செலவில்லாமலே இவரது விளையாட்டு செயலிக்கு 75 மில்லியன் டவுண்லோடு கிடைத்தது எப்படி? 

0

இந்திய டிஜிட்டல் கேமிங் துறையில் ஆலோக் கெஜ்ரிவால் மதிப்புடன் பார்க்கப்படுகிறார். அதனால் தான் அவர் தனது நிறுவன வெற்றி ரகசியங்களை பகிர்ந்து கொள்வதற்காக பாம்பே ஐஐடியில் நடைபெற்ற இ சம்மிட்டில் மேடையேறிய போது அனைவரும் ஆர்வம் கொண்டனர். அவரது 'கேம்ஸ்2வின்' நிறுவனம், உலகின் முன்னணி 20 ஆன்லைன் கேமிங் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. மாதந்தோறும் 20 மில்லியன் பயனாளிகளை ஈர்ப்பதுடன், ஒரு ரூபாய் கூட செல்வில்லாமல் 75 மில்லியன் டவுண்லோடை பெற்றுள்ளது.

”உண்மையில் செயலிகளுக்கான டவுண்லோடை பெறும் வழி மிகவும் எளிதானது” என்கிறார் ஆலோக். “உங்கள் செயலி மீதான ஈடுபாட்டை பெற உறுதியுடன் இருந்தால், பயனாளிகள் இந்த ஏழு பாவங்களை செய்யத்தூண்டும் வகையில் வாழ்க்கையை விளையாட்டுமயமாக்க வேண்டும்“ என்கிறார் அவர். 

இதை மேற்கொண்டு அவரே விளக்குகிறார்.

1. சோம்பல்

சோம்பலாக இருக்கிறது எனும் உணர்வை தான், செயலி உருவாக்கத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய உணர்வாக கருதுவதாக ஆலோக் கூறுகிறார்.

சோம்பல் மிகவும் வலிமையான உணர்வு என அவர் கருதுகிறார். 20 மில்லியன் பதிவிறக்கம் பெற்ற 'பார்க்கிங் பிரென்சி' விளையாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். இதில் உள்ள புதுப்பிக்கும் (ரிவைவ்) வசதி இதுவரை 50,000 டாலருக்கு மேல் பெற்றுத்தந்துள்ளது.

“கார்கள் ஒரு மூலையில் மோதி நிற்கும் போது, பலரும் மீண்டும் துவங்கி முழுவிளையாட்டையும் விளையாட விரும்புவதில்லை. இதற்கு சோம்பல் தான் காரணம். இதை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அவர்கள் செய்வதை தொடர்வதற்கான வாய்ப்பை அளிக்கவும். அவர்கள் தொடர்ந்து விளையாடும் வசதி இருந்தால், சோம்பல் மிக்கவர்கள் சோம்பலுடன் தொடர்வார்கள். எல்லோரும் இப்படி தான்” என்கிறார் ஆலோக். கேம்ஸ்2வின் பிலரி எக்ஸ்பிரசுடன் ஏற்படுத்திக்கொண்ட கூட்டு, செயலிக்குள் பொருட்களை வாங்குபவர்கள், பயனாளிகளாக தொடரும் வாய்ப்பு இரு மடங்காக இருப்பதை உணர்த்தியுள்ளது. பயனாளிகளை சோம்பலுடன் இருக்கச்செய்வதன் மூலம் இதை சாத்தியமாக்கலாம் என்கிறார். “ஆனால், இதை அதிகமாக செய்துவிடக்கூடாது. தவறாகவும் பயன்படுத்தக்கூடாது. நீங்கள் உதவி செய்வதாக உணரச்செய்ய வேண்டும்” என்கிறார் அவர் நகைச்சுவையுடன்.

2. பெருமிதம் முக்கியம்

பெரிய அளவில் வெற்றி பெறாத பேட்2வின், இரண்டாவது முக்கியப் பாடத்தை அளித்துள்ளது. “இந்த விளையாட்டில் சுவாரஸ்யமான ஒன்றை கவனித்தோம். லீடர்போர்ட் அம்சம் வைரலாக பரவும் தன்மை கொண்டிருப்பதையும், ஆர்வத்தை ஈர்ப்பதையும் புரிந்து கொண்டோம். பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப்படுமானால், சிறிய மற்றும் முக்கியமில்லாத விஷயங்களில் கூட எல்லோரும் முன்னிலையில் இருக்க விரும்புகின்றனர்” என்கிறார் ஆலோக். 

இந்த பெருமித உணர்வை பயன்படுத்திக்கொள்ளலாம்.

3. கோபம்

கோபம் எதிர்மறையான உணர்வாக இருக்கலாம். ஆனால் அது உணரப்படும் அளவு மனித மனதின் நிறைவு மற்றும் திருப்தியை உணர்த்துகிறது. இதற்கு உதாரணமாக கில், ஒசாமா பின்லேடன் விளையாட்டை குறிப்பிடுகிறார். “விளையாடிவர்கள் படு பயங்கரமான செயல்களில் ஈடுபட்டனர். மாயத் தோற்றத்தில் இருந்த பின்லேடனை கொலை செய்து கடலில் வீசியது போதாது என்று அதற்கு முன்னர் அவரது தலையை கொய்துவிட்டனர். 25 முறை தொடர்ந்து கொலை செய்தவர்களும் இருக்கின்றனர்” என்கிறார் அவர்.

துப்பாக்கியால் சுட்டுத்தள்ள, கொலை செய்ய வழி செய்யும் கேம்கள், அதிகாரத்தை செயல்படுத்தும் உள்ளார்ந்த விருப்பத்தை பூர்த்தி செய்து, அறக்கவலை இல்லாத, குற்ற உணர்வு இல்லாத, சட்டம் இல்லாத உலகில் இதை நிறைவேற்றிக்கொள்ளும் தன்மையை தருகிறது. கேம்கள் இதை பூர்த்தி செய்ய வேண்டும் என்கிறார்.

பழி வாங்கும் உணர்வை செயலியாக வழங்குவது ஏற்றது.

4.பேராசை

இலவசங்கள், தள்ளுபடிகள், ரொக்கப்பரிசுகள், டீல்கள் ... இவை எல்லாம் ஒருவரின் அடையும் உணர்வை நிறைவேற்றுகின்றன. ஆலோக்கின் கேம்கள் தினசரி ரொக்கப்பரிசுகளை அளிக்கின்றன. ரொக்கப்பரிசுக்கு ஆசைப்பட்டு பலரும் இஷ்டத்திற்கு இணைய இணைப்பை செலவிடுகின்றனர்.

5. இன்னும் வேண்டும்

எல்லோரும் லிங்க்டு இன் கணக்கு வைத்திருந்தாலும் அதை முழு அளவிலான சமூக வலைப்பின்னல் சேவையாக பயன்படுத்துவதில்லை. இருந்தும் நீங்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள், அழைப்பு விடுக்கிறீர்கள், ப்ரொஃபைலை அப்டேட் செய்கிறீர்கள். மெசேஜை படிப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள்.

இன்னும் போதாது எனும் தன்மை முக்கியம் என்கிறார் ஆலோக். வரைபடத்தில் உங்கள் ப்ரொஃபைல் எந்த அளவு இருக்கிறது என காட்டுகிறது. ஆனால் ஒரு போதும் முழுவதும் நிறைவடைவதில்லை. இது தான் ஈடுபாட்டை வளர்க்கிறது.

6. பொறாமை

லிங்க்டு இன் பொறாமைத்தன்மையை பெற வைக்கிறது. எப்படித்தெரியுமா? “ என்னைப்பொருத்தவரை சகா ஒருவர் அதிக மதிப்பீடு பெற்றிருந்தால் தூக்கம் போய்விடுகிறது. விஜய் சேகர் சர்மாவின் அதிக மதிப்பீடு இப்பதான் தன் தூக்கத்தை கெடுத்தது. அவர் பேடிஎம்மை உருவாக்கினார் என்பது வேறு விஷயம். ஆனால் நான் அவரை மிஞ்ச எப்படியும் முயற்சிப்பேன்” என்கிறார் அவர். இத்தகைய தன்மையை அளிக்கும் செயலிகள் நிச்சயம் பயனாளிகளை ஈர்க்கும். அவர்கள் முன்னிலை பெற கடுமையாக முயற்சிப்பார்கள். ஃபார்ம்வில்லே உலகம் முதல், உங்கள் கருத்துக்களுக்கு கிடைக்கும் லைக்குகள் வரை எல்லாமே உங்களுக்கான மதிப்பீட்டின் விழைவு தான்.

7. இச்சை

அமெரிக்காவில் பெண்கள் பெரிய கார்களை வாங்க விரும்புகின்றனர். ஒரு சிலர் லம்போர்கினி ரகத்தை நாடுகின்றனர். ஆனால் பெரும்பாலும் அவற்றை சாலைகளில் பார்க்க முடிவதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. “நிஜத்தில் செய்ய முடியாததை செயலியில் செய்ய விரும்பிகின்றனர்” என்கிறார் அலோக்.

ரசிகர்களின் இதே போன்ற இச்சையைத் தான் நட்சத்திரங்கள் சார்ந்த செயலிகள் பயன்படுத்திகொள்கின்றன.

ஆலோக்கின் மிராண்டா சிங்ஸ் / ஹேட்டர்ஸ் கேம் அமெரிக்காவில் ஐடியூன்சில் முதலிடம் பெற்றது. இது ரசிகர்களை இந்த யூடியூப் நட்சத்திரத்தின் உலகில் உலாவ வைத்தது. அவரது செல்வாக்கை இந்த கேம் நன்றாக பயன்படுத்திக்கொண்டது. அவருக்கு யூடியூப்பில், ட்விட்டரில், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் ஸ்னேப்சாட்டில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். அதோடு அவரது ரசிகர்கள் அவரைப்போலவே வாழவும் விரும்புகின்றனர். இதை நிறைவேற்றுவதன் மூலம் கேம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆக்கம்; பிஞ்சால் ஷா | தமிழில்:சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

விளையாட்டு செயலி தயாரித்து கலக்கும் 'தமிழ்மகன்'

கேம் மூலம் கணக்கு சொல்லிதரும் செயலி!