மாதவிலக்கை இலகுவாக்கும் ‘பீயிங் ஜூலியட்’

2

“ போர்டு ரூமிற்கும், வீட்டிற்கும் அல்லது குழந்தைகளின் ஆசிரியர் சந்திப்பிற்குமாய் சுழலும் நவீன யுவதிகளின் இன்றைய வாழ்க்கை முறையில் தங்களுக்கென நேரம் கிடைப்பதே இல்லை.இதனால், பல நேரங்களில்,மறுநாள் தொடங்கவிருக்கும் மாதவிலக்கைப் பற்றிக் கூட நினைவிருக்காது” என்கிறார் ராஷி பஜாஜ், "பீயிங் ஜூலியட்" (Being Juliet) நிறுவனர்.

‘பீயிங் ஜூலியட்’டின் மூலமாக இதற்கு தீர்வும் கண்டிருக்கிறார் ராஷி. சந்தா மாதிரியில் இயங்கும் இந்த திட்டம், மாதந்தோறும், சானிடரி நாப்கின்கள் மற்றும் அதையொத்த பொருட்களின் தொகுப்பையும், சிறு சிறு பரிசுப் பொருட்களையும் கொண்டு மாதத்தின் ‘அந்த’ வலி நிறைந்த நாட்களை இனிமையானதாகவும் எளிமையானதாகவும் கடக்க வைக்கிறது.

தொழில்முனைவு இவருக்கு புதிதல்ல. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கம்பளிகளும், விரிப்புகளும் செய்து கொடுக்க, இவர் தொடங்கிய ‘கார்பெட் கொட்டுர்' (Carpet Couture) தான் முதல் தொழில் முயற்சி. ராஷியினுடைய கணவரும் ஒரு முனைப்பான தொழில்முனைவர் தான். ராஷியை தொழில் முனைவை நோக்கி நகர்த்தி சென்றதும் அவர் தான். முழுக்க முழுக்க ராஷியின் முயற்சிகளால் உருவாக்கப்பட்ட ‘கார்பெட் கொட்டுருக்கு பிறகு அவர் தன் தொழில் பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறார். “ உண்மையில், என் கணவரின் உற்சாகமும், இயக்கமும் தான் என்னை ஒரு எளிய நபரிலிருந்து வெற்றிகரமான தொழில்முனைவராக மாற்றி இருக்கிறது” என்கிறார்.

சிறு வயதில், வாரனாசி அருகே சிறிய ஊரில் வளர்ந்த ராஷி படிப்பில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்திருக்கிறார். அநேகமாக, நாட்டின் அனைத்து இடங்களிலும் படித்தும், பணி புரிந்தும் இருக்கிறார் ராஷி. பள்ளிக் கல்விக்காக நைனிடாலிலுள்ள போர்டிங் பள்ளிக்கு சில காலமும், டெஹ்ராடூனிற்கு சில காலமும் அவரது பெற்றோர் அனுப்பி வைத்தனர். அதிக மதிப்பெண்கள் பெற்று டெல்லி பல்கலைக்கழகத்தின் ‘லேடி ஸ்ரீ ராம்’ கல்லூரியில் வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். இந்த கல்லூரி காலத்தில் தான், ராஷி புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு இருந்த உலகத்தையே கண்டுபிடித்திருக்கிறார். இருப்பினும், முதல் தலைமுறையைச் சேர்ந்த தொழில்முனைவராக இருந்த ராஷியின் தந்தையோ, மேற்படிப்பின் முக்கியத்துவத்தையும், ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணி புரியும் போது உருவாகும் ஒழுக்கத்தையும் எடுத்துக் கூறியிருக்கிறார். எனவே, புனேவில் எம்.பி.ஏ முடித்தக் கையோடு, ராஷி, ஹைதராபாத்திலுள்ள இன்ஃபோசிஸில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். பின்னர், திருமணம் முடித்து டெல்லிக்கு சென்றார்.

ராஷியின் இரண்டு தொழில் முயற்சிகளுமே சந்தையில் இருக்கும் வெற்றிடத்தை உணர்ந்து உருவாக்கப்பட்டது. ராஷி தொழில்முனைவில் இறங்கிய போது, குடும்பத்தில் இருவரில் ஒருவருக்காவது நிலையான வேலை ஒன்று தேவை என்று பலரும் எச்சரித்துள்ளனர்.

“நிறைய சிந்தித்தப்பிறகு நாங்கள் அதை மறுத்தோம். இரண்டு தொழில் முயற்சிகளோடு வாழ்க்கை பண ரீதியான சவால்களும், மன அழுத்தம் நிறைந்ததாகவும் மாறலாம். அந்த நிலையில், ஒருவர், உறுதியாக இருக்க வேண்டும். என்னுடைய திட்டம், வருகின்ற ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வது தான். திட்டங்கள் இனிமையானவை தான், ஆனால், வளைந்து கொடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சில சமயங்களில் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருக்கும், அப்பொழுது நான் அதை கவனிப்பேன். தன்னம்பிக்கையான எண்ணமே முக்கியம்”.

இன்று, ‘கார்பெட் கொட்டுர்’ நல்ல நிலையில் சென்று கொண்டிருக்கையில், ராஷி, மகிழ்ச்சியாய், ‘பீயிங் ஜூலியட்’டை கவனிக்கிறார்.

வாடிக்கையாளர்களுக்கு இந்த கருத்தின் மதிப்பை புரிய வைப்பது தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. இதைப் பற்றி மேலும் கூறுகையில், “என் இந்த தொழில்முனைவு முயற்ச்சியை அவர்களுக்கு புரிய வைத்து என் ப்ராண்டை பற்றி விவரிக்க அவர்களின் அப்பாய்ண்மென்ட்டை பெறுவதுதான் சவால்" என்கிறார். கடைசி நேரத்தில் அவசரமாக மருந்து கடை சென்று பேடுகளை வாங்கும் பெண்களுக்கு, ஐந்து நாட்களுக்கு முன்னரே, சானிடரி பொருட்களை வீட்டுக்கே அனுப்பி வைத்தேன். இது போல் பெண்களை கவர பல யுத்திகளை கையாண்டேன். பாரம்பரியமான சந்தைக்காரர்களுக்கு, பொருட்களை சந்தைப்படுத்த இது வழக்கமான வழி இல்லை. இருப்பினும், பல பெண்களை உட்கார வைத்து நான் என் முயற்ச்சியை பற்றி புரிய வைத்து பிறகு பெண்களுக்கு என் பணி மிகவும் பிடித்துப் போனது”, என்கிறார்.

ராஷியின் குடும்பமும், வாழ்க்கைத் துணையும், இந்த பயணம் முழுக்க மிகவும் ஆதரவாகவே இருந்திருக்கிறார்கள். “ நான் வளர்ந்துக் கொண்டிருந்த காலத்தில், தினமும் பதினெட்டு மணி நேரம் உழைக்கும் என் தந்தைக்கு, என் தாய், மிக உறுதியான ஆதரவாகவும், நேர்மறையாகவும் இருப்பதைக் கண்டேன். அது, எனக்கு இருத்தலின் ஒரு பகுதி ஆயிற்று. இங்கே என் கணவரோடும், அதே சூழல் தான். நான் என் தொழிலை நடத்தும் விதம், இவர்களுக்கு பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது” என்கிறார் ராஷி.

ராஷியைப் பொறுத்தவரையில்,பெண்களின் பணித்துறைக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும் ஒரு மாற்றம் இந்த சமூகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும்,ஒரு பெண் தொழில்முனைவராக, விமானத்திலோ, டாக்சியிலோ, இரவில் பயணிப்பது போன்றவைகள் இன்னும் சவாலாகத்தான் இருக்கிறன என்று உணர்கிறார். ராஷி, மேலும் மேலும் பெண்களை திருப்தி படுத்துவதை எதிர்நோக்கி இருக்கிறார், அதற்கான ஊக்கம் அவருடைய வாடிக்கையாளர்களிடம் இருந்தே வருகின்றது.

“சில சமயங்களில் எங்களை பாராட்டி உணர்ச்சிகரமாக வரும் இ-மெயில்களைப் பார்த்தால், அனுப்பியவரை கட்டி அணைத்துக் கொள்ளலாம் போல இருக்கும்”, என்கிறார், ராஷி, முகம் மலர்ந்து.