விரிவுரையாளர் முதல் கேரளாவின் முதல் பெண் டிஜிபி வரை: ஸ்ரீலேகா உயர்ந்த இடத்தை அடைந்த கதை!

0

கேரளாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்.ஸ்ரீலேகா, அம்மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி ஆக நியமிக்கப்பட்டார். அவர் பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீலேகா மீது ஊழல் புகார் போடப்பட்டு, துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, பலவகைகளில் அவரை பதவி இறக்கம் செய்ய பலர் சூழ்ச்சி செய்தனர். ஆனால் அவரின் அசாத்திய தைரியம் மற்றும் வைராக்கியத்தால் இன்று இத்தகைய உயர் பதவியை ஒரு பெண்ணாக வகித்து பெருமை சேர்த்துள்ளார்.

பட உதவி:  The Week
பட உதவி:  The Week

1987-ல் ஸ்ரீலேகா, முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆகி கேரளாவில் பிரபலமானார். ஐபிஎஸ் ஆவதற்கு முன் இவர் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். பின் ரிசர்வ் வங்கியில் பணியில் இருந்துள்ளார். 

ஸ்ரீலேகா ஐபிஎஸ் ஆனதும், திருச்சூர், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் காவல்துறை தலைமை அதிகாரியாக பதவி வகித்துள்ளார். பின்னர் அவர் சிபிஐ-ல் சேர்ந்தார். ‘ரெயிட் ஸ்ரீலேகா’ என்ற பட்டம் வரும் அளவிற்கு அவர் துணிச்சலான பல சிபிஐ ரெய்டுகளை செய்துள்ளார். அதன் பயனாக அவர் குற்றப்பிரிவின் ஐஜி-யாக நியமிக்கப்பட்டார். 

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான கருத்தரங்கில் காவல்துறையின் சார்பில் யூஎன்-ல் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ளார் ஸ்ரீலேகா. அவர் ஸ்காட்லாண்ட் யார்ட் காவல்துறையினரிடம் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார் என்பது சிறப்பு தகவல். 

ஸ்ரீலேகா ஒன்பது புத்தகங்களை மலையாளத்தில் எழுதியுள்ளார். அதில் மூன்று புத்தகம், குற்றங்கள் தொடர்பான ஆராய்ச்சியின் அடிப்படையில், கொலையாளியின் தரப்பு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கஷ்டங்களை எடுத்துரைப்பதாக எழுதியுள்ளார். ஸ்ரீலேகாவின் தந்தையும் ஒரு விரிவுரையாளர் என்பதால் அவர் எழுத்து மற்றும் புத்தகங்களுக்கு தன் நேரத்தை செலவிடுவதை தவிர்ப்பதில்லை.

தற்போதைய பதவிக்கு முன், ஸ்ரீலேகா ஏடிஜிபி-ஆக பணிபுரிந்தார். பலருக்கு மத்தியில் அவரின் திறமை காரணமாக அந்த பதவிக்கு தேர்வானார். மேலும் சிறப்பான பணிக்காக குடியரசுத்தலைவர் விருதும் பெற்றுள்ளார். 

ஸ்ரீலேகா இதற்கு முன் போக்குவரத்துத்துறை ஆணையராக இருந்தபோது சிறப்பாக செயல்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக கணிசமான சாலை விபத்துகள் குறைந்தது அவரது பணிவாழ்க்கையில் மற்றொமொரு சாதனை ஆகும்.

கட்டுரை: Think Change India