சிறு தொழில்முனைவோர் பலனடைய முகநூல் பக்கத்தில் அசத்தும் ‘வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்’

8

முகநூல் பக்கம் ஒன்றை தொடங்கினால் அதில் லைக்குகளை பெறுவது மிக சிரமமான காரியம் என்று நம்மில் பலருக்கு தெரியும். ஆனால்  ’சிறு தொழில்முனைவோர்’ என்ற ஒரு முகநூல் பக்கம் உள்ளது. அதனுள் சென்று பார்த்தால் அதில் சுமார்  2.87 லட்சம் அங்கத்தனர்கள் உள்ளனர். இந்த பக்கத்தில் உள்ளவர்கள் அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்த சிறு தொழில் புரியும் தொழில்முனைவோர்கள். பலவகைகளில், பல துறைகளில் தொழில் புரிவோர் இதில் நிமிடத்துக்கு நிமிடம் தங்கள் தேவைகளையும், விற்பனை சம்பந்த பதிவுகளையும் பதிவிடுவதை பார்க்கும் போது, அவர்களுடைய ஆர்வமும், இந்த பக்கத்தால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய பயன்களும் தெள்ளத்தெளிவாக நமக்கு தெரிகிறது. சரி இத்தகைய பெரிய குழுவை ஒரு முகநூல் பக்கத்தில் ஒருங்கிணைத்ததன் பின்னணியில் இருப்பவர் யார்? இந்த பக்கத்தின் அட்மின் யார்? என்று ஆர்வத்துடன் தொடர்பு கொண்டோம்....

தொழில்முனைவோர்களுக்கு ஆலோசனை மற்றும் உதவிகள் புரியும் ‘வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்’ என்பவரே ‘சிறு தொழில்முனைவோர்’ முகநூல் பக்கத்தை தொடங்கியவர். இவரைப்பற்றியும், தொழில்முனைவோர்களை இணைக்க இவர் எடுத்த முயற்சிகள் என்ன? அதன் பின்னணி என்ன? என்று தமிழ் யுவர்ஸ்டோரி’ உடன் ஸ்ரீனிவாசன் பகிர்ந்தவை இதோ...

வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் பின்னணி

ஸ்ரீனிவாசன், கும்பகோணத்தில் பிறந்து பி.காம் மற்றும் சிஏ முடித்துவிட்டு பட்டய கணக்காளராக பணியாற்றியவர். சுமார் 15 வருடம் பொதுத்துறை வங்கியில் பணி அனுபவம் பெற்ற ஸ்ரீனிவாசன், பின்னர் 20 ஆண்டுகள் முதலீட்டு ஆலோசகராக, கன்சல்டன்சி அடிப்படையில் இருந்து வந்தார். எப்பொழுதும் தொழில்முனைவில் ஈடுபாடு உள்ள ஸ்ரீனிவாசன், அக்கவுண்ட்ஸ், மேலாண்மை மற்றும் தொழில்முனைவு சம்பந்தமான வகுப்புகளை தற்போது எடுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் பல கல்லூரிகளுக்குச் சென்று பாடங்கள் நடத்தும் ஸ்ரீனிவாசனுக்கு 60 வயது ஆகிறது. 

சுய முன்னேற்ற வகுப்புகளையும் எடுக்கும் ஸ்ரீனிவாசன், “வெற்றி விடியல்” என்னும் தலைப்பில் பல இடங்களிலும், கருத்தரங்குகளிலும் உரையாற்றி வருகிறார். அதையே அவருடைய பெயரில் அடைமொழியாக சேர்த்து, ‘வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்’ என்று பலராலும் அழைக்கப்படுகிறார். 

பட்டய கணக்காளருக்கு தொழில்முனைவில் ஏற்பட்ட ஆர்வம்

பட்டய கணக்காளராக இருந்த ஸ்ரீனிவாசன், தொழில் புரிபவர்களின் கணக்கு வழக்குகளை சரி பார்க்கும் பணிகள் செய்த அனுபவம் உள்ளவர். அப்போது அவர் தொழில்முனைவோர்களிடம் கண்ட சில குறைகளை பற்றி கூறுகையில்,

“தொழில் முனைவோர் பலரும் தம்முடைய கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்வதில்லை. அதனால் நஷ்டம் அடைவதை அன்றாடம் அறிந்து கொள்வதில்லை. வருமுன் காப்பதில்லை. அதனால் அவர்களுக்கு உதவும் வகையில் ஆலோசனைகள் அளிக்க முடிவு செய்தேன்,” என்கிறார்.

மேலும் கணக்கு வழக்குகள் தவிர சந்தைக்கு என்ன தேவை என்பதை பற்றியும் ஆராய ஆரம்பித்தார் அவர். அதில் பல உண்மைகளை கண்டறிந்து, தன் அனுபவத்தை தொழில் புரிபவர்களுடன் பகிர்ந்து கொள்ள தகுந்த தளத்தை ஏற்படுத்த முடிவெடுத்தார் ஸ்ரீனிவாசன்.

”சந்தைக்கு என்ன தேவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிபவர்களே தொழிலில் வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்கள் பின்தங்கி விடுகிறார்கள். இதுவே தொழில் வித்தை.” 

முகநூல் பக்கம் தொடங்கியது எப்படி?

பெரும்பாலும் வியாபாரத்தில் வெற்றி அடைந்த தொழில் முனைவோர்களை மட்டுமே எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறார்கள். ஆனால் நஷ்டம் அடைந்தவர்கள் பற்றி பலருக்கு தெரிவதில்லை என்று கூறும் ஸ்ரீனிவாசன், நஷ்டம் அடைந்த பலரை சந்தித்ததாக கூறினார். ஏனென்றால் அவர்கள் விட்ட விஷயங்கள்தான் மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் என்று உணர்ந்தேன்.  அப்போது உதித்த எண்ணம் தான் இந்த முகநூல் பக்கம் என்கிறார்.  

”சிறுதொழில் முனைவோர் என்னும் ஃபேஸ்புக் குழுவை 6 வருடங்களுக்கு முன் தொடங்கினேன். என்னுடைய நண்பர்கள் சுமார் 50 பேர் சேர்ந்தனர். திட்ட அறிக்கை தயார் செய்ய, வங்கிக் கடன் வாங்கும் வழிகளைத் தெரிந்து கொள்ள என பல வகையான நிபுணர்கள் இதில் இருக்கிறார்கள். அங்கத்தினர்களுக்கு அவர்கள் உதவுகிறார்கள். இந்த நிபுணர்கள் முழு நேர ஆலோசகர்கள்,” என்று விவரித்தார். 

2012 இல் கொஞ்சம் வேகம் கண்ட பக்கம், 2014 ஜூலையில் 1 லட்சம் அங்கத்திரை அடைந்தது மைக்கல் என்கிறார். இன்றைய தினத்தில் சுமார் 2,87,000 பேர் அங்கத்தினர்களாக இருக்கும் இந்த பக்கத்தில், நாள் ஒன்றுக்கு 500 பேர் சேர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கித்தனர்கள் அதிகம் உள்ளதால் சுமார் 12 அட்மின்களின் ஒத்துழைப்புடன் ஸ்ரீனிவாசன் ‘சிறு தொழில்முனைவோர்’ பக்கத்தை நடத்தி வருகிறார்.

தனது முகநூல் பக்கத்தின் வெற்றிக்கு அவரது நண்பர்களே காரணம் என்று தன்னடக்கத்துடன் கூறும் ஸ்ரீனிவாசன், இதில் உள்ள மற்ற அட்மின்களும் தங்களது நேரத்தை ஒதுக்கி, ஆலோசனைகளையும், யுக்திகளையும் அளித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்கிறார்.

”இதில் விளம்பரம் செய்பவர்களுக்கு விற்பனை வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் தொடர்ந்து தினமும் விளம்பரங்களைப் பதிகிறார்கள். அதனால் மேலும் நபர்கள் சேர்க்கிறார்கள்.”


ஃபேஸ்புக் பக்கத்தை தவிர, பல இடங்களில் இந்த கூட்டங்களை நடத்துகின்றனர். சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், கரூர் போன்ற இடங்களில், அங்குள்ள தொழில்முனைவோர்கள் கூடி கூட்டங்களை நடத்தி ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்கின்றனர். 

அடுத்த கட்டம்

இதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கிய ஸ்ரீனிவாசன், ’FB2B’ என்னும் ஒரு வலைத்தளத்தை எல்லாருடன் இணைந்து தொடங்கி இருக்கிறார். அதில் வகைப் படுத்தப்பட்ட விளம்பரங்களைச் (classified advertisement) சேர்க்கத் தொடங்கி உள்ளார்கள். ஃபேஸ்புக்கில் பதிவிடப்படும் விளம்பரங்கள் இலவசமாக போடப்படுகிறது அதைபோலவே தளத்திலும் இலவசம் என்றார். கட்டணம் செலுத்தும் விளம்பரங்கள் பின்னர் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

”சிறுதொழில் முனைவோர்தான் பின்னாளில் பெருந்தொழிலுக்கு முன்னேறுகிறார்கள். டாட்டா பிர்லா போன்றவர்கள் கூட ஒரு சிறு புள்ளியில்தான் தொடங்கினார்கள்...”

வியாபார வித்தையும் யுக்தியும் இரு நிலைகளிலும் ஒன்றேதான் என்று சொல்லும் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன், அளவுகள்தான் வேறு வேறு. யானையாலும் எலியானாலும் காது காதுதான் ! என்கிறார் அழுத்தமாக. 

தமிழ்நாட்டில் தொழில்முனைவோர் வளர்ச்சி

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில்முனைவோர் கூடி வருகிறார்கள். உலக அளவில் பொருளாதார மந்த நிலையும் இங்கே மின்சாரப் பற்றாக்குறையும் இருந்த போது ஈடுபாடு குறைவாக இருந்தது. ஆனால் இவையெல்லாம் மெல்ல மெல்ல தீர்ந்து வருகிறது.

”நிறுவனம் நிறுவுவது, முதலீடு, உரிமம் பெறுவது, போன்ற விஷயங்கள் இங்கே இலகுவாகி விட்டன. ஆனால் முதலீட்டிற்கான வங்கிக் கடன் பெறுவது மட்டும் இன்னமும் சிக்கலாகவே இருக்கிறது,” என்று தன் அனுபவத்தை பகிர்கிறார். 

சிறு தொழில்முனைவோர்கள் கடன் தேவைப்படும் போதுதான் வங்கியை அணுகுகிறார்கள். கணக்கு வழக்கும் சரியாக வைத்திருப்பதில்லை. அதனால் அவர்கள் கடந்த காலத்தில் செய்த வியாபாரத்திற்கான தரமான ஆவணங்கள் இருப்பதில்லை. வங்கி அதிகாரிக்கு அதனால் நம்பிக்கை உருவாவதில்லை. புதிய தொழில் முனைவோராக இருந்தால் இன்னமும் சிக்கல் உண்டு. வங்கி அதிகாரிக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல் பட வேண்டும். இதைத்தான் நாங்கள் அறிவுரையாக கூறி வருகிறோம் என்றார். 

கடைசியாக வெற்றிக்கான மந்திரம் என நீங்கள் எதை கூறுவீர்? என்று ஸ்ரீனிவாசனிடம் கேட்டால், 

”ரொம்ப சிம்பிள். சந்தையின் தேவையில் எதை நம்மால் தரமாக உருவாக்க முடியும் என்று பாருங்கள். அதைத் தயாரிப்பதில் நம்முடைய முத்திரையை எப்படிக் கொண்டு வருவது என்பதில் கவனம் செலுத்துங்கள். ஒரு திரைப்படப் பாடலின் இரண்டு வரிகளைக் குறிப்பிடுகிறேன். ’குண்டு மல்லி ரெண்டு ரூபாய், உன் கூந்தல் தொட்டு உதிரும் பூ கோடி ரூபாய்’...” என்றார். 

அப்படி மூலப் பொருள்கள் நம் கைக்கு வந்து விற்பனைப் பொருள்களாக மாறும் போது அதில் நம்முடைய ’ஏதோ ஒன்று’ கூடியிருக்க வேண்டும். அது ஒரு பெட்டிக் கடைக்காரின் புன்சிரிப்பாகக் கூட இருக்கலாம். இரண்டு கடைகள் அருகருகே இருந்தாலும் அதில் ஒருவர் ஒரு தோழமையோடு பழகும் போது அவரிடம்தானே நாம் செல்கிறோம். அந்த “ஏதோ ஒன்று” என்பது பெரும்பாலும் ரொம்ப சிம்பிள் விஷயமாக இருக்கும் என்று மிக அழகாக விவரித்து விடை பெற்றார். 

சிறு தொழில்முனைவோர் முகநூல் பக்கம்