66 ஆண்டுகளுக்குப் பின் வெட்டப்பட்ட  உலக சாதனை படைத்த இந்தியரின் 31 அடி நீள நகம்!

0

சிறுவயதில் ஆசிரியரிடம் சவால் விட்டு வளர்க்கத் தொடங்கிய நகத்தை, சுமார் 66 ஆண்டுகளுக்குப் பின் வெட்டியுள்ளார் புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர் சிலால். நீண்ட நகம் வைத்திருந்ததற்காக கின்னஸ் சாதனை புரிந்த ஸ்ரீதரின் இடது கை, நீளமான நகம் வளர்த்ததால் நிரந்தர ஊனமாகிப் போயுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் சிலால் (88). கடந்த 66 ஆண்டுகளுக்கு முன் இவர் பள்ளியில் படிக்கும் போது, எதிர்பாராத விதமாக ஆசிரியர் ஒருவரின் விரல் நகத்தை உடைத்து விட்டார். தனது நீளமான நகத்தை ஸ்ரீதர் உடைத்து விட்டதால் கோபமடைந்த ஆசிரியர், அவரைத் திட்டியுள்ளார்.

இதனால் மன வருத்தம் அடைந்த ஸ்ரீதர், ஆசிரியரை விட தான் மிகப்பெரிய நகத்தை வளர்ப்பதாக சவால் விடுத்தார். அதன்படி, தனது இடது கையில் கடந்த 1952ம் ஆண்டு முதல் நகம் வளர்க்கத் தொடங்கினார்.

சவாலாக ஆரம்பித்த நகம் வளர்க்கும் பழக்கம், பின்னர் ஸ்ரீதருக்கு வெறியானது. இதனால் தொடர்ந்து நகத்தை வெட்டாமல் வளர்க்கத் தொடங்கினார். இதனால் அவரது இடது கை விரல் நகங்கள் நீளமாக வளரத் தொடங்கின.
பட உதவி: KMIR
பட உதவி: KMIR

பெருவிரல் நகம் மட்டும் 197.8 செமீ நீளம் வளர்ந்தது. இடது கை விரல்களில் உள்ள நகங்களின் மொத்த நீளம் 909.6 செமீ ஆனது. அதாவது சுமார் 31 அடி நீளம். உலகில் இதுவரை யாரும் இந்த அளவு நீளத்துக்கு நகம் வளர்க்கவில்லை என கடந்த 2016ம் ஆண்டு இவரது நகம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.

தற்போது ஸ்ரீதருக்கு 88 வயதாகி விட்டது. வயோதிகத்தால் பழைய மாதிரி அவரால் தனது நகங்களைப் பாதுகாக்க இயலவில்லை. இதனால் சாதனை படைத்த தனது நகங்களை வெட்டி மியூசியத்தில் வைத்து பாதுகாக்க விரும்பினார்.

ஸ்ரீதரின் ஆசையை நிறைவேற்ற அமெரிக்காவின் நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள ‘ரிப்ளேஸ் பிலிவ் இட் ஆர் நாட்’ (Ripley's Believe It or Not!) மியூசியம் முன்வந்தது. இது ‘ரிப்லி’ஸ் பிலீவ் இட் ஆர் நாட்’ எனும் தலைப்பில் உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பி வருகிறது. 

’நம்பினால் நம்புங்கள்’ என்னும் பொருள்படும் இந்த தொடருக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரியப் பொருட்களை சேமித்து வைக்கும் அருங்காட்சியகமும் உண்டு. அதன் தயாரிப்பாளர்களிடம் நகங்களைப் பாதுகாத்து வைக்க அனுமதி பெற்றார் ஸ்ரீதர்.

“இது போன்ற தனித்துவம் மிகுந்த நகத்தை வைத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். ஸ்ரீதர் தனது வாழ்நாளை நகம் வளர்ப்பதற்காக அர்ப்பணித்திருக்கிறார். இதனை கவுரவிக்க சரியான இடம் ரிப்லிஸ் தான். அவர் தனது நகங்களை வெட்டியிருந்தாலும், ரிப்லிஸ் பிலீவ் இட் ஆர் நாட் அரங்கின் உள்ளே இருப்பது, கால காலத்துக்கும் நினைவில் இருக்கும்,"

என்கிறார் டைம்ஸ் ஸ்கோயர் ரிப்ளேஸ் பிலீவ் இட் ஆர் நாட் மக்கள் தொடர்பு அதிகாரி சூசேன் ஸ்மகளா பாட்ஸ்.

Photo credits : Reuters
Photo credits : Reuters

அதனைத் தொடர்ந்து புனேவிலிருந்து நியூயார்க் அழைத்துச் செல்லப்பட்டார் ஸ்ரீதர். அங்கு அவரது நகங்களை வெட்டும் நிகழ்ச்சி, ‘நகம் வெட்டும்’ விழாவாகக் கடந்தவாரம் நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் வெட்டப்பட்ட ஸ்ரீதரின் நகங்கள், பின்னர் மியூசியத்தில் மக்களின் காட்சிக்காக வைக்கப்பட்டது. அதனை மியூசியத்திற்கு வரும் பார்வையாளர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

ஆனால், இதில் சோகம் என்னவென்றால் ஸ்ரீதரை உலகறியச் செய்த சாதனை நகங்கள், அவரது இடது கையை நிரந்தர ஊனமாக்கி விட்டன. இதனால் மற்றவர்கள் போல் அவரால் தனது இடது கையை இயல்பாக விரித்து மடக்க இயலவில்லை. 66 ஆண்டுகள் நகங்களைப் பாதுகாக்க தொடர்ந்து தனது இடது கையை மூடியே வைத்திருந்ததால், இப்படி அவர் கை நிரந்தர ஊனமாகி விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

"இதை நான் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன்," என தான் நகம் வளர்த்து சாதனை புரிந்தது குறித்து கூறுகிறார் ஸ்ரீதர்.

இந்த நகம் வளர்க்கும் ஆசையால் தூங்கக் கூட இயலாமல் அவதிப்பட்டு வந்துள்ளார் ஸ்ரீதர். இதுதவிர இந்த நகங்களால் அவரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதே தவிர, குடும்ப வாழ்க்கை ஏதும் பாதிப்பைச் சந்திக்கவில்லை. அவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Stories by jayachitra