'திறந்தவெளி கழிப்பறை இல்லாத முன்மாதிரி கிராமம்'- மதுரையில் 90 வயது தம்பதியின் மகத்துவம்!

0

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மதுரைக்கு 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அச்சம்பட்டி எனும் கிராமம் 'திறந்தவெளி கழிப்பறை இல்லாத கிராமமாக' அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஊரக வளர்ச்சித்துறையின் ஒரு அங்கமான 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் முன்னோடி கிராமமாக அச்சம்பட்டி அறிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. ஆனால் இந்த புகழுக்கும் புறட்சிக்கும் பின்னணியில் இருந்தது 90 வயதடைந்த ஒரு ஜோடி என்பது பலர் அறியாத செய்தி. 

"இது மிகக் கடினமான செயலாக இருந்தது," என்று பஞ்சாயத்து தலைவர் முருகன், டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியில் கூறி இருக்கிறார். இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் அந்த கிராமத்தில் ஒருசில வீடுகளில் மட்டுமே கழிவறை வசதி இருந்துள்ளது. பெரும்பாலானோர் வெட்டவெளியிலும், நீர் நிலைகளிலும் தங்கள் அன்றாட கடனை கழித்துவந்தனர். 

"அவர்களை கழிவறைகளை உபயோகிக்க வற்புறுத்தவேண்டி இருந்தது."

கழிவறை கட்டுவோருக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பு 12000 ரூபாய் மானியமாக வழங்கும் என்ற அறிவிப்பு இதற்கு உதவியாக இருந்தது. மதுரையைச் சேர்ந்த தேவகி மருத்துவமனையின் உரிமையாளர் இந்த கிராமத்தில் வளர்ந்தவர் என்பதால் கழிவறைகளில் சூரியஒளி விளக்குகளை பொருத்த நிதியுதவி செய்துள்ளார். மேலும் மிகவும் வறுமையில் உள்ள குடும்பங்களின் வீடுகளில் கழிவறை கட்டும் செலவையும் ஏற்றுக்கொண்டார். 

373 வீடுகள் உள்ள அந்த கிராமத்தில் 369 வீடுகளில் தனி கழிவறைகளும், மீதம் உள்ள வீடுகள் பொது கழிவறைகளைக் கட்டிக் கொண்டு உள்ளனர். 369 வீடுகளில் 148 கழிவறைகளில் சூரியஒளி பொருத்தப்பட்டுள்ளது. கிராம நிர்வாகம் அடுத்தகட்டமாக திடக்கழிவு மேலாண்மை மற்றும் மக்கும் குப்பை நிர்வகிப்பில் கவனம் செலுத்த உள்ளது.

DRDAவின் திட்ட இயக்குனர் ரோஹினி ராம்தாஸ் கூறுகையில், 

"இத்திட்டத்தின் வெற்றி அந்த கிராமவாசிகளின் முயற்சியால் மட்டுமே சாத்தியமானது. கிராமத்தினர் தங்களுக்குள் குழு ஒன்றை அமைத்து, மற்ற கிராமத்தினர் தங்கள் ஊருக்குள் வந்து மலம் கழிப்பதையும் தடுத்து வருகின்றனர். அதிகாலை 4 மணிக்கு ஊரில் சுற்றிவந்து வெட்டவெளியில் மலம் கழிப்போரை துரத்திவிடுகின்றனர்," என்றார்.

முன்மாதிரிகள் பலர் இந்த திட்டத்தை வெற்றிபெற செய்ய முக்கிய பங்கு ஆற்றியுள்ளனர். ஆரம்பக்கட்டத்தில் அச்சம்பட்டி கிராமத்தினர், கழிவறைகளில் மலம் கழிப்பது தங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துவதாகவும், வீடு எனும் தூய்மையை கெடுத்துவிடும் என்று பல சாக்குகள் சொல்லி இத்திட்டத்தை தட்டிக்கழிக்க முயன்றனர். ஆனால் 90 வயதான அலகு அம்பலம் என்பவரும் அவரது மனைவி அங்கம்மாளும் இணைந்து முதல் ஆளாக தங்கள் வீட்டில் கழிவறையை கட்டி கிராமத்தினருக்கு முன்னோடியாக மாறினர். பிள்ளைகளால் கைவிடப்பட்ட இந்த வயதான தம்பதியினர் ஆடுகள் மேய்த்து வருமானம் ஈன்று வருகின்றனர். "வீட்டிற்குள் கழிவறை இருப்பது வசதியாக உள்ளது. கிராமமும் ஆரோக்கியமாக இருக்கும்," என்கிறார் அம்பலம். 

கட்டுரை: Think Change India | தமிழில்: இந்துஜா ரகுநாதன்