ஆலோசகராக இருந்து உணவுத் துறைக்கு மாறி வளர்ச்சியடைந்த அம்பிகா செல்வத்தின் வெற்றிக் கதை!

0

உணவு என்பது ஒருவித உணர்வு. இந்த உணர்வை அனுபவிப்பது அம்பிகா செல்வத்திற்கு மிகவும் பிடித்துப்போனது. 

”நான் வளர்ந்து வந்த பருவத்தில் வாழ்க்கையில் பெரிதாக சாதித்து வெற்றியடையவேண்டும் என்கிற எண்ணம் இருந்ததில்லை. வாழ்க்கையில் எது வேண்டும் என்பதைக் காட்டிலும் எது வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தேன்,” என்கிறார் அம்பிகா. 

12 ஆண்டுகள் மின் கற்றல் ஆலோசகராக பணியாற்றிய பிறகு இறுதியாக ஃபுட் ஸ்டைலிங் பிரிவில் தனக்கு ஆர்வம் இருந்ததைக் கண்டறிந்தார். Lingering Aftertaste என்கிற வலைப்பக்கத்தையும் உருவாக்கினார்.

இதுவரை கடந்து வந்த பாதை…

அம்பிகா பல்வேறு கலாச்சாரங்களிடையே வளர்ந்துள்ளார். “அப்பாவின் பணியில் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படும். எனவே ஒவ்வொரு மூன்று நான்கு வருடங்களுக்கும் நாங்கள் வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்வோம். இதனால் வெவ்வேறு கலாச்சாரங்களை சந்தித்தேன். இது என் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்று விவரித்தார். பரோடாவில் பி.காம் படித்தார். அதன் பிறகு நொய்டாவிற்கு மாற்றலானார். இங்கு ஒரு கால் செண்டரில் தனது பணி வாழ்க்கையைத் துவங்கினார். 

உற்சாகமான கால் செண்டர் பணி வாழ்க்கை குறித்து கேள்விபட்டிருந்ததால் அதை முயற்சிக்க விரும்பினேன். ஆனால் தொழில்நுட்ப உதவி நிர்வாகியாக இருந்து விரைவாகவே பயிற்சிப் பிரிவிற்கு மாற்றலானார். அப்போதிருந்து Lingering Aftertaste துவங்கும் வரை கற்றல் மற்றும் மேம்பாடுப் பிரிவில் தொடர்ந்து பணியாற்றினார்.

திருமணத்திற்குப் பிறகு பெங்களூருவிற்கு மாற்றலானார். அந்த நேரத்தில் சமையல் செய்வதிலும் வெவ்வேறு உணவு வகைகளை சமைக்க முயல்வதிலும் அதிக நேரம் செலவிட்டார். இது குறித்து நினைவுகூறுகையில், 

“2011-ம் ஆண்டு ’ஜூலி அண்ட் ஜூலியா’ திரைப்படத்தைப் பார்த்தேன். அத்துடன் மாஸ்டர்செஃப் இந்தியா நிகழ்ச்சியையும் பார்க்கத் துவங்கினேன். இவை இரண்டுமே என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அதிக சமையல் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்த்தேன். சமையல் புத்தகங்களைப் படித்தேன். அதிகம் சமைத்தேன்," என்றார். 

அம்பிகா தொடர்ந்து இவ்வாறு சமையலில் கவனம் செலுத்தி வந்தார். சில சமயம் அதிகம் சமைத்து முயற்சிப்பதற்காகவே சிலரை வீட்டிற்கு அழைத்தார். உணவு அவருக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக மாறியதை உணர்ந்தார். எனவே 2014-ம் ஆண்டு உணவுப் பிரிவில் செயல்படும் நோக்கத்துடன் தனது 12 வருட பணி வாழ்க்கையை விட்டுவிடத் தீர்மானித்தார். அது எளிதான விஷயமாக இருக்கவில்லை. அம்பிகா விவரிக்கையில், 

உங்களுக்கு ஆர்வம் இருக்கும் பகுதியில் செயல்படுவதே சிறந்தது. ஆனால் உங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் முறையாக திட்டமிடவும் நேரத்தை ஒதுக்கவேண்டும். அதற்கு பொறுமை அவசியம். இந்த பயணத்தை எப்படி ரசிப்பது என்பதை முதலில் கற்றுக்கொள்ளவேண்டும்,” என்றார்.

சாகச பயணம்

உணவு மீதிருந்த ஆர்வம் காரணமாக அம்பிகா தனது ஆலோசகர் பணியை துறந்தபோதும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து எந்தவித திட்டமும் அவரிடம் இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர் துவங்கிய வலைப்பக்கம் மட்டுமே ஒரே ஒரு பதிவுடன் இருந்தது. 

”நான் தயார்நிலையில் இல்லாதபோது அவசரமாக உருவாக்கிய பக்கம் அது. என்னுடைய அம்மா நான் சமையல் புத்தகம் ஒன்று எழுதவேண்டும் என வலியுறுத்திக்கொண்டே இருப்பார். அவர் இறந்து பிறகு இந்த விஷயம் தொடர்ந்து என் நினைவில் வந்த வண்ணம் இருந்தது. எனவே அந்த நினைவிற்கு மதிப்பளிக்கும் வகையில் என்னுடைய பழைய வலைப்பக்கத்தை Lingering Aftertaste என்கிற பெயரில் புதுப்பித்து தொடர்ந்து பதிவிட்டேன்.” 

அப்போதுதான் அம்பிகா ஃபுட் ஸ்டைலிங் மற்றும் ஃபோட்டோகிராஃபிங் பிரிவில் செயல்படத் துவங்கினார். அவர் தனது முயற்சியைத் துவங்கிய தருணம் குறித்து நினைவுகூறுகையில், “நான் பதிவிடும் படங்களுடன் ஒரு கதையை பகிர்ந்துகொள்ளலாம் என்பதை அறிந்தேன். அப்போதுதான் ஃபோட்டோவிற்காக ஃபுட் ஸ்டைலிங் செய்யும் முறை குறித்து தெரிந்துகொண்டேன். அதில் அதிகம் ஈடுபடத் துவங்கியதும் இந்தப் பிரிவை அதிகம் விரும்பினேன்.”

திருப்புமுனை

அம்பிகா தொடர்ந்து வலைப்பதிவிட்டு தனது ஃபுட் ஸ்டைலிங் திறனை மெருகேற்றி வந்தார். 

”நான் என்னுடைய பாணி இதுதான் என்பதை புரிந்துகொள்ளத் துவங்கினேன். என்னுடைய பார்வையாளர்கள் அதிகரித்து வந்தனர். பார்ட்னர்ஷிப் மற்றும் ப்ராஜெக்டிற்காக கோரிக்கைகள் வந்தன. என்னுடைய முதல் பணியை மேற்கொள்ள கையொப்பமிட்டேன். அன்று முதல் என்னுடைய முடிவை நினைத்து நான் வருந்தியதோ கேள்வியெழுப்பியதோ இல்லை.”

இன்று சஃபோலா, மையாஸ், ஸ்விக்கி, ப்ரெஸ்டீஜ் டிடிகே, ஓபராய், தாஜ் காரவல்லி, ஏர்ஏசியா, பார்பிக்யூ நேஷன், Big Brewsky, அப்போலோ, கோடாக் லென்ஸ் / ஐவேர், சாய் பாயிண்ட், Au bon pain, உள்ளிட்ட நிறுவனங்களுடன் பணியாற்றுகிறார் அம்பிகா. அத்துடன் உதயா சானலில் வெளியாகும் சமையல் நிகழ்ச்சியான பர்ஜாரி போஜனா நிகழ்ச்சிக்கு கலை இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பும் அம்பிகாவிற்கு கிடைத்துள்ளது. 

ஆனால் அம்பிகா எளிதாக வெற்றியடையவில்லை. அவர் தனது பயணத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க நேர்ந்தது. 

“வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்களை நிர்ணயிப்பதே என்னுடைய மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. ஆனால் தொடர்ந்து இதில் ஈடுபட்ட பிறகு இதை எப்படி சமாளிப்பது என்பதைத் தெரிந்துகொண்டேன்,” என்றார்.

வருங்கால திட்டம்

திரைப்படங்களில் அதிக ஆர்வமுள்ள இவர் தொடர்ந்து புதிய நுட்பங்களையும் பாணியையும் ஆராய்ந்து வந்தார். அம்பிகா உற்சாகமாக, “இணைந்து செயல்படும் நோக்கம் உள்ளது. உணவு அல்லது சமையல் பகுதியைத் தாண்டி படைப்பாற்றல் சிந்தனை கொண்டோருடன் ஒன்றிணைந்து வழக்கத்திற்கு மாறான ப்ராஜெக்டுகளில் ஈடுபட திட்டமிடுகிறேன். ஒரு மிகப்பெரிய ப்ராண்டுடன் இணைந்து இந்த வருடம் ஐந்து பயிலரங்குகளை திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.

அம்பிகா தனது வலைப்பக்கத்தை மீட்டெடுத்து சில மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் விவரம் பின்னர் தெரியவரும். “நான் என்னுடைய பணியில் மும்முரமாக இருந்து வருவதால் என்னுடைய வலைப்பக்கத்தில் தொடர்ந்து பதிவிட போதுமான அவகாசம் இல்லை. ரெசிபி வலைப்பக்கத்திலிருந்து மாறுபட்ட பக்கமாக மாற்ற விரும்புகிறேன். எனினும் தொடர்ந்து ரெசிபிக்கள் அதில் ஒரு பகுதியாக இடம்பெறும். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு உணவுப் பகுதியிலேயே கவனத்தை திசைதிருப்புவேன்,” என்றார்.

மக்கள் வெவ்வேறு விஷயங்களை முயற்சிக்க முன்வருவதால் உணவுத் துறையில் செயல்படுவது சிறப்பான தருணமாக உள்ளது. போலியான உணவு மற்றும் அசலான உணவு குறித்த தொடர் விவாதங்கள் இருந்துவரும் நிலையில் அனைத்தும் சரியான திசையில் மாறிவிடும் என அம்பிகா நம்பிக்கை தெரிவிக்கிறார். 

என்னுடைய வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்கும் போக்கை கடைப்பிடிக்கத் துவங்கியுள்ளனர். எனவே இது வரவேற்கத்தக்கது,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : தீபிகா சிங்கானியா