'திரைப்படங்களில் நடிப்பது ஒரு நிறுவனம் நடத்துவது போன்றது'-  ஷ்ரத்தா ஸ்ரீநாத் 

வழக்கறிஞராக இருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்புத்துறைக்கு வந்தது ஒரு சுவாரசிய கதை. அவர் வாழ்வில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளது. அண்மையில் கன்னட படத்திற்கு சிறந்த நடிப்பிற்கான பிலிம்பேர் க்ரிட்டிக்ஸ் விருதை பெற்றுள்ளார். 

0
”திரைப்படங்களில் நடிப்பது ஒரு நிறுவனத்தை நடத்துவது போன்றது. இதில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் நீங்கள்தான் பொறுப்பேற்கவேண்டும். கதாபாத்திரம், ஸ்கிரிப்ட் என அனைத்தையும் நீங்களே தீர்மானிக்கலாம்,” 

என்கிறார் வழக்கறிஞராக இருந்து நடிகையாக மாறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத். 27 வயதான இவர் தற்போது திக்மான்ஷு துலியாவின் அடுத்த படமான ‘மிலன் டாக்கீஸ்’ திரைப்படத்தில் நடிகர் அலி ஃபாசில் உடன் பணியாற்றி வருகிறார். இரண்டாவதாக நடிகர் ஆர் மாதவனுடன் ‘மாரா’ திரைப்படத்திற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு நடிப்புத் தொழிலில் ஈடுபடத் துவங்கிய இவர் ஒன்பது படங்களுடன் 2018-ம் ஆண்டு மிகவும் பரபரப்பாக காணப்படுகிறார். மணிரத்தினத்தின் ‘காற்று வெளியிடை’, விக்ரம் வேதா திரைப்படத்தில் பிரகாசமான கலம்காரி புடவைகளில் மாதவனின் மனைவியாகவும், வழக்கறிஞராகவும் காட்சியளித்தது முதல் மேக் அப் ஏதுமின்றி பெரிய கண்ணாடிகளுடன் வசதியான பேண்ட் அணிந்து நடிப்பது வரை ஷ்ரத்தா அனைத்தையும் சுலபமாகவே கையாள்கிறார். 

திரைப்படங்களில் நடிக்கும் கலையும் தியேட்டரில் நடிக்கும் கலையும் ஒன்றுதான் என்றாலும் மேடையில் நடிக்கும்போதான வெளிப்பாடு சற்றே மாறுபடுகிறது என்கிறார்.

”திரைப்படங்களில் காணப்படும் வெவ்வேறு உணர்வு ரீதியான வெளிப்பாடுகள் கடினமானது. ஒரு நடிகராக நீங்கள் கதையின் நிலை, மனநிலை போன்றவற்றை நீங்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இது ஒரு கூடுதல் பொறுப்பாகும்,” என்றார் ஷ்ரத்தா.
பட உதவி: Rohit Sabu
பட உதவி: Rohit Sabu

இது குறித்து மேலும் விவரிக்கையில் ஒரு நடிகராக நீங்கள் உங்களை சிறப்பாக வெளிப்படுத்திக்கொண்டு உங்களது தேவை குறித்து புரிந்து வைத்திருக்கவேண்டும். தியேட்டரில் ஸ்கிரிப்ட் தேர்வு, உடன் நடிக்கும் நடிகரின் விவரங்கள், தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் இல்லை. ஆனால் திரைப்படங்களில் அனைத்தும் முக்கியம். வெவ்வேறு தொடர் நிகழ்வுகள் அவரை சட்டத்துறையில் இருந்து திரைப்படங்களுக்கு மாறச் செய்தது.

அதிர்ஷ்ட்டம்

”2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதிதான் நான் கடைசியாக வழக்கறிஞராக பணியாற்றினேன்,” என்றார் ஷ்ரத்தா. ராணுவ குடும்பத்தைச் சேர்ந்த ஷ்ரத்தா, சில தொடர் நிகழ்வுகளே தன்னை நடிப்புத் துறையைத் தேர்ந்தெடுக்க வைத்தது என குறிப்பிட்டார். அவர் Decathlon-ல் சிறப்பாக பணிபுரிந்து வந்தபோதும் அவர் மகிழ்ச்சியாக இல்லை.

“என் மனதில் ஒரு மிகப்பெரிய குழப்பம் இருந்தது. நான் என்ன செய்கிறேன் என ஒவ்வொரு இரவும் வியந்து கொண்டிருந்தேன்.” 

அந்த சமயத்தில்தான் ஒரு கன்னட தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அவருக்கு இமெயில் வந்தது. அவரது சுயவிவரங்களை முகநூலில் பார்த்ததாகவும் ஒரு கன்னட திரைப்படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்புவதாகவும் அந்த இமெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

”இந்த வாய்ப்பின் உண்மைத்தன்மையைத் தெரிந்துகொண்டபின் அந்தக் கதாப்பாத்திரத்தின் தேர்விற்கான செயல்முறைக்குச் சென்றேன். அப்போதுதான் இதில் ஈடுபடுவதானால் என்னுடைய பணியை விட்டு விலகவேண்டும் என்பதை உணர்ந்தேன். ஏற்கெனவே இந்த எண்ணம் என்னுள் இருந்தது. ஆனால் இந்த முடிவை எடுப்பது கடினமாக இருந்தது. உண்மை எப்போதும் மாறுபட்டிருக்கும்,” என்றார்.

 பட உதவி: Rohit Sabu
 பட உதவி: Rohit Sabu

அப்போது அவர் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உணர்ந்திருந்ததால் நடிப்புத் துறையில் ஈடுபட இதை ஒரு சிறந்த வாய்ப்பாகவே கருதினார். பெற்றொருடன் கலந்துரையாடிய பிறகு இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.

”இரண்டு பணிகளையும் மாறி மாறி மேற்கொள்வது சோர்வளிப்பதாக இருந்ததால் எனக்கு பிடித்தமான பணியை மேற்கொள்ள விரும்புவதாக பெற்றோர்களிடம் தெரிவித்தேன்,” என்றார் ஷ்ரத்தா.

சட்டம் படிக்கத் துவங்கியபோது சட்டம் என்பது சக்தி வாய்ந்ததாகவும் அதிக பொறுப்பு நிறைந்ததுமாக இருக்கும் என்பதால் அவரால் உலகத்தையே மாற்ற முடியும் என நம்பியதாக அவர் தெரிவித்தார். ”சில பெரிய வழக்குகளில் வாதாடுவேன் என நினைத்தேன். ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல என்பதை விரைவிலேயே உணர்ந்தேன். அது சுவாரஸ்யமாக இல்லை. பல விஷயங்கள் ஞாபகசக்தியைச் சார்ந்தே இருந்தது,” என்றார்.

தியேட்டர் மீதான ஆர்வம்

”பத்தாம் வகுப்பிற்குப் பிறகு அறிவியல் படிக்கவில்லை. நான் வணிகவியல் மாணவி. தொழில்முறை படிப்பை மேற்கொள்ளவேண்டும் என விரும்பினேன். அதாவது குடும்பத்தில் இதுவரை யாரும் ஈடுபடாத ஒரு புதிய துறையில் கால்பதிக்க விரும்பினேன். இதற்கு சட்டம் பொருத்தமான துறையாக இருந்தது. சட்டம் மீது ஆர்வம் இல்லையென்றாலும் அது சுவாரஸ்யமாகவே இருந்தது,” என்றார் ஷ்ரத்தா.

சட்டப் பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு படிக்கும்போது அவரது ஆர்வம் குறையத் துவங்கியது. தியேட்டரில் ஆர்வம் ஏற்பட்டது. ஷ்ரத்தா பதினோறாம் வகுப்பு படிக்கும்போதே நடிப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. தற்போது அவருக்கு விருப்பமான பிரிவில் ஈடுபட வாய்ப்பும் கிடைத்துள்ளது.

”ஒரு விஷயத்தை சொல்வதற்கும் அதை நடைமுறையில் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. முதல் ஆண்டு நான் நகருக்குப் புதிதாக வந்திருப்பதைக் காரணம் காட்டினேன். அதன் பிறகு தூரத்தையும் பயண நேரத்தையும் காரணம் காட்டினேன். மூன்றாம் ஆண்டு வரை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். ஒரு நாள் முகநூலில் இம்ப்ரோக்லியோ ப்ரொடக்‌ஷன்ஸ் வாயிலாக நடிப்பதற்கான வாய்ப்பு குறித்து தெரியவந்தது. என் நண்பர் அதைப் பார்த்ததும் என்னை முயற்சிக்கச் சொன்னார். நானும் அங்கு சென்றேன்,” என்றார். 

அது இசை சார்ந்த படம் என்பதால் ஷ்ரத்தா நடனம், பாட்டு மற்றும் நடிப்பிற்கான தேர்விற்குச் செல்லத் தீர்மானித்தார். அவரது முதல் கதாப்பாத்திரம் பாடல் சார்ந்தது. ஆறு மாதங்கள் ஷ்ரத்தாவின் வாழ்க்கை ஒத்திகைகளில் கழிந்தது. 

“நாங்கள் மேடையில் அரங்கேற்றிய போது நான் சாதனை புரிந்த உணர்வு என்னுள் ஏற்பட்டது. என்னால் முடியும் என்பதை உணர்ந்தேன்.” 

முதன் முதலில் நீல் சைமனின் ‘குட் டாக்டர்’ நாடகத்தில் நடித்தார். அதில் ஷ்ரத்தா பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

முதலில் என்னுடைய நடிப்புத் திறன் மோசமாக இருந்ததை நான் அறிவேன். ஆனால் நான் என்னை மேம்படுத்திக் கொள்ள விரும்பினேன். தொடர்ந்து முயற்சித்தேன். என்னிடம் முன்னேற்றம் காணப்படுவதையும் என்னுடைய கதாப்பாத்திரத்தை சிரமமின்றி ஏற்று நடிப்பதையும் காணமுடிந்தது. இந்தக் கலையை சிறப்பாக புரிந்துகொண்டேன்,” என்றார் ஷ்ரத்தா.

ஆர்வம் இல்லாத சட்டத்துறை

ஷ்ரத்தா கல்லூரியை விட்டு வெளியேறியபோது சட்டப் பிரிவு அவருக்கானது அல்ல என நினைத்தார். படிப்பு முடிந்த உடனேயே நடிப்பில் ஈடுபட விரும்பினாலும் சிறிதளவு வருவாய் ஈட்டவேண்டும் என நினைத்தார்.

”ஐந்தாண்டு கல்லூரிப் படிப்பின்போது நான் பெற்றோரையே சார்ந்திருந்தேன். எனவே சட்டத்துறையில் செயல்படுவது குறித்து தீவிரமான சிந்திக்கவேண்டும் என நினைத்தேன்,” என்றார் ஷ்ரத்தா.

சென்சுரி ரியல் எஸ்டேட்டில் நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் வேறு வகையில் தீர்வு காணும் (non-litigation) துறையில் சேர்ந்தார். வழக்கறிஞராக தனது பணியை அவர் ரசிக்கவில்லை என்றாலும் ஒத்திகைகளில் அவருக்கு நிம்மதி கிடைத்தது. எனினும் ஷ்ரத்தாவின் அடுத்த முயற்சியான Decathlon நிறுவனத்தின் பணி மாறுபட்டதாக இருந்தது.

”நான் என்னுடைய பணியை ரசித்தேன். மிகப்பெரிய ப்ராஜெக்டுகளை கையாண்டேன். நிறைய பயணித்தேன். நான் பணியாற்றிய குழு தனித்துவமனாதாகவும் மாறுபட்டதாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. நான் பணியில் மும்முரமாக இருந்தேன். அடிக்கடி நாடக ஒத்திகைக்குச் செல்ல முடியவில்லை. எனவே என்னுடைய மேலதிகாரியிடம் சென்று இரண்டு பணியிலும் ஈடுபட அனுமதி கேட்டேன். இதனால் பணி பாதிக்காதவரை எந்தப் பிரச்சனையும் இல்லை என்றார்,” என்றார் ஷ்ரத்தா.

இது ஷ்ரத்தாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. சிறப்பான பணி, ஒத்துழைக்கும் சக ஊழியர்கள், இருப்பினும் அவர் மனது அதில் முழுமையாக ஈடுபடவில்லை. பின் நடிப்பே வாழ்க்கை என தேர்ந்தெடுத்து, தன் முடிவு குறித்து அவர் வருந்தவில்லை. தற்சமயம் ஷ்ரத்தா தனது புதிய சினிமா ப்ராஜெக்டுகளிலும் புதிய கதாப்பாத்திரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் :ஸ்ரீவித்யா