினர். அதிக எண்ணிக்கையிலான பணியார்களையும், கட்டுமானச் சேவைச் சாதனங்களையும் DBC எனும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதென முடிவு செய்தனர்.

கட்டுப்பாடுடைய குழுவிற்கான தேவை கட்டுமானத் தொழிலில் மிகப்பெரும் அளவில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. இந்தத் தேவையையும், தங்கள் திறன்மிகு உழைப்பாளர்கள் எப்போதும் மனநிறைவுடனும் தங்களிடம் நிலையாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர் அர்ஷத்தும், இட்டிஷாவும். ஒரு தரமான உழைப்பு மேலாண்மை முறையை உருவாக்கும் புரிந்துணர்விற்காகவும், தம்மை இணக்கமாக்கிக் கொள்ளவும் DBC நிறுவனர்கள் இருவரும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நடத்திக் கொண்டே இருந்தனர். அதன் மூலமாக அவர்கள் தரப்பு நியாயங்களைப் புரிந்து கொண்டனர்.

உழைப்பாளர்களுக்கு உகந்த தொழில் முன்மாதிரி

ஓவியர்கள் மீது கூர்ந்த கவனம் செலுத்தினார் இட்டிஷா. ”ஓவியத் தொழிலானது குறிப்பிட்ட பருவத்திற்கு மட்டுமே தேவைப்படுகிற ஒன்றாக இருப்பதால் அவர்களுக்கு வேலையும் 70% மட்டுமே கிடைக்கிறது” என்ற இட்டிஷா மற்றொரு முக்கியமான அம்சத்தையும் சுட்டிக் காட்டினார். “கட்டடத் தொழிலும், உள் கட்டமைப்புத் தொழிலும் இந்தியாவில் இரண்டாவது பெரிய சந்தையாகத் திகழ்கிறது. திறன் உழைப்பாளர்கள் இல்லாமல் இது இயங்க முடியாது. அவர்களது பணிச்சூழலில் பலவிதமான நெருக்கடிகளைச் சந்திப்பதால் கொஞ்சங்கொஞ்சமாக இத் தொழிலில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்கள். அப்படியே வேறு தொழிலை நோக்கிச் சென்று விடுகிறார்கள்.

கட்டடப் பாதுகாப்புக் கூறுகளான நீர்கசிவுத் தடுப்பு, வெப்பத் தடுப்பு, தூய்மைச் சேவை, கட்டடத் தோட்டம், பூச்சித் தடுப்பு, வண்ணப் பூச்சு, மரத்தளம் அமைப்பு, மின் பணியாளர், குழாய் பொருத்துதல், மரநுட்ப வேலைகள் ஆகியவற்றிற்காக ஓவியர்களையும் வண்ணப் பூச்சாளர்களையும் மட்டுமே தேர்வு செய்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது DBC. அதன் விளைவாக ஓவியர்களின் பணித் திறன் அதிகரித்துள்ளது. ஓவியர்கள் தூரிகைப் பயன்பாட்டில் தேர்ந்தவர்கள் என்பதால் பிரஷ்ஷைக் கையாளும் வேலையில் முதன்மையாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டுமானத் துறையில் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்புக் கிடைக்கிறது என்பது முதற் பலன். இட்டிஷா கூறுகிறார் “அதன் மூலமாக அவர்களது சமூக அந்தஸ்து உயர்கிறது. அவர்களை சீருடைப் பணியாளர்களாக நடத்துவதால் புதிய திறப்பு வெளி உருவாகிறது. பல புதிய இடங்களுக்கு வேலைக்குச் செல்ல முடிகிறது”.

தீவிர பரிட்சையின் அடிப்படையில் தான் அவர்கள் வேலைக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். முதலாவதாக சேவையாளர் DBC ஆல் முழுமையாக நேர்காணலுக்கு உள்ளாகிறார். அதில் அவர் பணிக் குழுவுடன் இணக்கமாக இருப்பாரா.. அவரது அணுகுமுறை எப்படிப்பட்டது போன்ற அனைத்தும் ஆராயப்படுகிறது. இரண்டாவதாக அவரது சொந்த பின்னணி ஆராயப்படுகிறது. கட்டங்கட்டமாக அடையாள அட்டை, முகவரி, குற்றப் பின்னணி, காவல்துறை ஆய்வு உட்பட அனைத்தும் பரிசோதிக்கப்படுகிறது. இவை அனைத்திலும் தெளிவு பெற்ற பிறகு DBC அவருக்கு அளிக்கப்படும் முதல் ஒன்றிரண்டு வேலைகள் தீவிரக் கண்காணிப்பிற்கு உள்ளாகும். வாடிக்கையாளர் அளிக்கும் பின்னூட்டமும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். இந்த சம்பிரதாயங்களில் நிறைவு கிடைத்த பிறகு தான் பணியாளருக்கு வேலை உறுதிப்படுத்தப்படும்.

உள்ளடக்கக் கொத்து

ஓவியப் பணியாளர்கள் DBC யில் தான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு விருப்பமான பிற கம்பெனிகள், வழங்குனர்கள் யாருடனும் பணியாற்றக்கூடிய சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இட்டிஷா கூறுகிறார் ”வெளியுலகில் ஓவியர்களுக்கான தேவை ஏற்படும் பருவங்களில் அவர்கள் தங்களது வழக்கமான வேலைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் மழைக் காலங்களிலும் இங்கு அவர்களுக்கு வேலை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் மழைக்காலங்களில் நீர்க்கசிவு ஏற்படுவதால் மிகவும் வேண்டப்படுகிறார்கள். அவர்கள் முழுத்திறனும் பெற்றவர்களாக இருந்தால் 100% வேலை வாய்ப்பு வழங்கப்பட்டும். ஏனென்றால் நாங்கள் விரிந்த அளவில் சேவை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

தங்கள் இலக்கை நோக்கி DBC வெற்றிநடை போடுவதைக் காண முடிகிறது. பகவான் சிங் DBC யில் ஐந்தாண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கூறுகிறார் “எங்களுக்காக அவர்கள் வேலையை எடுக்கிறார்கள். புதிய புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுக்கின்றனர். அவர்களுடன் ஐந்தாண்டுகளாகப் பணியாற்றுகிறேன். தொடர்ந்து அவர்களுடன் தான் இருப்பேன்” தற்போது DBC 277 திறப் பணியார்களுடன் வளர்ந்து, கட்டடத் தொழில் தொடர்பான அனைத்துத் தரமான சேவைகளையும் வழங்கிக் வருகிறது.