’உலகளவில் வளர்ச்சியடைய உள்ளூர் சந்தையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’ – அமிதாப் காந்த் 

அரசாங்கம் ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவில் கவனம் செலுத்தி, தொழில்முனைவோர் இந்தியாவில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்கிறது என்றார் NITI ஆயோக் சிஇஓ அமிதாப். 

0

டெக்ஸ்பார்க்ஸ் 2017-ல் NITI ஆயோக் நிறுவனத்தின் சிஇஓ அமிதாப் காந்த் கூறுகையில், இந்தியத் தொழில்முனைவோர் பெரும்பாலும் உள்ளூர் சந்தையில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அவர்களது கவனம் உலக சந்தையில் இருக்கவேண்டும்.

”உள்ளூர் சந்தை குறித்து மட்டுமே சிந்திக்கக்கூடாது. உலகம் முழுவதும் பல வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உலக சந்தையில் ஊடுருவுங்கள்.” என்றார். 

உலக சந்தையை அணுகுவது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும்.

”இந்தியாவிற்காக உங்களால் புதுமைகளைப் படைக்க முடிந்தால் உலகின் ஏழு பில்லியன் மக்களுக்கான புதுமைகளை உங்களால் கண்டறிய இயலும்.”

இந்தியர்கள் பெரியளவில் சிந்திக்கைவில்லையெனில் இங்குள்ள நிறுவனங்கள் வளர்ச்சியடைவது கடினமாகவே இருக்கும். ”ஜப்பான், தென்கொரியா, சீனா என எந்த ஒரு நாடும் உள்ளூர் சந்தையில் மட்டுமே செயல்படுவதால் வளர்ச்சியடையாது. இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தகுதிவாய்ந்ததாக இருப்பதால் அந்த நாடுகள் சிறப்பாக ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உருவாகியுள்ளது,” என்றார்.

”இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான சந்தை இருப்பதாக இந்தியர்கள் பெருமை கொள்கின்றனர். உலக சந்தையில் செயல்படுவதற்கான உந்துசக்தியாக அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உள்ளூர் சந்தையில் உங்களுக்கு கிடைப்பதைவிட பத்து மடங்கு அதிகமாக உலக பொருளாதாரத்தில் உங்களால் பலனடையமுடியும்,” என்றார் அமிதாப் காந்த்.

செப்டம்பர் 22-ம் தேதியான பெங்களூருவில் நடைபெற்ற யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் வருடாந்திர நிகழ்வின் எட்டாவது பதிப்பில் அமிதாப் காந்த் பேசினார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் முக்கிய தலைப்பு ‘மேக் இட் மேட்டர்’. இதில் நிதி தொழில்நுட்பம், இ-காமர்ஸ், ஃபேஷன், செயற்கை நுண்ணறிவு, இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் என பல்வேறு பகுதிகள் குறித்த உரையாடல்களும் கருத்துப் பகிர்வுகளும் நடைபெறுகிறது.

இந்தியா அதிகளவு புதுமைகளுடன் செயல்படும் சமூகம். அதே சமயம் இதற்கான விலை உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

“ஏற்றுமதி மதிப்பை அளிக்கும். அதன் வளர்ச்சி என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.”

”கடந்த நான்கு முதல் ஐந்தாண்டுகளில் பல்வேறு உலக நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகளை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது. இதில் பெரும்பாலானவை பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார் அமிதாப் காந்த்.

ஸ்டார்ட் அப் இயக்கம் வளர்ச்சியடைய உதவும் வகையில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார். இந்தியாவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு சிறப்பான நாடாக மாற்றுவதே இதன் நோக்கம். நாட்டில் தொழில் புரிவது எளிதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அரசாங்கம் 1,200 சட்டங்களை கலைத்துள்ளது. இதனால் ஒரு நிறுவனம் ஒரே நாளில் பதிவுசெய்யப்படலாம். அதேசமயம் ஒரு MSME வெறும் ஐந்தே நிமிடங்களில் பதிவு செய்யப்படலாம். மேலும் நிறுவனங்களுக்கு முதல் மூன்றாண்டுகள் வரி விதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டார்.

வளர்ச்சி குறித்து அமிதாப் காந்த் குறிப்பிடுகையில் ஐஐடி பாம்பேயிலிருந்து பட்டம்பெறும் ஒவ்வொரு பேட்ச் பட்டதாரிகளிலும் 40 சதவீதம் பேர் ஸ்டார்ட் அப்பை துவங்குகின்றனர் அல்லது அதில் இணைந்துகொள்கின்றனர் என்றார்.

தரம் மற்றும் துல்லியமான செயல்பாடு போன்ற கலாச்சாரங்களை ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து கற்றுக்கொண்டு அந்தப் பகுதியில் சிறப்புற வேண்டும் என்று குறிப்பிட்டார். 

”புன்னகை என்கிற கலையை நாம் கற்கவேண்டும். புதுமை என்கிற கலையை கற்கவேண்டும். உலகை கைப்பற்றும் கலையை கற்கவேண்டும்.”

வளர்ச்சிக்கு பாலின சமநிலையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் அமிதாப்  காந்த். இந்தியா பேப்பர் மற்றும் பணமற்ற பரிவர்த்தனைகளை நோக்கி விரைந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த நிதி புரட்சிக்கான உந்துதலாக மொபைல் ஃபோன்கள் இருக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

”இந்தியா மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்றார் அமிதாப் காந்த். மேலும் இந்தியாவிலுள்ள தொழில்முனைவு முன்னணியில் உள்ளது என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : மன்சி கேள்கர்