தி ஜங்கிள் புக்: யாழினி எனும் சுட்டியின் சூப்பர் வீடியோ விமர்சனம்!

0

'தி ஜங்கிள் புக்'... சுட்டிகளுக்கும் பெரியவர்களுக்கும் பெரும்பாலும் அறிமுகமே தேவையில்லாத படைப்பு. புத்தகங்களாகவும், கார்ட்டூன் சீரியல்களாகவும், கார்ட்டூன் படங்களாகவும், திரைப்படமாகவும் கண்டு ரசித்த இந்த படைப்பு இப்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துணையுடன் அசத்தலான ஹாலிவுட் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.

இந்தியாவில் இந்த வாரம் ரிலீஸாகியுள்ள இப்படம் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. சுட்டிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கும் நிலையில், கொண்டாட்டத்துக்கு முன்னோட்டமாக திரையரங்குகளில் குடும்பத்துடன் குதூகலம் நிறைந்து வழிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தமிழில் பல திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக, 3டி தொழில்நுட்பத்தால் அரங்குக்குள் வனத்தையே வசப்படுத்தும் அனுபவமும் வயது வித்தியாசமின்றி கிடைக்கிறது.

தி ஜங்கிள் புக் படத்துக்கு இப்போதைக்கு இந்த அறிமுகம் போதும். யூடியூபில் இப்படத்துக்கான வீடியோ விமர்சனங்களைத் தேடியபோது அகப்பட்டது, யாழினி எனும் சுட்டியின் க்யூட்டான விமர்சனம்.

யூடியூப் சேனலில் தமிழில் திரைப்பட விமர்சனம் செய்பவர்களில் மிக முக்கியமானவர் ஜாக்கி சேகர். இணையத்தில் இவருக்கென திரைப்பட ரசிகர்கள் வட்டம் உள்ளது. 'தி ஜங்கிள் புக்' படத்துக்கு சற்றே வித்தியாசமாக, தனது மழலை மொழி மாறாத மகள் யாழினியை வைத்து விமர்சனத்தைப் பதிவேற்றியுள்ளார்.

மூன்றறை நிமிடம் மட்டுமே நீடிக்கும் இந்த வீடியோ விமர்சனத்தில் யாழினியின் குழலூதும் மழலை மொழியில் தி ஜங்கிள் புக் கதையை விவரிக்கும் விதமும், அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சங்களைச் சுட்டிக்காட்டும் ஸ்டைலும் அசத்தல். முதலில் இந்த விமர்சனத்தைப் பார்த்துவிடுங்கள்.

இந்த திடீர் முயற்சி குறித்து ஜாக்கி சேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடும்போது, "எனக்கு நான்கு வயது வரை பேச்சுவர வில்லையாம். அம்மாவுக்கு பெரிய வருத்தும். முதல் ஆம்புள புள்ளை இப்படி மக்கு மடசாம்பிராணி மாறி பேசாம கிடக்கே என்று வருத்தமோ வருத்தமாம். அப்பா ஒரு பிளிப்ஸ் ரேடியோ வாங்கி வந்தாராம். அதில் வரும் விளம்பரங்கள் பாடல்களை கேட்டுதான் நான் சரஸ்வதி சபதம் சிவாஜி போல பேச ஆரம்பித்தேன் என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்.

எல்லாத்தையும் விட நகைமுரண் என்னவென்றால் எனக்கு பேச்சு வரவேண்டும் என்று அந்த திருச்செந்தூர் முருகனிடம் என் பெற்றோர் வேண்டிக்கொண்டார்களாம்.

மலரே குறிஞ்சி மலரே... தலைவன் சூட நீ மலர்ந்தாய்.. பாடல் அப்போது ரேடியோவில் வெகு பிரபலமாம். நான் பாடிய முதல் பாடல் அதுதான்.. மலரே குலுஞ்சி என்பேனாம்.. அதுவும் முழுமையாக பாடினதும் இல்லை பேசியதும் இல்லை. ஆனால் யாழினிக்கு நான்கு வயது.. ஐங்கிள் புக் திரைப்படத்தின் வீடியோ விமர்சனம் செய்ய லைட்டிங் செய்துக் கொண்டு இருந்தேன். அபோது அவ...

"அப்பா?"

"என்னம்மா.."

"ஜங்கிள் புக் விமர்சனம் நான் செய்யறேன்" என்றாள்.

அட ஆமாம் இல்லை. குழந்தைகளுக்கான படம், அவள் செய்தால்தான் சரியாக இருக்கும் என்று முயற்சி செய்தேன். தொடர்ந்து நான் பேசி வருவதை பார்த்து வருகின்றாள். அவளுக்கும் ஆசை இருக்கத்தானே செய்யும். ஆனால் எந்த அளவுக்கு பேசுவாள் என்று எனக்கு தெரியாது. எவ்வளவு நேரம் ஆகும்..? தெரியாது.

யாழினிக்கு விடுமுறை வேறு... சரி செய்து பார்க்காலாம் என்று முயற்சி செய்தேன். ஒன்லி டென் மினிட்ஸ்தான். அவளோட பெஸ்ட்டை கொடுத்து இருக்கான்னுதான் சொல்லுவேன்" என்று ஜாக்கி சேகர் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

ஆம், அவர் கூறியது முற்றிலும் உண்மை. யாழினி தனது ஆகச் சிறந்த விமர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறார்!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்