'ஹாட்சிப்ஸ்' வாசுதேவன்-  கல்லூரி பேராசிரியர் தொழில்முனைவர் ஆன வெற்றிக் கதை! 

2

'ஹாட்சிப்ஸ்' : 1990களில் சிறிய இடத்தில் சிப்ஸ் விற்பனை கடையாக பயணத்தை தொடங்கியது. இன்று ஆண்டுக்கு 65 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து, 20 கிளைகளுடன் சென்னை நடுத்தர மக்களின் விருப்பமான உணவகமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் இருக்கிறார் நிறுவனர் வாசுதேவன். முன்னால் பேராசிரியர். ’’மாதம் 6,500 ஊதியத்தில் வணிகவியல் உதவிப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தவன் நான்’’, என கடந்த கால நினைவுகளோடு பேசத் தொடங்கினார்...

உணவுத் துறை சார்ந்த தொழில்களை அனுபவம் இல்லாமல் தொடங்கினால் தொடர்ந்து நீடிக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் தெளிவான திட்டமிடலும், மேற்பார்வையும், வாடிக்கையாளர் தேவை அறிந்து செயல்படுவதும் இருந்தால் வெற்றி சாத்தியம்தான் என்பதை நானும் எனது அனுபவத்திலிருந்துதான் கற்றுக் கொண்டேன்.

ஆரம்பத்தில் சிப்ஸ் மற்றும் சாட் நிறுவனம் மட்டும்தான் நடத்தி வந்தோம், அதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பார்த்து ஓட்டல் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்தோம். ஆனால் முதல் ஓட்டல் தொடங்கிய 11 மாதங்களில் அந்த ஓட்டலை மூடும் நிலைமைக்கு வந்தோம். ஆனால் அதனோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அந்த இழப்புகளில் இருந்து கற்றுக்கொள்வதற்கும் விஷயங்கள் இருந்தது.

அனுபவம் இல்லை, திட்டமிடவில்லை என்பதைத் தாண்டி ஆராய்ந்தபோது சரியான இடத்தை தேர்வு செய்யவில்லை என்பதை புரிந்து கொண்டோம். மேலும் அந்த இடம் மிகவும் சிறியது. பார்க்கிங் வசதியும் இல்லை. இந்த விஷயங்களில் கவனம் செலுத்தி பிறகு அடுத்த நான்கு ஆண்டுகளில் மீண்டும் திட்டமிட்டு ஃபாஸ்ட்புட் கடைகளைத் தொடங்கினோம். அதன் பிறகு எந்த புது முயற்சியாக இருந்தாலும் திட்டமிடலுக்கு என்று குறிப்பிட்ட காலம் எடுத்துக் கொள்கிறோம்.

சுவராஸ்யம் என்னவென்றால் நானே என் மாணவர்களுக்கு பலரது வெற்றிக்கதைகளை சொல்லி வகுப்பெடுத்திருக்கிறேன். வணிகவியல் துறை பேராசிரியர் என்பதால், உழைப்பால் உயர்ந்த பிஸினஸ்மேன்களின் கதைகளை அடிக்கடி வகுப்பில் சொல்வேன். ஆனால் பணியாற்றியது என்னவோ 6500 சம்பளத்துக்குத்தான். அந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்த முடியவில்லை என்பதால் பகுதி நேர தொழில் ஏதாவது செய்யலாம் என யோசித்தேன். மாணவர்களுக்கு சொல்லும் கதைகளை நானே எனது வாழ்க்கையில் ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்று யோசித்துதான் பகுதி நேரமாக தொழில்களில் இறங்கினேன்.

ராயப்பேட்டையில் என் வீட்டுக்கு அருகில் ஒரு மருந்துக் கடை விற்பனைக்கு வந்தது. மனைவியின் நகைகள், நண்பர்களிடத்தில் கடன் என பணம் திரட்டி அதை வாங்கினேன். கல்லூரி நேரம் போக மீதி நேரங்களில் மெடிக்கல்தான் என் கவனம் இருக்கும். அதை வெற்றிகரமாக நடத்தியதில் அடுத்து இன்னொரு மருந்துக் கடை தொடங்கும் வாய்ப்பு அமைந்தது. இதற்கு பிறகு பல்பொருள் கடை ஒன்றை திறந்தேன். ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு ஏற்றமில்லை.

பல்பொருள் கடையை மூடிவிட்டு வேறு ஏதாவது தொழிலை செய்யலாம் என்கிற யோசனை இருந்த சமயத்தில், என் மருந்துக் கடையை ஒட்டிய சந்தில் ஒரு சிப்ஸ் கடையின் விற்பனை முறை என்னை ஈர்த்தது. அந்த சிப்ஸ் கடை ரொம்ப சிறிய இடத்தில் அதுவும் சந்துக்குள் இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் தேடி வந்து வாங்கிச் செல்வார்கள். அதற்குக் காரணம் அவர்கள் சிப்ஸ் தயாரித்த விதம்தான். இதுதான் வாடிக்கையாளர்களை விளம்பரம் இல்லாமலே வர வைக்கிறது என்று அறிந்தேன். அதே மாதிரி ஒரு சிப்ஸ் கடையை நுங்கம்பாக்கத்தில் திறந்தேன்.

சுடச் சுட சிப்ஸ் இதுதான் கான்செப்ட். அதுவும் இந்த சிப்ஸ் கடையில் வாடிக்கையாளர் எதிரில் உடனடியாக தயாரிக்கக் கூடிய நொறுக்குத்தீனிகளைத் தந்தோம். இந்த சிப்ஸ் கடைகளில் வட இந்திய உடனடி சாட் உணவுகளைத் தந்தோம். இதில் நல்ல வருமானமும், பெயரும் கிடைக்கவே, 1992-ல் நான் பார்த்துவந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, முழுநேரமாக தொழில்முனைவர் ஆனேன்.

இதற்கடுத்து முதல் ஓட்டலை நுங்கம்பாக்கம் பகுதியில் தொடங்கினேன். பொதுவாக ஓட்டலுக்கு வருபவர்களை உட்கார வைத்து பரிமாறுவது வழக்கம். ஆனால், நான் வாடிக்கையாளர் சுயசேவை என்று தொடங்கினேன். இதன் மூலம் கடையின் பணியாளர் எண்ணிக்கை குறைவதால், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உணவைத் தரமுடிந்தது. இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ப ஓட்டலை நடத்த ஆரம்பித்ததிலிருந்து என் ஓட்டலின் வளர்ச்சி, வேகம் கொண்டது.

சென்னைக்கு அடுத்து இப்போது பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளோம். அடுத்ததாக திருச்சியில் தொடங்கும் முயற்சிகளில் உள்ளோம். பெங்களூர், சிங்கப்பூரில் பிரான்சைசி மூலம் ஆரம்பித்தோம், ஆனால் அது நமது கண்பார்வையில் இல்லாததால் தரத்தை கண்காணிப்பது சிரமமாக இருந்தது இதனால் அந்த முயற்சியை கைவிட்டோம்.

எனது தொழில் உத்தியாக நான் இப்போது கடைபிடிக்கும் விஷயம் விளம்பரங்களுக்கு செலவு செய்வதில்லை. ஏனென்றால் உணவுகளின் விலையை குறைவாகவே வைத்துள்ளோம். மேலும் குறைவான லாப வரம்புதான் வைத்துள்ளோம். விளம்பரங்களுக்கு செலவிடும் போது, அதனை உணவு பொருளின் விலையில்தான் ஏற்றியாகவேண்டும். தவிர ஒருதடவை விளம்பரம் மூலம் வாடிக்கையாளரை இழுக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் விளம்பரம் மூலம் இழுக்க முடியாதே.. 

தரமாக இருந்தால் மட்டும்தான் மக்கள் வருவார்கள். தவிர சைவ உணவகத்தில் சராசரியாக ஒரு பில் தொகை 50 ரூபாய் என்ற அளவில்தான் இருக்கும். அதனால் இப்போதைக்கு விளம்பரம் தேவை இல்லை. வாய்வழியாக கிடைக்கும் விளம்பரம் போதும். விளம்பரத்துக்கு செய்யும் ஒரு ரூபாயை, பொருட்களின் விலையைக் குறைக்கும்பட்சத்தில் அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள். 

இப்போது நிர்வாகத்தின் மகன்களும் உதவியாக இருக்கின்றனர். பேராசிரியராக எனது பணியினைத் தொடர்ந்திருந்தால் இப்போதும் மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, நல்ல மாணவர்களை உருவாக்கி இருந்திருப்பேன். ஆனால், இன்று எனது நிறுவனத்தில் சுமார் 1,500 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். எனக்காக மட்டுமின்றி, அவர்களுக்காகவும் நான் உழைக்கிறேன்’’ என்றவர் அடுத்ததாக ஓட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி தொடங்கும் எண்ணம் உள்ளது. அங்கு பயில்பவர்களுக்கு எங்கள் ஓட்டலிலேயே வேலை கொடுக்கும் திட்டமுள்ளது என்றார்.

வேலைவாய்ப்பு உருவாக்குவது ஒருபக்கம் என்றாலும், ஒரு ஆசிரியர் தனது வாழ்க்கையையே பாடமாக நடத்த உள்ளார் என்பதுதான் அந்த மாணவர்களுக்கு கிடைக்கும் பெரிய வாய்ப்பு. வாழ்த்துக்கள்!

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பாரம்பரிய சத்துணவு வகைகளை 'மன்னா' மூலம் உயிரூட்டிய ஐசக் நாசர்!

ஓர் ஊழியருடன் தொடங்கி, இன்று 700 பேருடன் வெற்றிநடை போடும் ஆசிப் பிரியாணி சாம்ராஜ்ஜியம்!

சமையலறையில் புரட்சி படைத்த ’செளபாக்கியா’