வெட்டிங் ஃபோட்டோகிராபியில் முத்திரை பதிக்கும் மோனிஷா அஜ்கோங்கர்

0

மும்பையை சேர்ந்த புகைப்பட கலைஞரான மோனிஷா அனைத்து ரக புகைப்பட துறைகளில் பயணித்திருக்கிறார். "அப்போது என்னிடம் வெறும் நோக்கியா 6600 வகையான கைப்பேசி மட்டுமே இருந்தது. அதில் எடுக்கும் புகைப்படங்களும் அதன் அனுபவங்களும் என்னை மிகவும் கவர்ந்தது. அங்கிருந்து புகைப்படக்கலையை பற்றி படிக்க ஜே ஜே கல்லூரியில் சேர்ந்தேன்" என்று தன்னுடைய அனுபவங்களை பகிரத்தொடங்கினார் 'தி ஃபோட்டோ டைரி' (The Photo diary) நிறுவனரும் மேலாளருமான மோனிஷா அஜ்கோங்கர்.

கல்லூரியில் சென்று படித்தாலும், அது பகுதிநேர பாடத்திட்டம் என்பதால், ஃபோட்டோகிராபியை பற்றி சரிவர கற்றுக்கொள்ள முடியாமல் மோனிஷா இருந்தார் என்பதை குறிப்பிடுகிறார்.

"பள்ளி கல்லூரிகளில் கற்றுக்கொள்ளும் முறை சிறப்பாக இருந்தாலும், சில நடைமுறை பயிற்சிகள் மற்றும் அனுபவங்கள் இருப்பது ஒரு நல்ல தொழில்சார்ந்த நபராக நம்மை மாற்றமுடியும். ஒரு குறிப்பிட்டத் துறை அல்லது தொழிலில் இறங்கி பணிபுரியும்போது தான், அதனுடைய ஆழமும் செயல்முறைகளும் புரியவரும். நாம் ஏற்படுத்தும் தொடர்புகள், நம்முடைய திறன்கள் இது எல்லாமுமே கிடைத்த வெளிப்புற அனுபவங்களுக்கு ஒரு பங்கு என்று சொல்லவேண்டும். அந்த வகையில் என்னுடைய ஒவ்வொரு நாளிலும் ஏதாவது ஒரு புது விஷயத்தை நான் கற்றுக்கொள்வதுண்டு." என்று கூறும் மோனிஷா தன்னுடைய அனுபவங்கள் மூலம் கேமரா மற்றும் லைட்டிங் போன்ற புகைப்படத்திற்க்கான சரியான தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டிருக்க முடியும் என்பதை உணர்கிறார் மோனிஷா.

தடங்கல்கள் இருந்தாலும், புகைப்படங்களை எடுப்பதிலிருந்து தன்னை மோனிஷா தடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக மோனிஷா தனது புகைப்படங்களை எடுத்தது, ப்ளு ஃபராக் என்ற ஒரு இசை நிகழ்ச்சிக்காக. "எனக்குள் இருக்கும் அதிகப்படியான ஆர்வத்தை வெளிக்கொண்டுவருவது இசையே" என்று தனது ஆர்வத்தை பற்றி விளக்குகிறார் மோனிஷா.

மாஹிம் என்ற இடத்தில் டிஜே ருபரேல் கல்லூரியில் சைக்காலஜி படித்து வந்த மோனிஷாவிற்கு ஃபோட்டோகிராபி பற்றி யதேர்ச்சயாகவே தெரியவந்தது. அதன் பின், அதை படிக்க வேண்டும் என்ற முழு ஆர்வத்தோடு இருந்தது மட்டுமல்லாமல், சைக்காலஜி படிப்பை விட்டு, ஒரு தன்னுடைய அடுத்த கட்ட வேலைகளில் கவனம் செலுத்தி ஃபோட்டோகிராபி துறையில் கால் பதித்தார்.

"எனக்கு பிடித்த பெண் ஒருத்திக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அவளோடு சென்று பல பார்ட்டிகள், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து புகைப்படங்களை எடுத்தேன். அப்போது தான் எனக்குள் இருந்த ஆர்வம் அனுபவத்தோடு சேர்ந்து அதிகமாக மாறியது. அப்போது தான் என்னுடைய தோழியின் திருமணத்தை எடுக்க சென்றேன்." என்று வெட்டிங் ஃபோட்டோகிராபியில் தான் எடுத்த முதல் அடியை பற்றி விளக்குகிறார் மோனிஷா. அவர் அப்போது எடுத்த கத்தோலிக்க திருமணத்திலிருந்து தொடர்ந்து பல திருமணங்களுக்கு புகைப்படங்கள் எடுத்து தருவதன் மூலம் 'தி ஃபோட்டோ டைரியையும்' வெற்றிகரமாக தொடங்கினார்.

இசை மேல் இருக்கும் அலாதியான ஆர்வம் புகைப்படங்கள் மூலம் மோனிஷாவிற்கு மேலும் பெருகிற்று. தவிர, பல்வேறு இசை கலைஞர்களுடனும் பழகும் வாய்ப்பு இது மூலம் அவருக்கு கிடைத்தது என்றே சொல்லலாம். இதுவரை பல்வேறு இசை நிகழ்ச்சிகளை புகைப்படமாக எடுத்திருந்தாலும், தன்னுடைய விருப்பமான நிகழ்ச்சி NH7 என்று கூறுகிறார் மோனிஷா. தவிர, சமீபத்தில் புது தில்லியில் நடந்த டென் ஹெட்ஸ் என்ற இசை விழாவையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கற்றுக்கொண்ட சூழல்

ஃபோட்டோகிராபி என்று வரும் போது, அந்த குறிப்பிட்ட நொடியை முழுவதுமாக உள்வாங்கி அனுபவித்தால் மட்டுமே அதை தத்ருபமாக படமாக கொண்டுவர இயலும் என்பது மோனிஷாவின் கருத்து. தவிர, தற்போதையை மாறிவரும் காலக்கட்டத்தில் ஃபோட்டோகிராபி முறைகளும் மாறிவருகிறது என்பதை உணர்ந்த மோனிஷா, அதன் நுணுக்கங்களையும் சேர்த்தே கற்றுக்கொண்டு வருகிறார்.

"குறிப்பாக திருமணங்களில் அவர்களால் கூட உணரமுடியாத ஒரு முக்கிய நொடி இருக்கும். அதை கண்டிப்பாக ஒரு புகைப்படமாக எடுத்து அந்த நினைவை அவர்களுக்கு தர வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு என்மேல் இருக்கும். அதை சரியாக எடுப்பதில் சவாலும் இருப்பதுண்டு." என்று பகிர்ந்துக்கொள்கிறார் மோனிஷா.

சமீபத்தில் அவர் வஸிர் என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு அமிதாப் பச்சனுடன் பணிபுரிந்த அனுபவமும் மோனிஷாவிற்கு உண்டு. "அவரை போன்ற ஒரு பெரிய மனிதரை என்னுடைய கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவருடன் பணிபுரிந்த போது, நான் தெரிந்துக்கொண்டது எந்தவொரு குறிப்பிட்ட துறையிலும் அனுபவம் இருந்தால், அது உங்களை பெரிய இடத்தில் கொண்டு சேர்க்கும்." என்று தன்னுடைய திரைப்பட அனுபவங்களையும் பகிர்ந்துக்கொண்டார் மோனிஷா.

தி ஃபோட்டோ டைரியின் விரிவாக்கம்

திருமணங்கள், ஃபேஷன் ஷோக்கள், இசை நிகழ்ச்சிகள் போன்ற துறைகளில் மோனிஷா புகைப்படங்கள் எடுக்க தனித்திறமை கொண்டவர். இவருடைய 'தி ஃபோட்டோ டைரி' பிரத்யேகமாக வெட்டிங் ஃபோட்டோகிராபியின் பல அங்கங்களான ப்ரீ வெட்டிங் ஷுட், வெட்டிங் படங்கள், விடியோக்கள் போன்றவை எடுக்கப்படுகின்றன. வெட்டிங் ஃபோட்டோகிராபியில் மட்டுமே கற்றுக்கொள்வதற்கும் எடுத்துசெய்வதற்கும் பல விஷயங்கள் இருக்கின்றன என்பது மொனிஷாவின் கருத்து.

தொழில் முறையில் இன்னும் பல விரிவுகளை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கும் மோனிஷா. அடுத்த ஆண்டில் அமெரிக்கா அல்லது கனடாவில் ஒரு புது கிளையை நிறுவயிருக்கிறார்.

ஆக்கம்: சாஸ்வதி முகர்ஜி |தமிழில்: நித்யா