எங்கு பிறந்தோம் என்பதல்ல, எதைச் சாதிக்கிறோம் என்பதே முக்கியம்!

4
என்னைப் பற்றி என் அன்னை பெருமிதம் கொள்கிறார். அவருக்கு இந்த சமூகம் சொன்னதெல்லாம் நீ ஒரு மகளைப் பெற்றதற்குப் பதிலாக மகனைப் பெற்றிருந்தால் கடைசிக் காலத்தில் உன்னைக் காப்பாற்றுவான் என்பது தான். ஆனால் இன்று என் தாய் என் மகள் எனக்கு மகனாகவே இருக்கிறாள் என்று பெருமிதம் கொள்கிறார்.

பிரியங்கா பாட்டீல் வயது 16. புனே நகரத்தில் மிகக் குறைவான வருமானம் ஈட்டும் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாணவி, எபிபானி என்ற ஆங்கில வழிப் பள்ளியில் பயின்று வருகிறாள். வரும் கோடையில் யுனைட்டெட் வேர்ல்ட் காலேஜில் இரண்டாண்டுகள் சமூகக் கல்வி பயில்வதற்காக இத்தாலிக்குச் செல்கிறாள். "அங்கு நான் வரலாறு, தத்துவம், உயர் தர ஆங்கிலம், உயிரியல், கணிதம் மற்றும் இத்தாலியன் ஆகிய துறைகளைக் கற்றுக் கொள்வது என்று திட்டமிட்டுள்ளேன்’’ என்கிறாள் பிரியங்கா.

வாழ்க்கை அவளுக்கு எத்தனையோ தடைக் கற்களை அவளது பயணப் பாதையில் போட்டுக் கொண்டே இருந்தது. அவற்றைக் கண்டு அஞ்சிப் பின் வாங்குபவளா பிரியங்கா… ஒரு போதும் இல்லை. அவளது அப்பா சிறையில், அம்மாவுடன் தனியாக வசித்து வருகிறாள். குறைவான வருமானம் உடைய பின்புலத்தில் ஒற்றைத் தாயுடன் வாழ்வது மிகவும் கடுமையானதாகும்.

எந்தச் சூழ்நிலையையும் எப்படி எதிர் கொள்வது என்று என் தாய் கற்றுத் தந்ததை கவனமாக உள்வாங்கிக் கொண்டேன். நான் பிறந்ததிலிருந்தே அப்பா என்னுடன் இருந்ததில்லை. 

குடும்பத்திற்குத் தலைமை ஏற்க வேண்டிய ஆண் உடன் இல்லையே என்பதற்காக ஒருபோதும் அம்மா வருத்தப்பட்டதே இல்லை. எனக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து கொண்டிருக்கிறாள். அவளை இடையூறு செய்த ஆண்களையும் தனியாக எதிர் கொண்டாள். யாருடைய தயவும் இல்லாமல் சொந்தக் காலில் நின்றாள். அனைத்துத் துயரங்களையும் கடந்து இந்த சமூகத்தின் முன் எப்படித் துணிந்து நிற்பது என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாள்.

மாயா – பிரியங்கா எனும் இரண்டு புள்ளிகளின் இணைப்பு

Teach for India மாணவர்களுக்கும் பிராட்வே கலைஞர்களுக்கும் இடையிலான பங்குதாரராக விளங்கியது மாயா. 2013 இல் Teach for India அமைப்பு புனிதக் கல்வியின் தேவை குறித்து ஆழ்ந்த கவனம் செலுத்திய போதுதான் உருவாக்கப்பட்டது மாயா. பிராட்வே கலைஞர்கள் நெறியாளுகை செய்த இளவரசி மாயா பற்றிய கதையின் மூலப் பிரதி இசையால் ஆனது. தனது சாம்ராஜ்ஜியத்திற்கு மீண்டும் ஒளியைக் கொண்டு வருவதற்கான பயணத்தை மேற் கொள்கிறாள் மாயா எனும் இளவரசி. மாயாவும் அவளது தோழியான தென்னிந்திய நாக தேவதை குட்டியும், மயில் வாகனத்தில் ஏறி பயணம் செல்கிறார்கள். துணிவு, ஆற்றல், அறிவு ஆகிய மூன்று வினைகள் தாம் இந்த உலகில் செல்லுபடியாகக் கூடியவை என்பதைச் சொல்லும் மாயக் கதை ஜராசந்தனையும், ஒன்பது தலை நாகத்தையும் மையமாகக் கொண்டு புனையப்பட்ட ஒன்று.

பிராட்வே நடிகர் நிக் டால்டனுடன் இசைக் கோர்வையில் இணை இயக்குனராகப் பணியாற்றிய சனயா பரூச்சா நம்மிடம் கூறுகையில் –

கலைத்துறையில் எவ்வித வாய்ப்பும் வழங்கப்படாத குறைந்த வருமானப் பின்னணி உடைய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி எத்தனை பெரிய சாதனையை நிகழ்த்த முடியும் என்பதற்கு இது ஓர் சரியான எடுத்துக் காட்டு. அனைத்துத் தரப்பு பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் கல்வியானது எப்படி கல்வியாளர்களையும், மதிப்பீடுகளையும், மனப்பாங்கையும் ஒருங்கிணைக்கும் மாணவர்களுக்கான வாசலை எப்படித் திறந்து விடுகிறது என்பதற்கான அடையாளச் சின்னம் மாயா. 30 மாணவிகள் தங்களது நிலை என்ன என்பதைச் சுயமாகக் கண்டறிந்து அவர்களது வாழ்க்கைப் போக்கை மாற்றியமைக்க உதவிய பயணம் அது. மாயா போன்ற பயணம் மாணவிகள் மதிப்பீடுகளையும் தங்களுக்கான ஒளி பொருந்திய பாதையையும் கண்டறிய துணை புரிந்தது.

பிரியங்காவும் தோழி சானாவும்
பிரியங்காவும் தோழி சானாவும்

Teach for India இரண்டு வகுப்புகளில் தங்கள் மாணவிகளுக்கு 2009 முதல் பயிற்றுவித்த பள்ளியில் பிரியங்கா தனது கல்வியைப் பயின்று வந்தாள். மேற்படி வகுப்புகளில் பிரியங்கா இல்லை. அப்படியானால் ஸ்கா எனும் நாக தேவதைப் பாத்திரம் அவளுக்கு எப்படி கிடைத்தது? அது அவளது வாழ்க்கையின் மாற்றத்திற்கான வாய்ப்பாக அமைந்தது!

ஒரு சிறிய உந்துதல்

Teach for India ஆசிரியர்களில் ஒருவரான அகோனா கிரிஷா பள்ளியில் பிரியங்காவின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்தார். அவள் மீது கொண்ட ஈர்ப்பால் நாடகத்திற்கு மாணவிகளைத் தேர்வு செய்த போது அதில் பிரியங்காவையும் இணைத்துக் கொண்டார். "அஹோனா அக்கா இரவு 11 மணிக்கு என்னிடம் அடுத்த நாள் நடிகர்கள் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். என்னை நடிக்க வைத்துப் பார்ப்பதில் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்த அம்மா உடனடியாக ஒப்புதல் கொடுத்தார். பின்னர் மாயா யார்..? அவளுக்காக பள்ளி நேரத்திற்குப் பின் எத்தனை நேரம் செலவிட வேண்டியிருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டோம். நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்ட 320 மாணவிகளில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாயா பயணத்தில் அந்நடிகர்கள் எத்தகைய சாதனைகளை நிகழ்த்த வேண்டும். அதற்கு உங்கள் பிள்ளைகள் தயாராக இருப்பார்களா என்பதை மறு உறுதிப்படுத்த வேண்டும் என்று நாடகத் தயாரிப்புக் குழுவினர் பெற்றோரைக் கேட்டுக் கொண்ட போது பிரியங்காவின் தாய்க்குத் தன் மகள் நாடகத்திற்குத் தேர்வு பெறுவாளா என்ற கவலை பற்றிக் கொண்டது.

நாடகம் அளித்த தாக்கம்

ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணிற்கு சரியான எடுத்துக் காட்டாக விளங்கும் சனாயா நம்மிடம் கூறியது – ‘’மாயா நாடகம் கல்வியைப் பற்றிய கவனக்குவிப்பாக இல்லை என்றாலும், அது ஒட்டு மொத்தக் கற்றலைப் பற்றிப் பேசுவதாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக மாயா நாடகத்தின் போது அதிலிருந்து வெளிப்படும் இசையானது நமக்குக் கணிதக் கூறு கற்பித்தலைக் கொண்டிருக்கிறது. நாட்டியம் கற்பித்தலின் வாயிலாக நமது வரலாற்றையும், பாரம்பரியக் கூறுகளையும் பிணைத்திருக்கிறார்கள் எங்களது ஆசிரியர்கள். நெருப்பு பற்றிய ஒரு பாடலில் எங்களது வகுப்பறைக்குள் நெருப்பு கொண்டு வரப்படுகிறது. அதன் மூலமாக நாங்கள் தீக்கொழுந்தின் மூலக் கூறுகளை முழுமையாகக் கற்றுக் கொள்கிறோம். TFI ஐயைச் சேர்ந்த நாட்டின் பிற பகுதியினர் நிகழ்த்தும் மாயாவைக் காட்டிலும் 80% மேலான சிறப்புடன் எங்கள் மாணவர்கள் நிகழ்த்துகிறார்கள்’’

மாணவர்கள் இயல்பில் ஏற்பட்ட மாற்றம்

ஆங்கில மொழி சரளமானதோடு கலை வடிவத்தையும் கற்றுக் கொண்டோம் என்று கூறும் சனாயா, மாணவர்கள் தங்கள் இயல்பில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைத் தனித்து அறியமாட்டார்கள் என்கிறாள். தன் கூற்றிற்கு எடுத்துக்காட்டாக அந்நாடகத்தில் பங்கேற்ற மோகித்தைப் பற்றிக் கூறுகிறாள் சனாயா, ‘’மோகித்தின் சமூகம் முரட்டுத் தன்மை மிக்கது. ஆனால் இந்நாடகப் பயிற்சி அவனுக்குள் சிறிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அவன் இப்போது மாறுபட்ட சிந்திக்கக் கூடியவனாக இருக்கிறான்’’.

நாடகக் காட்சி
நாடகக் காட்சி

பிரியங்காவிடம் எத்தகைய மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதைப் பற்றிச் சனாயா கூறுகையில்,

நான் பிரியங்காவை முதன் முதலாகப் பார்க்கும் போது தன் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதைப் பிறருடன் பகிர்வதற்கு அவளுக்குத் தெரியாது. மற்றவர்களுடன் பேச மிகவும் கூச்சப்படுவாள். குறிப்பாக அவள் சொல்ல வேண்டியது அவளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இத்தனைக்கும் அவள் பொறுப்புமிக்க பெண், கற்றுக் கொள்வதில் ஆர்வம் உடையவள், தனித்துவம் வாய்ந்தவள். ஒருவிதமான தயக்க உணர்வுடன் இருந்த பிரியங்காவிடம் கடந்த இரண்டு வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண முடிகிறது.. துடிப்பார்வம் மிக்கவளாகவும், தைரியமானவளாகவும் ஒரு இளம் பெண்ணுக்கே உரிய லட்சணங்களுடன் விளங்குகிறாள் இப்போது. 

மாயாவின் ஊடாக பிரியங்கா பல்வேறு கலாச்சார அம்சங்களை அறிய முடிந்துள்ளது. பல்வேறு சிந்தனைத் துறைகளையும் ஒட்டுமொத்தமாக இந்த உலகைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்திருக்கிறது பிரியங்காவிற்கு. தனித்து நிற்பவளாக, யாருடனும் எளிதில் கலந்துரையாடுபவளாக, நகைச்சுவையில் ஆர்வம் மிக்கவளாக கூர்ந்து எதிர்வினையாற்றுபவளாக, இந்த உலகை மாற்றுவதில் நம்பிக்கை கொண்டவளாகப் பிரியங்காவைக் காண முடிகிறது.

நாடகக் காட்சி
நாடகக் காட்சி

அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி

இசை மற்றும் வெளி நாட்டில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு என பலவும் கைகூடி வந்துள்ள நிலையில் அவளது படிப்பைப் பற்றி…? மாயா நாடகத்தைக் காண வந்திருந்த யுனைடெட் வேர்ல்ட் காலேஜின் இந்திய வளாகத்தின் முதல்வர், மாயா நாடகத்தில் நடித்த மாணவிகள் அனைவரையும் சந்திக்க ஒரு வாய்ப்பு அளித்தார். அம்மாணவிகள் அனைவரையும் UWC யின் சமூகக் கல்வித் திட்டத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்திட்டத்தில் விண்ணப்பிக்க பிரியங்காவிற்கு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் தேர்வுக் குழுவில் இருந்தவர்கள் அவளைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு வலியுறுத்தியதன் பேரில் பிரியங்கா விண்ணப்பித்தாள். நாடு முழுவதில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 120 மாணவிகளுடன் இறுதிச் சுற்றில் சிறப்பாக செய்ததால் பிரியங்காவும் தேர்வானாள்.

முடிவில்லாத வாய்ப்புகள்

‘’நான் எனக்குள் கற்றுக் கொண்டேன் என்பதை உணர்ந்திருக்கிறேன். எட்டாத உயரத்தில் இருந்தவற்றையும் கூட என் நம்பிக்கையால் எட்ட முடிந்திருக்கிறது. நான் செய்ய முடிகிறவற்றிற்கும் மேலாக மற்றவர்கள் என் மீது நம்பிக்கைக் கொண்டு எனக்கு உதவி இருக்கிறார்கள். என்னுடைய எல்லையைத் தாண்டி விரிந்த தளத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்’’, என்கிறாள் பிரியங்கா.

அவள் அடைந்துள்ள இந்த நிலை குறித்து தோழிகள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்ட போது பிரியங்கா, ‘’அவர்கள் எல்லோரும் நிறைய கேலி செய்கிறார்கள். நான் அவர்கள் எல்லோரையும் மறந்து விடுவேனாம். இருந்தாலும் என்னைப் பற்றி அவர்களுக்குப் பெருமிதம் கொள்ளவே செய்கிறார்கள். நான் அவர்களை உலகிற்குப் பிரதிநிதிப்பதாகப் பார்க்கிறார்கள். எந்தப் பின்னணியில் இருந்து வந்தாலும் உன்னால் சாதனையின் சிகரத்தை எட்ட முடியும் என்பதற்கான உதாரணமாக என்னை நினைக்கிறார்கள்’’

அதிர்ச்சிகரமாக பிரியங்காவின் தாய், அவள் 12 வகுப்பு முடித்தவுடன் திருமணம் முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்று கருதியிருக்கிறாள். ஆனால் மேற்படிப்பிற்கு அம்மாவை இணங்க வைக்க பிரியங்காவால் முடிந்ததா..? 

பொங்கி வரும் சிரிப்புடன் கூறுகிறாள் "வெளிப்படையாகச் சொல்வதென்றால் நான் அம்மாவின் சம்மதத்தை முழுமையாகப் பெற்று விட்டதாக நினைக்கவில்லை. நீ என்ன நினைக்கிறாய் என்பதை பிறரிடம் சொல்லிக் கொண்டிருக்காதே அதைச் செய்து காட்டு என்பதைப் போன்று மாயா எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. திருமணத்துடன் நான் நின்று விட வேண்டியதில்லை. என்பதை மாயா மூலமாக என் அம்மாவிற்கு எடுத்துக் காட்ட முயன்றேன். சிறுவயதில் திருமணம் செய்து கொண்டதால் எவ்வளவு கஷ்டங்களை நீ அனுபவிக்க வேண்டியிருந்தது அப்படியிருக்க என்னை ஏன் இள வயது திருமணத்திற்கு வற்புறுத்த வேண்டும் என்று கேட்டதற்கு, எனக்குப் பின்னால் உனக்கு யார் துணையாக இருப்பார்கள் அதனால் நீ திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்றாள் அம்மா. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் எதையெல்லாம் நான் சாதிக்க முடியும் என்பதை இப்பொழுது நிரூபித்துக் காட்டிய பிறகு என்னைப் புரிந்து கொண்டு நிதானமாக அனைத்து வகைகளிலும் எனக்கு ஆதரவாக இருக்கிறாள்’’.

தான் என்னவாகப் போகிறோம் என்பதை முற்றாக முடிவு செய்து விடவில்லை பிரியங்கா. ஆனால், தான் எந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறாள்.

நான் எனக்கான வாய்ப்பைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கவில்லை. இந்த சமூகத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்றும் யோசிக்கத் துவங்கி விட்டேன். எது சரியான நேரம் என்பதற்காக நான் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒவ்வொன்றுமே பொருத்தமான நேரம்தான் என்று கருதுகிறேன். இப்போதைக்கு நான் டாக்டராக வேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் அதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டியுள்ளது. பாலியல் தொழிலாளர்களின் குடும்ப நலனுக்காக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்களது பிள்ளைகளின் கனவுகளைப் புரிந்து கொள்ள விரும்புகிறேன். நான் என்ன விரும்புகிறேனோ அதைச் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆங்கிலத்தில்: ஸ்னிக்தா சின்கா | தமிழில்: போப்பு