பாராட்டவும் அன்பு செலுத்தவும் நாம் தயங்குவது ஏன்?

0

இந்தியா ஒரு சிறந்த நாடுதான். அதிலொன்றும் சந்தேகமே இல்லை. எந்த போட்டி என்று வந்தாலும் நாம் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று பரிசுகளை குவித்துவிடுவோம். ஆனால், நாம் இதுவரை யாராவது ஒருவரை மனம்திறந்து பாராட்டியிருக்கிறோமா? நீங்களே உங்களுக்குள் இந்த கேள்வியை எழுப்பிப்பாருங்கள். “நான் கடைசியாக யாரை மனதார பாராட்டினேன்?”

இன்றைய போட்டிநிறைந்த உலகில் நாம் அனைவரும் பாராட்டு என்ற விஷயத்தை மறந்தேவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலைப் பொருத்தவரை நாம் ஒரு சிறந்த விமர்சகர்.

இதை நான் பல ஆண்டுகளாக கவனித்துவருகிறேன். ஏன் இவ்வாறு நாம் அனைவரும் நடந்துகொள்கிறோம் என்று வியந்துமிருக்கிறேன். புதிதாக தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் இளம் ஊழியர்களுடன் உரையாடும் வாய்ப்பு நேற்று எனக்கு கிடைத்தது. 

“நீங்கள் உங்கள் சக ஊழியர்கள் யாரிடமாவது ஏதாவது ஒரு அசாதாரணமான பண்பை கவனித்திருக்கிறீர்களா? அதுகுறித்து அவர்களை மனம்திறந்து பாராட்டியிருக்கிறீர்களா? குறைந்தது ஒரு பத்து ஊழியர்களிடமாவது அவர்களின் நல்ல பண்புகள் குறித்த உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறீர்களா”? எனக்கு கிடைத்த மிகவும் ஆச்சரியமான பதில் - இல்லை.

இதற்கு நான் நம்முடைய பெற்றோரைத்தான் காரணமாக சொல்லவிரும்புகிறேன். நிற்க! நான் என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்துகொண்டபின் நீங்கள் என்னுடனான உங்கள் விவாதத்தை தொடரலாம். நம்மால் எளிதாக செய்யமுடிந்த ஒரே விஷயம் அதுமட்டும்தான்.

ஒருவரை பாராட்டவும் அன்புசெலுத்தவும் நமக்கு ஒரு வித்தியாசமான முறையை நம் பெற்றோர் கற்பித்திருக்கிறார்கள். என் கதை உங்கள் சொந்த அனுபவத்துடன் ஒன்றியதா அல்லது மாறுபட்டதா என்று கூறுங்கள்.

நான் என்னுடைய பள்ளி நாட்களில் பேச்சு போட்டிகளிலும் விவாதமேடைகளிலும் பல பரிசுகள் பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை நான் பரிசுடன் வீட்டிற்கு வரும்போதும், என் அம்மாவின் முகத்தில் என்னை குறித்த மகிழ்ச்சியும் பெருமிதமும் மிளிருவதை உணர்ந்திருக்கிறேன். இருப்பினும் என் அம்மா என்னிடம் சொல்வது “பரவாயில்லை, நீ பரிசு பெற்றிருக்கிறாய். இருந்தாலும் உன் அத்தையின் மகளைப்பார். அவளது பேச்சுத்திறமையால் BBC-யில் ஒரு ப்ராஜக்ட் கிடைத்திருக்கிறது. நீ பரிசு வென்றது நல்ல விஷயம்தான். ஆனால் நீ சாதிக்கவேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது”. இதை கேட்பதற்கே கடினமாக இருக்கும். இருப்பினும் என் அம்மாவின் மேலுள்ள மரியாதை நிமித்தமாக சாதிக்கவேண்டும் என்கிற எண்ணம்தான் மேலோங்கும்.

என் அம்மாவின் எண்ணம் என்னவாக இருக்குமெனில் இதுபோன்ற சின்ன வெற்றிகள் தலைக்குஏறி நாம் அத்துடன் சாதித்ததாக நினைத்து நின்றுவிடக்கூடாது என்பது. ஆனால் எனக்கு வெற்றிபெற்ற சின்ன சின்ன தருணங்களைக் கூட சந்தோஷமாக கொண்டாடவேண்டும் என்று தோன்றும். கொண்டாட்டம் என்று நான் எதிர்பார்த்தது வேறொன்றுமில்லை. ஒரு சின்ன பரிசு கொடுப்பது, ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுப்பது, இல்லையெனில் நீ இன்று முழுக்க படிக்கவேண்டாம் என்று சொல்வது போன்றவைதான். என்ன இருந்தாலும் அன்று நான் ஒரு வெற்றியாளர்தான். இதுபோன்ற பல விஷயங்கள் எனது பள்ளி நாட்களில் நடந்திருக்கின்றன.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. CNBC-யிலிருந்து வேலையில் சேருவதற்கான ஆணை வந்திருந்தது. என் அம்மாவிடம் காட்டினேன். அவருக்கு மிகவும் சந்தோஷம். லெட்டரைப் படித்தார். அந்த இடத்திலிருந்து நகருவதற்குமுன் என்னிடம் அவர் சொன்ன வார்த்தை “உன் உறவுக்காரப் பெண்ணைப் பார். அவள் அமெரிக்காவில் பணியில் சேர்ந்து மாதாமாதம் அவள் பெற்றோருக்கு 1000 டாலர் அனுப்புகிறாள்”.

என் அம்மா மாறவேயில்லை. அவர்மட்டுமல்ல. நாம் அனைவரும்தான். ஏனோ நமக்கு பாராட்டுதல்களை கொடுக்கவும் பெறவும் முடியாமல் போயிற்று.

“அடுத்தவரை பாராட்டுவதற்கு நமக்கு சஞ்சலமாகவே இருக்கிறது. அதனால்தான் நம்முடனே புதைத்து அதை வெளிக்காட்டாமல் இருக்கிறோம்”.

அதுமட்டுமல்லாமல், நாம் யாரையாவது பாராட்டினால் நம்மை வெகுளி, முட்டாள் என்றெல்லாம் பெயரிட்டுவிடுவார்கள் என்ற அச்சம். அடுத்தவரை குறை சொல்பவரும் விமர்சிப்பவரும் குறித்த ஒரு பாராபட்சமான கருத்து நம்மிடையே உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்தவரை பாராட்டுபவர்களைவிட குறை கூறுபவர்கள் புத்திசாலியாகவும் உலக ஞானம் உள்ளவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஆகையால் நாம் எவ்வளவு அடுத்தவரை குற்றம்சாட்டுகிறோமோ அவ்வளவு நாம் புத்திசாலிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகிறோம்.

“நம் சுற்றுச்சூழலில் சிலர் அடுத்தவரை புறங்கூறுவது, தகாத வார்த்தைகளை உபயோகிப்பது, மற்ற நிறுவனங்களை இழிவுபடுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை பார்த்திருக்கிறோம். ஒரேநாளில் அவர்கள் பெரும்புள்ளியாகிறார்கள். இதுபோன்ற வதந்திகளை அறிந்துகொள்ள நாம் அனைவரும் மிகவும் ஆவலாக இருப்போம்.”

உறுதியான நல்ல எண்ணங்கள் அலுத்துவிடும். சோர்ந்துவிடும். நமக்கு நெருக்கமாக இருக்காது. இந்த எண்ணங்கள் எல்லோராலும் பேசப்படும் அளவிற்கு முக்கியத்துவம் பெறாது. ஆனால் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. நல்ல எண்ணங்கள்தான் வெற்றி பெறும். நல்ல எண்ணங்கள் நிரம்பப்பெற்றவர்கள் அடுத்தவரின் நல்ல செயல்களை பாராட்டுவதற்கான எல்லா முயற்சியையும் நிச்சயம் எடுப்பார்கள். அதன் மூலம் வாழ்க்கையில் அன்பு மேலோங்கச்செய்வார்கள்.

ஒவ்வொரு நாளும் விடிகையில் நம்மையும் நம்மை சுற்றியுள்ளோரையும் பாராட்டுவதற்கான வாய்ப்பு நமக்கு நிச்சயம் கிடைக்கிறது. உலகம் நம்மை என்ன சொல்கிறது என்பதற்கு செவிசாய்க்காமல், பாராட்டுவோம். அன்பு செலுத்துவோம். ஒரு விஷயம் நமக்கு பிடித்தால் அதை நேசிப்போம். ஒருவர் ஒரு நல்ல விஷயம் செய்தால் அவரை நேசிப்போம். அன்பை வெளிப்படுத்துவோம். நாம் அடுத்தவருக்கு செய்யும் மிகப்பெரிய விஷயம் இதுதான்.

காதலர் தினம் கொண்டாடும் இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒரு உறுதிமொழி எடுப்போம்.

நாம் அனைவரும் அடுத்தவருடன் அன்பை பகிர்வோம், மனம்திறந்து பாராட்டுவோம். மேலும் ஸ்டார்ட் அப் பயணத்தை ஒரு அன்பு நிறைந்த அனுபவமாக மாற்றுவோம்.

( யுவர் ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது)

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா எழுதியுள்ள கட்டுரைகள்:

'கிடைக்காத ஒன்றே நம்மை பில்லியனை நோக்கி அழைத்துச் செல்லும்'- நம்பிக்கை ஊட்டும் ஷ்ரத்தா ஷர்மா!

வாழ்த்துக்கள்! உங்களிடம் இல்லாதது தான் வெற்றிக்கு வித்திடக்கூடியது!