சரவண பவன் ஊழியர்களின் நாணயத்துக்குக் கிடைத்த பரிசும், பாராட்டுக்களும்...

வாடிக்கையாளர் மறந்து விட்டுச் சென்ற 25 லட்ச ரூபாய் அடங்கிய பையை சரவண பவன் வெயிட்டர் ரவி, ஹோட்டல் மேனேஜர் உதவியுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

0

சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சரவணபவன் உணவகத்து ஊழியர்கள் தங்களது நேர்மையான செயலால் ஒரே நாளில் பிரபலமாகி, காவல்துறை உட்பட பலரது பாராட்டுக்களைப் பெற்று வருகின்றனர்.

தமிழகத்தின் பிரபல முன்னணி உணவகங்களில் ஒன்று சரவணபவன். நாடு முழுவதும் இதற்கு கிளைகள் உள்ளன. அதில் ஒன்றான சென்னை அண்ணாநகரில் உள்ள உணவகத்தில், கடந்த 31ம் தேதி காலை 9 மணியளவில், சாப்பிட வந்த இரண்டு வாடிக்கையாளர்கள், தாங்கள் அமர்ந்து சாப்பிட்ட இடத்தில் பிளாஸ்டிக் கவர் ஒன்றை மறந்து விட்டுச் சென்றனர்.

பட உதவி: தி நியூஸ் மினிட்
பட உதவி: தி நியூஸ் மினிட்

அந்த வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு உணவு பரிமாறியவர் வெயிட்டர் ரவி என்ற இளைஞர். அவர், வாடிக்கையாளர்கள் சென்றபின், அவர்களது மேஜையில் இருந்த பிளாஸ்டிக் கவரைக் கவனித்துள்ளார். அதில் ஏதோ துணி அல்லது பேப்பர் பொருட்கள் இருக்கிறதென நினைத்த ரவி அதனை தனது உணவக மேலாளர் லோகநாதனிடம் அளித்தார்.

அவரும் வாடிக்கையாளர் திரும்பத் தேடி வருவார், அப்போது கொடுத்து விடலாம் என நினைத்து தனது மேஜை டிராயரில் அதனை வைத்து விட்டார். ஆனால், இரவு மணி ஒன்பது ஆகியும் அப்பையைக் கேட்டு எவரும் வரவில்லை. எனவே, அதனை எடுத்துப் பிரித்துப் பார்த்த லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் கட்டுக்கட்டாக ரூ. 2000 நோட்டுகள் இருந்தது. 

உடனடியாக இது தொடர்பாக தனது உணவக உரிமையாளர் சரவணனிற்கு அவர் தகவல் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக பொதுமேலாளர் பாலுவிடம் அவர்கள் தெரிவித்ததோடு, அந்த பணப்பையையும் அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சரவண பவன் பொது மேலாளர் பாலு
சரவண பவன் பொது மேலாளர் பாலு

இது தொடர்பாக பாலு கூறுகையில், 

“எனக்கு பணப்பை குறித்து இரவு ஒன்பது மணி அளவில் போனில் தகவல் கிடைத்தது. உடனடியாக அண்ணாநகர் சரவணபவன் கிளைக்கு விரைந்தேன். என்னிடம் அவர்கள் பணப்பையை ஒப்படைத்தனர். நான் உடனடியாக 11 மணியளவில் இது குறித்து அண்ணாநகர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தேன். பின்னர் பையை காலையில் போலீசாரிடம் நேரில் ஒப்படைப்பது என நாங்கள் முடிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து என்னுடைய லாக்கரில் அப்பையை பத்திரப்படுத்தினேன்,” எனத் தெரிவித்தார்.

லாக்கரில் வைப்பதற்கு முன்னதாக பையில் இருந்த மொத்தப்பணத்தையும் அவர்கள் எண்ணிப் பார்த்துள்ளனர். அதில் ரூ. 25 லட்சம் இருந்துள்ளது. அனைத்தும் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள். 23 பண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதில் இருந்தது என்று தி ஹிந்து நாளிதழ் தெரிவிக்கிறது.

அதன் தொடர்ச்சியாக மறுநாள் காலை பணப்பையுடன் பாலு, லோகநாதன் மற்றும் ரவி ஆகியோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்தனர். கூடவே, சம்பவத்தன்று சிசிடிவியில் பதிவான காட்சிகளும் ஒப்படைக்கப்பட்டது.

“சம்பவத்தன்று காலை 9 மணியளவில் முதலில் ஒருவர் சாப்பிட வருகிறார். பின்னர் சிறிது நேரத்தில் மற்றொருவர் சாப்பிட வருகிறார். நான்கு பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய இருக்கையில் அமர்ந்து இருவரும் சாப்பிடுகின்றனர். அப்போது அவர்கள் அருகில் பிளாஸ்டிக் கவர் ஒன்று உள்ளது. பின்னர் சாப்பிட்டு முடித்ததும், வந்தது போலவே இருவரும் தனித்தனியாக சென்று விடுகின்றனர். சிறிது நேரம் கழித்துத் தான் அவர்கள் டேபிளில் இருந்த கவரை கவனித்துள்ளார் ரவி. பின்னர் அதனை எடுத்து அவர் லோகநாதனிடம் ஒப்படைத்துள்ளார். இவை அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதனை தான் சாட்சிக்காக நாங்கள் போலீசில் ஒப்படைத்துள்ளோம்,” என்கிறார் பாலு.

ஏழ்மையான நிலையிலும், வாடிக்கையாளர்கள் விட்டுச்சென்ற பணத்தை உணவகத்தின் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்த இளைஞர் ரவியை, சரவணபவன் ஹோட்டல் நிர்வாகமும், போலீசாரும் பாராட்டியுள்ளனர். ரவியை நேரில் அழைத்துப் பாராட்டிய சரவணபவன் உரிமையாளர் சரவணன், அவருக்கு வாட்ச் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். கூடவே, ரவியின் நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரமாக அவருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை ஆணையரிடம் பாராட்டு பெரும் ரவி
காவல் துறை ஆணையரிடம் பாராட்டு பெரும் ரவி

இதேபோல், சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன், ரவி, பாலு, லோகநாதன் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது, நேர்மையாக நடந்து கொண்டதற்காக ரவிக்கு ரூ. 3 ஆயிரம் வெகுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

“பணத்தை தவறவிட்ட இருவரும் சேர்ந்து ஒரு காபியும், மினி டிபன் ஒன்றும் மட்டுமே ஆர்டர் செய்துள்ளனர். பில்லிற்கும் பணமாகவே கொடுத்துள்ளனர். கார்டில் பணம் செலுத்தியிருந்தால் அதன் மூலம் அவர்கள் யார் எனக் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால், சிசிடிவிக் காட்சிகளைப் பார்க்கும்போது அவர்கள் நிஜமாகவே பணத்தை தவறவிட்டார்களா இல்லை வேண்டுமென்றே பணப்பையை விட்டுச் சென்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பணம் இரண்டு வெளிநாட்டு பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது,” என்கிறார் பாலு.

பொதுவாக வாடிக்கையாளர்கள், பர்ஸ் மற்றும் போனை மறந்துவிட்டு செல்வதும், அதை மீண்டும் வந்து கேட்டு எடுத்துச்செல்வதும் வழக்கமான ஒன்று. அப்படி தவறி விட்டுச்செல்லும் பொருளை மேனேஜரிடம் வெயிட்டர்கள் ஒப்படைத்துவிடுவார்கள். ஆனால் இதுபோன்று கட்டுக்கட்டாக பணத்தை விட்டுச்சென்று அது திருப்பிக் கிடைப்பதென்பது ஆச்சர்யமான ஒன்று.

ஒரே இரவில் சரவண பவன் ஊழியர்களான ரவி மற்றும் லோகனாதன் பிரபலமடைந்திருப்பது பலரையும் நேர்மையுடன் வாழ ஊக்கப்படுத்தியுள்ளது.

Related Stories

Stories by jayachitra