16 ஆண்டுகால இன்ஃபோசிஸ் வேலையை விட்டுவிட்டு விவசாயி ஆன சங்கர்!

1

சங்கர் கோடியன், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பொறியாளராக சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர். ஆனால் திடீரென தனது ஆசை, விருப்பம் எல்லாம் தான் ஒரு விவசாயி ஆகவேண்டும் என்பதை உணர்ந்து தன் நல்ல வேலையை விட்டுவிட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள தன் சொந்த கிராமமான கோனாஜெவிற்கு வந்தார்.

43 வயதாகும் சங்கரின் திறன் தொழில்நுட்பத்தில் இருந்தாலும், ஊரக இந்தியாவில் தொழில் முனைய முடிவு செய்து 2013 நாடு திரும்பினார். விவசாய பின்புலமோ, குடும்ப நிலமோ இல்லாத சூழலிலும், பால் பண்ணை மற்றும் ரப்பர் உற்பத்தி செய்ய முடிவெடுத்தார்.

1996-ல் என்ஐடி. சூரத்கல்லில் கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் முடித்துள்ள சங்கர், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சுமார் 16 ஆண்டுகள் பொறியாளராக இருந்தார். பின்னர் 2011-ல் வேலையை விட்டு, விவசாயம் செய்யச் சென்றார்.

ஜப்பானிய விவசாயியான மசனோபு ஃபுக்குவோகா, நாராயண ரெட்டி போன்றோரால் கவரப்பட்டு, விவசாயத்துறையை தேர்ந்தெடுத்தார். பல மாதங்கள் பல விவசாய நிலங்களுக்கு சென்று அதில் தன் அறிவை வளர்த்துக்கொண்டார். பின்னர் 2013-ல் விவசாயம் செய்ய முனைந்தார். 

டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் பேசிய சங்கர்,

”விவசாய நிலங்களில் பலவற்றை கற்கமுடியும். வெளிநாடுகளில் பணிபுரிந்த போதும் நான் அங்கே உள்ள நிலங்களை வார இறுதிநாட்களில் சென்று பார்வையிடுவேன். அதில் எனக்கு பல விவசாய தொழில்நுட்ப முறைகள் குறித்தும், அங்கே பயன்படுத்தப்படும் மெஷின்கள் பற்றியும் தெரியவந்தது. அதைப்பற்றி நிறைய படித்துள்ளேன்,” என்கிறார்.

தி ஹிந்து பிசினஸ் லைன் நாளிதழுடன் தன் நல்ல பணியை விட்டு விவசாயம் மேற்கொண்டதை பற்றி பேசுகையில்,

“பல ஆய்வுகளுக்குப் பிறகு, பால் சார்ந்த வணிகம் வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ளதை அறிந்தேன். தொழிலில் வெற்றி காண நீண்ட நாட்கள் ஆகும் என்று தெரிந்தும் அதை முயற்சித்தேன்,”

தொடக்கத்தில் சங்கர் 8 ஏக்கர் நிலத்தை வாங்கி, 5 மாடுகளையும் வாங்கி விவசாயம் செய்தார். தற்போது அவரிடம் 9 ஏக்கர் ரப்பர் உற்பத்தி செய்யும் நிலமும், 40 மாடுகளும் உள்ளது. அவர் 130 முதல் 140 லிட்டர் பால் வரை ஒரு நாளைக்கு தக்‌ஷின கன்னடா கோஆப்பரேட்டிவ் பால் சங்கத்துக்கு விற்பனை செய்கிறார்.

தன் விவசாய அனுபவத்தை பகிர்கையில், இந்த பயணம் எளிதல்ல என்கிறார். விவசாயத்தில் லாபம் ஈட்ட சுமார் மூன்று முதல் ஐந்து ஆண்டு வரை ஆகும் என்கிறார். இருப்பினும் அத்துறை பற்றிய தனது அறிவும், ஆற்றலும் தன்னை சரியான பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.

கட்டுரை: Think Change India