இல்லத்தரசிகள் சமைக்கும் உணவை வெளியில் விற்க உதவும் 'FromAHome'

55

சென்னையில் அறை எடுத்து தங்கியிருக்கும் எல்லோருமே வீட்டு சாப்பாடுக்காக ஏங்கியிருக்கிறார்கள். அவர்களின் குறையை போக்கும் விதமாக சென்னையை சேர்ந்த ஃப்ரம்எஹோம் (fromahome) என்ற நிறுவனம், இல்லத்தரசிகளின் வீட்டுச்சாப்பாட்டை கிடைக்கச்செய்கிறது.

“இது ஒரு இணையம் சார்ந்த மேடை பெண்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்கிறார் வினோத் சுப்ரமணியம், இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவராவார். சந்தையில் வீட்டுச்சாப்பாட்டுக்கான தேவை மிக அதிகமாக இருந்தபோதிலும், மிகக்குறைவானவர்களே அதனால் பலனடைகிறார்கள் என்கிறார் அவர். பெரும்பாலான இடங்களில் ஒரே இடத்திலேயே மொத்தமாக சமைத்து விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கிறார்.

சிந்தனை உதித்தது

வினோத், விடுதியில் படித்த சமயத்தில் உதயமான எண்ணம் இது. அப்போது வீட்டை விட்டு வெளியே தங்கியிருந்தார், தானே சமைத்து சாப்பிடவும் முடியாத நிலை, எனவே வெளியே விடுதி, உணவகம், துரித உணவகங்களில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இது அவருக்கு எரிச்சலூட்டியது. “இதே நிலையில் தான் பலரும் இருப்பதாக உணர்ந்தேன். எனவே இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என தீர்மானித்தேன். அப்போது உதயமானது தான் இந்த சிந்தனை” என்கிறார் வினோத்.

பெண்கள் அன்றாடம் தாங்கள் சமைக்கும் உணவை இணையத்தில் விற்கச்செய்வதன் மூலமே இதை சாதிக்க முடியும் என நம்பினார். எல்லா பெண்களும் வெளியே வேலைக்கு செல்ல முடிவதில்லை, இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார் வினோத். எனவே பணத்தேவைக்காக பெற்றோர், கணவன், பிள்ளைகள் என யாரையாவது சார்ந்து இருக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.

“அது போன்ற பெண்களுக்கு பொருளாதார ரீதியான சுதந்திரத்தை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். நாங்கள் அவர்களுக்கான மேடையை அமைத்து தருகிறோம். தங்களது சமையல் திறனை காட்சிப்படுத்த உதவுகிறோம். அதன் மூலம் தங்கள் வீட்டு உணவை எங்கள் தளம் மூலமாக மிகப்பெரிய பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்” என்கிறார் வினோத்.

பின்னணி மற்றும் குழு உருவாக்கம்

இது வினோத்தின் நான்காவது புது நிறுவனம் ஆகும். தஞ்சாவூர் ஓவியங்களை இணையப்படுத்தியதே இவரின் முதல் முயற்சி ஆகும். இது சில மாதங்களிலேயே மிகமோசமான தோல்வியை தழுவியது. காரணம் ஓவியர்கள் உள்ளூர் முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள், அவர்களோடு ஒப்பிடும்போது விற்றுகொடுப்பதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டோம் என்பதே என்கிறார்.

இரண்டாவது நிறுவனமாக பயணம் சார்ந்த தொழிலும், மூன்றாவதாக விருந்தோம்பல் நிறுவனம் இது தங்கும் வசதியை வழங்கக்கூடியது. வினோத் மரபணு ஆராய்ச்சியாளராக ஹிஸ்டோ ஜெனிடிக்ஸ் என்ற சென்னையை சேர்ந்த நிறுவனத்திலும் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அங்கு தான் இன்னொரு இணை நிறுவனரான சந்தியா சாரங்கனை சந்தித்தார். அவர் சாஸ்(SAS) மென்பொருள் நிரலாளராக இருந்தார். அவர் அப்போது அமெரிக்காவில் பணியாற்றிக்கொண்டிருந்தார். முதலீடு, இல்லத்தரசிகளை சேர்ப்பது, ஆய்வு மற்றும் உருவாக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தார்.

மூன்றாவது இணை இயக்குனராக சரவணன் ப்ரியன் என்ற தன் கல்லூரி சகமாணவரை சேர்த்துக்கொண்டார். அவர் ஒரு தொழில்நுட்ப வல்லுனர். சொந்த காரணத்தால் பாதியிலேயே வெளியேறினார்.

சவால்கள்

வினோத் எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய சவாலே உணவை கொண்டு சேர்ப்பது தான். இந்த வேலையை மூன்றாம் நபருக்கு கைமாற்றிவிடுவதில் இருக்கக்கூடிய சிக்கலே, அவர்கள் உணவை சரியான நேரத்துக்கு கொண்டு சேர்ப்பதில்லை என்பதே. அதே சமயம் தங்கள் நிறுவனத்தின் மூலமே இதை செய்தால் செலவு பிடிப்பதோடு அல்லாமல், நிறுவனத்தின் பெரும்பாலான வருவாயை அதுவே குடித்துவிடுகிறது. விநியோகத்தையும் சேர்த்து கணக்கிடும்போது நிறுவனத்திற்கு தேவையான முதலீடு அதிகரிப்பதாகவும், இது லாபத்தை பாதிப்பதாகவும் தெரிவிக்கிறார்.

வினோத்
வினோத்

நிறுவனம் பிப்ரவரியில் துவங்கினார்கள், அந்த சமயத்தில் ஒரு நாளைக்கு 20லிருந்து 30 ஆர்டர்கள் வரை பெற்றதாகவும், அதன்மூலம் வருமானம் ரூ2,33,945 கிடைத்ததாகவும் தெரிவிக்கிறார். மொத்தமாக 158 வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

தற்போது மின்வர்த்தக சுழல் அமைப்பை உருவாக்கிக்கொண்டிருப்பதாகவும், அதன்மூலம் பெண்கள் நீண்டகாலம் பயன்பெறக்கூடிய வகையிலான வருமானத்திற்கு உதவ முடியும் என நம்புகிறார். நிறுவனத்தை இந்தியா முழுவதும் பரவச்செய்வதன் மூலமே இதை சாத்தியப்படுத்த முடியும் என்கிறார். அடுத்த ஒராண்டில் சென்னையில் லாபகரமாக இயங்க வேண்டும் என்பதே திட்டம், அதன்பிறகு இரண்டாம்கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களுக்கு இதை விரிவுபடுத்த வேண்டும் என்பதே இலக்கு.

யுவர்ஸ்டோரி கருத்து

பிசிஜியின் ஆய்வு அடிப்படையில், 2014ல் இந்தியாவின் உணவுச்சந்தையின் மதிப்பு 23 ட்ரில்லியன் ரூபாயாக இருக்கிறது, இதுவே 2020ல் 42 ட்ரில்லியன் ரூபாயாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதோடு வீட்டு உபயோகப்பொருட்களுக்கான தேவை சராசரியாக 2010லிருந்து 2020 காலக்கட்டத்தில் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு தொழில்நுட்ப சுழல் அமைப்பின் எதிர்காலம் குறித்து அனந்த் லுனியா, இண்டியா கோஷண்டின் நிறுவனர் பேசியதாவது, உபர் மற்றும் ஏர்பிஎன்பி போன்றோர்களால் உணவுத்துறை இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது. இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, இரட்டை குடும்ப வருமானம், வீட்டு உதவியின் விலை உயர்வு, வெளியில் சாப்பிடும் கலாச்சார பரவலாக்கம் போன்றவற்றால் இந்த சந்தை விரிவாகிக்கொண்டே வருவதாக தெரிவித்தார்.

இதில் இருக்கக்கூடிய பெரும்சவாலே வெளி உணவகங்களுக்கு இணையான சமையலறை கொள்ளளவை உருவாக்குவதே. புதுநிறுவனங்கள் சந்தை மாற்றம் மற்றும் பழக்கவழக்க மாற்றம் பற்றியே அடிக்கடி பேசவேண்டி இருக்கிறது. என்ன சாப்பிடவேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் ஆகும், உள்ளூர் மற்றும் பன்னாட்டு உணவு நிறுவனங்களோடு போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்பதே இவர்களின் பெரிய சவால்.

மற்ற நிறுவனங்களெல்லாம் சமையல் கலைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் இரண்டு பேரையும் உள்ளடக்கி இருக்கும்போது, ஃப்ரம்எஹோம் இல்லத்தரசிகளிடம் மட்டும் கவனம் செலுத்துவது சுவாரசியமானது. மற்ற நகரங்களோடு ஒப்பிடும்போது சென்னை பாரம்பரியமானது. மற்றொரு உணவு தொழில்நுட்ப நிறுவனமான அட்சயம், எ2பி மற்றும் மெட்ராஸ் காஃபி ஹவுஸ் ஆகிய இரண்டு நிறுவனத்தை மட்டுமே உள்ளடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இணையதள முகவரி: Fromahome