சமையலறையில் புரட்சி படைத்த ’செளபாக்கியா’ 

0

இன்று நாம் அன்னாந்து பார்க்கும் வெற்றி பெற்ற பிராண்டுகளின் வரலாற்றை பார்த்தோமேயானால் வழி நெடுக அர்ப்பணிப்புகளும், விடா முயற்சியும், உழைப்பும், எதற்கும் கலங்காத உறுதிகொண்ட ஒரு மனிதனும் பின்னிப் பினைந்திருப்பார். அப்படியான ஒரு கடுமையான உழைப்பாளிதான் வரதராஜன். அந்த நிறுவனம்தான் 'செளபாக்கியா'.

'செளபாக்கியா' வரதராஜன்
'செளபாக்கியா' வரதராஜன்

தொழில் வளர்ச்சியில் பின் தங்கிய ஈரோட்டிலிருந்து, ஒரு நிறுவனத்தை வளர்த்துக் கொண்டு வருவது சாதாரண விஷயமில்லை. அதை சாதித்துக் காட்டியவர் இவர். ஈரோடுதான் சொளபாக்கியாவின் புர்வீகம் என்றாலும் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் ஷோரூம் இருக்கிறது. தயாரிப்பு முழுக்க ஈரோடுதான். நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் சென்னையிலிருந்து கவனித்துக் கொள்கிறார் வரதராஜன். 

சிறிய அளவில் அப்பா மேற்கொண்டிருந்த கிரைண்டர் தயாரிப்புத் தொழிலை மிகப் பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்ததில் இவரது உழைப்பு மிகப் அளப்பரியது. தங்களுக்கென தனி மார்கெட்டை உருவாக்கியதுடன், இப்போது பரவலாக அனைவரும் உபயோகப்படுத்தும் அத்தியாவசிய கருவியாகவும் கிரைண்டரை மாற்றியதுதான் இவரது சாதனை .

"வீட்டு சமையலறைகள் மட்டுமல்ல, தமிழகத்தின் ஒவ்வொரு ஓட்டல்களிலும் எங்களது தயாரிப்புக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். எங்களை வளர்த்த தமிழக மக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்," என ஆரம்பித்தார்.

அப்பா கே.பி.வெங்கட நாராயண செட்டியார். ஈரோடுக்காரர். பெரும் செல்வந்த குடும்பமுமில்லை, ஏழ்மையான குடும்பமுமில்லை. நடுத்தர குடும்பம்தான். பலசரக்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்போதெல்லாம் வீடுகளின் இட்லி, தோசைக்கு மாவு அரைக்க வேண்டும் என்றால் ஆட்டுக்கல், உலக்கை, திருகை இப்படித்தான் பயன்படுத்துவார்கள். தண்ணீர் விடாமல் மாவு அரைக்க வேண்டும் திருகை, தண்ணீர் விட்ட மாவு என்றால் ஆட்டுக்கல், தண்ணீர் பட்டும் படாமல் பலகார மாவு அரைக்க வேண்டும் என்றால் உலக்கை பயன்படுத்துவார்கள். எல்லாமே உடலுழைப்புதான்.

இட்லிக்கு மாவு அரைக்க வேண்டும் என்றால் வீட்டிலுள்ள பெண்கள் மாலையே தயாராகி விடுவார்கள். ஒவ்வொரு முறையும் மாவு அரைக்க இரண்டு பேர் மெனக்கெட வேண்டும். கொஞ்சம் பெரும் குடும்பம் என்றால் சொல்லவே வேண்டாம். இதனால் இட்லி தோசை எல்லாம் அந்த காலத்தில் வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோதான். ஓரளவு வசதி கொண்ட கொண்ட குடும்பத்தினர் மட்டுந்தான் மாவு அரைக்க இயந்திரம் வாங்குவார்கள். இந்த இயந்திரம்கூட நினைத்த மாத்திரத்தில் வாங்கி விட முடியாது. ஆர்டர் கொடுத்துதான் வாங்க வேண்டும். அதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த இயந்திரத்தில் ஒரு கோளாறு என்றாலும் உடனடியாக சரி செய்து விட முடியாது. அந்த நிறுவனத்துக்கு ட்ரங்கால் அடித்தால் நான்கைந்து நாட்களுக்குப் பிறகுதான் ஆட்களை அனுப்பி வைப்பார்கள்.

எங்களது வீட்டிலும் அப்பா ஒரு கிரைண்டர் வாங்கி வைத்திருந்தார். கொஞ்சம் பெரும் குடும்பம் அல்லவா… ஆனால் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட அந்த இயந்திரம் அடிக்கடி பழுதாகி நின்றுவிடும். வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொரு முறையும் நிறுவனத்துக்கு ட்ரங்கால் அடித்து ஆட்களை வரவைத்து ரிப்பேர் செய்ய ஒரு வாரம் ஆகிவிடும். ஒவ்வொரு முறையும் இப்படி நடந்து வந்ததால், இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார் அப்பா.

ஒரு முறை பழுதானபோது அவரே இயந்திரத்தை பிரித்து என்ன பழுதாகியுள்ளது என்பதை ஆராய்ந்து, சரி செய்து, இயந்திரத்தை ஓடவிட்டார். பழுது சரியாகிவிட்டது. அடுத்த அடுத்த முறையும் இயந்திரம் பழுதாக அதை பழுபார்ப்பதில் நிபுணராகிவிட்டார். 

அந்த நேரம்தான் அவர் எதாவது தொழிலில் இறங்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தார். வீட்டில் அடிக்கடை ரிப்பேர் ஆன கிரைண்டரை பழுதுபார்த்த அனுபவம் எல்லாம் சேர்ந்ததால் கிரைண்டர் தாயார் பண்ணி விற்கத் திட்டமிட்டார். முதலில் உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். சினிமா தியேட்டர்கள், கண்காட்சிகளுக்கு எடுத்துச் சென்று இதை பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு விளக்குவார். அவர் தயாரிச்ச கிரைண்டர்களுக்கான பெயராக அவரது அம்மா பெயரையே வைத்தார். அவருடன் கிரைண்டரை தூக்கிக் கொண்டு அலைவதுதான் எங்கள் வேலை. தமிழ்நாடு முழுக்க இப்படி அலைந்திருக்கிறோம். இப்படித்தான் இந்த தொழிலுக்கு நாங்கள் வந்தோம் என்கிறார் வரதராஜன்.

தயாரிக்கிறது, அதை தூக்கிக்கிட்டு ஊர் ஊரா அலையிறது. ஆர்டர் எடுக்கிறது, கண்காட்சிகள், கோயில் திருவிழாக்களுக்கு போறது என அந்த வயதில் நானும் என் சகோதர்களும் அப்பாவோடு அலைந்தது கொஞ்ச நஞ்சமல்ல.. மாசம் 30 நாளும் வேலை செய்திருப்போம்," 

என தங்களின் கடுமையான உழைப்பைப் பற்றி பகிர்ந்தார் வரதராஜன்.

அப்படி பிடிச்ச சந்தை இது. பெண்களுக்கான வேலை பளுவை குறைக்கும் இயந்திரம் என்பதால் மெல்ல மெல்ல சூடு பிடித்தது. இதையெல்லாம் ஈரோட்டிலிருந்து கொண்டே செய்தோம். ஆனால் நாம் அடுத்த கட்டமாக வளர வேண்டும் என்றால் சென்னைக்கு சென்றால்தான் உண்டு என வீட்டில் நான் முன்வைத்தேன். எல்லோருக்கும் தயக்கம் இருந்தது. ஆனால் எனது வயதும், வேகமும் ரிஸ்க் எடுக்க வலியுறுத்தியது. ஒரு வைராக்கியத்தோடு 1979 சென்னை கிளம்பி விட்டேன். இங்கு வந்து தி நகரில் ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து முதல் ஷோருமை திறந்தேன். 

ஒரு நாள் முழுதாக கடையை திறந்து வைத்தாலும் ஒருவரும் உள்ளே வரமாட்டார்கள். மூன்று நான்கு நாளைக்கு ஒரு வாடிக்கையாளர் வந்து விசாரிச்சுட்டு போவாங்க… அப்படியே அலைந்து திருந்து ஆர்டர் பிடிப்பது, டீலர் பிடிப்பது என ஓடிக் கொண்டிருந்தது. தரமான பொருளை, மக்களுக்கு உபயோகமான பொருளை தயாரிக்கிறோம் என்கிற நம்பிக்கை இருந்ததால், முயற்சிகளை மட்டும் நான் கைவிடவில்லை. எப்படியும் சந்தையில் ஒரு இடத்தை பிடித்துவிட முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது.

என்னுடைய தொடர் முயற்சிகளால் சென்னையில் டீலர்கள் உருவாக்கினேன். விற்பனை மட்டுமல்ல, நான் சென்னையில்தான் இருக்கிறேன். விற்பனைக்கு பிறகான சேவைகளையும் அளிப்பேன் என்கிற வாக்குறுதிகள் வாடிக்கையாளர்களையும் ஈர்த்தது. சென்னையில் ஷோரும் தொடங்கி மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு கிரைண்டர் விற்பனையானது. அதுவே எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. அன்று வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இப்போதும் தவறாமல் கடைபிடித்து வருகிறோம். அதுதான் எங்களுக்கான மிகப் பெரிய பலம், என்கிறார்.

இவரது அண்ணன்கள் ராஜேந்திரனும், ஆதிகேசவனும் ஈரோட்டில் இருந்து தயாரிப்பு வேலைகளை கவனித்துக் கொள்கின்றனர். தற்போது எனது மகனும், அண்ணன் மகனும் சென்னையில் என்னுடன் நிர்வாகத்தில் உதவி செய்கின்றனர்.

எங்களது சந்தை விரிவடைந்த அளவுக்கு, எங்களது தயாரிப்புகளையும் படிப்படியாக மெருகேற்றியுள்ளோம். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் யோசனைகளுக்கு ஏற்ப பல பொருட்களையும் விற்பனை செய்கிறோம். கிரைண்டரை மாவரைக்க மட்டுமல்லாமல், காய் நறுக்க, சப்பாத்தி மாவு பிசைய, தேங்காய் துருவ இப்படி பல பயன்பாடுகளை கொண்டு வந்து புதுமை செய்தோம்.

இடத்தை அடைக்காத டேபிள் டாப் கிரைண்டர்கள், சிறு குடும்பத்துக்கு ஏற்ற டில்டிங் கிரைன்டர்கள், மிக்சி ஸ்டவ், இன்டக்ஸன் ஸ்டவ், குக்கர், கடாய் என பல தரமான தயாரிப்புகளை கொடுத்து வருகிறோம்.

ஒன்னு மட்டும் உண்மை.. தமிழர்கள் எங்கெல்லாம் பரவியிருக்கிறார்களோ அங்கெல்லாம் எங்களையும் சுமந்து செல்கின்றனர். இதைத் தவிர வேரென்ன எங்களுக்கு மகிழ்ச்சி இருக்க முடியும். இதுதான் எனது வியாபார வெற்றி என்று விடைக் கொடுக்கிறார் வரதராஜன்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பாரம்பரிய சத்துணவு வகைகளை 'மன்னா' மூலம் உயிரூட்டிய ஐசக் நாசர்!

ஓர் ஊழியருடன் தொடங்கி, இன்று 700 பேருடன் வெற்றிநடை போடும் ஆசிப் பிரியாணி சாம்ராஜ்ஜியம்!
Stories by deepan