திடீரென வந்த அறிவிப்பு- ’அழியா மை’ தயாரிப்பை இன்று முதல் தொடங்கிய நிறுவனம்!  

0

வங்கிகளில் தங்களின் பழைய ரூபாய் நோட்டை வாங்க வருவோரின் விரலில் தேர்தலின் போது வைக்கப்படுவது போன்ற அழியா மை வைக்கப்படும் என்று இந்திய அரசு நேற்று அறிவித்தது. ஒருவரே மீண்டும் மீண்டும் வந்து பணத்தை மாற்றிக்கொள்வதை தடுக்கவும், பிறரது கறுப்புப்பணத்தை மாற்ற முயற்சிப்போரையும் தடுக்கவே இந்த புதிய நடவடிக்கை என்றும் அறிவித்துள்ளனர் அதிகாரிகள். இந்த அழியா மை பொதுவாக தேர்தல் சமயத்தில் வாக்களிப்போரின் இடது ஆள்காட்டி விரலில் வைப்பது வழக்கம், அதேபோன்று தற்போது வங்கியில் பணம் மாற்றுவோருக்கு மை வைக்கத் தொடங்கியுள்ளனர் அதிகாரிகள்.

மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் என்ற இந்திய நிறுவனம் மட்டுமே இந்த அழியா மையை தயாரித்து வருகின்றனர். ஆனால் அவர்களிடம் போதிய அளவில் இருப்பு இல்லை என்பது தகவல். அதனால் இன்று முதல் அவர்கள் மை தயாரிப்பை தொடங்க உள்ளனர். 

சுதந்திரத்துக்கு பிறகு முதன்முறையாக வங்கிகள் இந்த அழிக்கமுடியாத மையை மக்களின் விரல்களில் தங்களின் ரூபாய் நோட்டை மாற்ற வரும்போது வைக்க உள்ளனர். ஒரு நாளைக்கு ஒருவர் ரூ.4,500 மட்டுமே வங்கிகளில் பழைய நோட்டுக்கு புதிய நோட்டுகள் மாற்றிக்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

கர்நாடகா அரசின் கட்டுபாட்டில் உள்ள மைசூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த அழியா மையை இந்தியாவில் தயாரிக்கிறது. மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் என்ற அந்நிறுவனத்தின் பொது மேலாளர் ஹர குமார் கூறுகையில்,

”வங்கிகள் இந்த மையை பயன்படுத்துவது இதுவே முதன்முறை. எங்களிடம் மை கேட்டு பல ஆர்டர்கள் குவிந்துள்ளன, ஆனால் அதற்கு போதிய இருப்பு எங்களிடம் இல்லை. இது தேர்தல் சமயம் இல்லாததால் தற்போது அது தயாராக இல்லை. ஆனால் இன்று முதல் இன்க் தயாரிப்பை தொடங்குகிறோம், சில மணி நேரங்களில் அதை கேட்டவர்களுக்கு அனுப்பிவைப்போம்,” என்றார். 

ஒரு முறை வாக்களித்துவிட்டு மீண்டும் வாக்களிப்பதை தடுப்பதற்காக இந்த அழியா மை பயன்படுத்தப்படுகிறது. அதே வகையில் ஒரு முறை வங்கியில் பணம் மாற்றிவிட்டு, வேறு ஒரு  ஐடி கொண்டு மற்றொரு வங்கியில் பணம் மாற்றுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை. இந்த மையை அவ்வளவு சுலபமாக அழித்துவிட முடியாது. நகம் மற்றும் விரல் தோலில் படும் படி இடப்படும் இந்த மை அழிய பல வாரங்கள் ஆகும். 

5 எம்எல் அளவிலான குப்பிகளில் அடைக்கப்படும் இந்த மை, 500 பேருக்கு வைக்கமுடியும் என்றார் குமார். இதன் விலை தயாரிக்கப்படும் அளவை பொறுத்தது என்றார் மேலும். எதிர்பார்க்காது வந்துள்ள இந்த அறிவிப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

வங்கிகளில் பணிபுரியும் அதிகாரிகள் ஏற்கனவே கூடுதல் வேலை காரணமாக நேரம் காலமின்றி உழைத்து வருகின்றனர். இனி வருவோருக்கு அழியா மையும் கையில் வைத்து பணத்தை சரிப்பார்த்து தருவது, அவர்களின் வேலை பளுவை கூட்டும் என்பது உண்மை. இருப்பினும் ஒரு புதிய திட்டத்துக்காக இதுபோன்ற பணிகள் செய்வதை கடமையாக செய்து வருவதாக வங்கி ஊழியர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். 

கட்டுரை: யுவர்ஸ்டோரி குழு