பூக்களை சுத்தப்படுத்தி, பூமியை சுத்தப்படுத்தும் மதுமிதா பூரி!

0

இப்படித்தான் இந்தக் கதை தொடங்கியது

டெல்லிவாசியான மதுமிதா பூரி தனது அனுபவத்தை இப்படிப் பகிர்ந்து கொள்கிறார், ”நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகே ஒரு சிறு கோயில் இருந்தது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடப்பது போல, இங்கும் பூஜை புனஸ்காரங்களும் கடவுள் சிலைகளுக்கு பூ அலங்காரமும் நடக்கும். தினமும் காலையில் அந்தக் கோவில் பூசாரி பழைய பூக்களை எடுத்து விட்டு புதிய பூக்களால் தெய்வச் சிலைகளை அலங்கரிப்பார். கோவில் பிரகாரங்களில் உள்ள பழைய பூ அலங்காரங்களை அகற்றி விட்டு புதிதாக அலங்கரிப்பார். பழைய காய்ந்து போன பூக்களை எல்லாம் அருகில் இருந்த யமுனை நதியில் கொண்டு போய்க் கொட்டுவதற்கென்றே அவர் ஒருவரை பணியமர்த்தி இருந்தார். அவர் அந்தப் பழைய பூக்களை கொண்டு போய் யமுனையில் கொட்ட, அது அந்தக் குப்பைகளை தொலை தூரத்திற்கு அடித்துச் செல்லும். ஆனால் அந்த பணியாளர் ஒரு சோம்பேறி. அன்றன்றைய பூக்களை அன்றன்றைக்கு எடுத்துச் செல்ல மாட்டார். எங்கள் வீட்டின் முன் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் அந்தக் குப்பைகளை சேகரித்து வைத்து 10 நாட்களுக்கு ஒரு முறைதான் யமுனையில் கொண்டு போய்க் கொட்டுவார்.

அதற்குள் நறுமணம் வீசிக் கொண்டிருந்த அந்த மலர்கள் அழுகிப்போய் நாற்றமெடுக்கத் தொடங்கி விடும். எங்கள் இடத்தில் தங்கியிருந்த பணியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு வேறு வழி இல்லை. ஒன்று அந்த நாற்றத்தை சகித்துக் கொள்ள வேண்டும் அல்லது அந்தப் பூக்களை அவர்களே அப்புறப்படுத்த வேண்டும். நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாததால், அந்தப் பூக்களை நாங்களே அகற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. இந்தக் கதையின் அற்புதமான வரிகள் இங்குதான் வருகிறது. எங்கள் மீது திணிக்கப்பட்ட அந்த வேலைதான் "அவகயம்" (Avacayam) திட்டத்திற்கு வழி வகுத்தது. அவகயாம் என்றால் சமஸ்கிருதத்தில் பூக்களை சேகரிப்பது என்று அர்த்தம். நாங்கள் அதைத்தான் செய்தோம். சருகாய்ப் போன அந்தப் பூக்களை நாங்கள் சேகரித்தோம். ஆனால் நதிக்கு பாரமாக அதைப் போய் கொட்டவில்லை. அதற்குப் பதிலாக அந்தக் பூக் குப்பைகளை ஒளிரும் வண்ணங்களை உடைய சாயங்களாக மாற்றினோம். நாங்கள் தயாரித்த சாயங்கள் ஹோலி பண்டிகை காலங்களிலும், ரங்கோலிக் கோலம் போடவும் பயன்பட்டன. எங்களுக்கு மூலப் பொருட்கள் இலவசமாகக் கிடைத்தன. எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த கோவிலின் ஆசீர்வாதம் அது.

அவகயம் தயாராகும் முறை

இதன் தயாரிப்பு மிகவும் எளிமையானது. முதலில் சேகரித்த பூக்கள் அனைத்தும் பிரித்தெடுக்கப்படும். பிறகு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, காய வைத்து கடைசியாக அவை பொடியாக அரைக்கப்படும். சராசரியாக 100 கிலோ பூக்களை இப்படிச் செய்தால் அதில் இருந்து 1 கிலோ உலர்ந்த இதழ்கள் கிடைக்கும். உலர்ந்த பூக்களில் வாசனை போயிருக்கலாம். ஆனால் வண்ணம் போவதே இல்லை. தூளாக்கப்பட்ட அந்த வண்ணங்கள் பிறகு பேக் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த அவகயம் திட்டம் 2004ல்தான் தொடங்கியது. பொருளாதார ரீதியில் இந்த வேலையை சிக்கனமாக மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனைகள் மற்றும் சோதனைகள் எல்லாம் முடிந்த பிறகு 2008ல்தான் முறையாக வேலை தொடங்கியது. இப்படி ஒரு வேலையை யாரும் இதற்கு முன்பு தொடங்கவில்லை என்று நாங்கள் உண்மையில் ஆச்சரியப்பட்டோம். ஏனெனில் இந்தத் தொழிலில் நிறையச் சாதகமான அம்சங்கள் உண்டு. உற்பத்திக்கான செலவும், உபகரணங்களுக்கான செலவும் மிகவும் குறைவு. அதற்கேற்ற வருமானமும், தொழிலில் ஒரு நீடித்த நிலைத்தன்மையும் உண்டு. தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கோவில்களில் இருந்தும் ஹோட்டல்களில் இருந்தும் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. ஜன்மாஷ்டமி போன்ற திருவிழாக் காலங்களிலும் திருமண நாட்களிலும் அது அதிகமாகவே கிடைக்கும். எல்லா நாட்களும் மூலப்பொருட்கள் கிடைக்காமல் போவதே இல்லை. நாங்கள் தயார் செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு, சுற்றுச் சூழல் அமைச்சகமும், அதைப் போலவே டெல்லி சுற்றுச் சூழல் துறையும் உத்தரவாதம் அளித்திருக்கின்றன. அரசுத் துறைகளிலும் டில்லி ஹாட்டிலும் அதற்குரிய கடைகளை உருவாக்கித் தந்ததன் மூலம் எங்களது இந்த முயற்சிக்கு அவை ஆதரவளிக்கின்றன. பூக் கழிவுகளால் - குறிப்பாக கோவில்களிலும், ஹோட்டல்களிலும் இருந்து கொட்டப்படும் பூக் கழிவுகளால் - ஏற்படும் சுற்றுச் சூழல் பிரச்சனைக்கு அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தீர்வுகாணப்பட்டுள்ளது என்கிறார் மதுமிதா.

இதில் பங்களிப்பவர்கள்

மூளை வளர்ச்சி குன்றிய, பெருமூளை வாதம் மற்றும் ஆட்டிசம் பாதிப்பில் உள்ள சுமார் 40 இளைஞர்கள் வடக்கு டெல்லியில் உள்ள சிறிய மற்றும் பெரிய கோவில்களில் இருந்து பூக்களைச் சேகரிக்கும் வேலையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அதைப் போலவே ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருந்தும் அவர்கள் பூக்களைச் சேகரித்து வருகின்றனர். துண்டுகளாக்கப்பட்ட பூவிதழ்களை ஹோலிப் பண்டிகை மற்றும் ரங்கோலிக்காக வண்ணங்களாக மாற்றும் வேலையில் மாற்றுத் திறனாளிகள் 45 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பூக்களில் இருந்து அகர் பத்திகள் தயாரிக்கும் வேலையும் இந்த மையத்தில் நடக்கிறது. பதினைந்து பார்வையற்றோர் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போதைக்கு எங்களுக்கு டெல்லியில் உள்ள 11 ஹோட்டல்கள் மற்றும் 60 கோவில்களில் இருந்து உலர்ந்த பூக்கள் வருகின்றன. இது தவிர எங்களோடு இணைந்து பணியாற்றும் ஆறு தொண்டு நிறுவனங்கள் மூலம் கூடுதலாக 250 கோவில்கள் மற்றும் 8 ஹோட்டல்களில் இருந்து எங்களுக்கு உலர்ந்த பூக்கள் வருகின்றன. ஆரம்பக் கட்டத்தில் 600 இளைஞர்கள் மட்டுமே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்தச் செயல் திட்டம் இந்தியா முழுவதும் நிறைந்துள்ள ஏராளமான மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுக்கக் கூடியது. நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் கோவில்கள் இருக்கிறன. உள்ளடங்கிய பகுதிகளில் கூட கோவில்கள் உண்டு. அனைத்துக் கோவில்களிலும் புஷ்பாஞ்சலி செய்வது ஒரு வழக்கமான நடைமுறை. டெல்லியில் மட்டுமே 6 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இந்த அத்தனை கோவில்களில் இருந்தும் உலர்ந்த பூக்களை சேகரிக்க வேண்டும் என்பது எனது திட்டம் என்கிறார் மதுமிதா.

சாதனையும், பாராட்டும்

மாற்றுத் திறனாளிகள் அவர்களினுள் உள்ள ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் அவரது திறமையை வைத்து எடைபோடும் மனப்பாங்கும் உடைய ஒரு உலகை அவகயம் சாதித்துக் காட்டியிருக்கிறது. அவகயம் மேற்கொண்ட இந்த முன் முயற்சி அவர்களது நம்பிக்கையை வளர்த்துள்ளது. சமூகத்தில் எல்லோரையும் போல மதிக்கப்படும் அங்கீகாரத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. மதுமிதாவின் இந்த முன் முயற்சியை ஒரு சுற்றுச் சூழல் கல்விக்கான ஆயுதம் என்று சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. மதுமிதாவின் பணியை ஐநா சபையும் அங்கீகரித்துள்ளது. அவரின் பணி ஐநாவால் பாராட்டப்பட்டுள்ளது. 2013 டிசம்பரில் ஆசியா மற்றும் பசிபிக் பிரந்திய ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக ஆணையத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பளிக்கும் தொழில்முனைவரில் ஆசிய பசிபிக் பகுதியின் தொழில் முனைவர் ஆண்டு விருது (United Nations Economic and Social Commission for Asia and the Pacific (UN-ESCAP) Disability-Inclusive Entrepreneurial Business of the Year) மதுமிதாவுக்கு வழங்கப்பட்டது.

வேலை நடக்கும் பகுதிகள்

“2014 -15ல், 248 டன் பூக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஐந்து லட்சம் அகர் பத்திகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 15 டன் வண்ணங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2014-15ல் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் கேரளாவில் 2 ஆயிரத்து 822 மாற்றுத் திறனாளிகள் தங்கள் குடும்பத்திற்குத் தேவையான வருமானத்தை ஈட்ட, இந்த எளிமையான வேலையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் பணியைப் பாராட்டி யுனெஸ்கேப் (UNESCAP) ஒரு விருது வழங்கியது. அதன் பிறகு எங்களின் பணிக்கு ஜப்பானின் நிப்பான் ஃபவுண்டேஷன் நிறுவனம் ஆதரவளித்தது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (National Skill Development Corporation) கூட்டுச் சேர்ந்து 2015-2020ல் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள (தற்போது தொழில் தெரியாமல் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும்) 26 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதே அதற்கான வேலைகள் வாரணாசியில் தொடங்கி விட்டன. பூக்கழிவுகளை மறு சுழற்சி செய்வதில் மட்டும் அல்ல, குறுந்தொழில் மேலாண்மைக்குத் தேவையான அத்தியாவசிய விஷயங்களும் அங்கு கற்பிக்கப்படுகின்றன. இந்தப் பணிகளை மேன் மேலும் வளர்க்கவும் வருமானத்தைப் பெருக்கவும் திறன் மேம்பாட்டுக்கென வளங்கள் மற்றும் அறிவு மையங்களை (Resource and Knowledge Hubs) உருவாக்கும் வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறோம். இனி பூக்கழிவுகளால் நமது நீர்வளம் மாசுபடாது. ஆறுகள் சுத்தமாக இருக்கும். பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளில் நமது குழந்தைகள் பயிற்சி பெறுவார்கள். இந்த பூமிக் கிரகம் நீண்ட நாட்களுக்கு நிம்மதியாக வாழும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்” மதுமிதா

புதுடெல்லியில் ட்ராஷ் டு கேஷ் எம்ப்ளாய்மென்ட் சென்ட்டர் (Trash to Cash Employment Centre) எனும் மற்றொரு மையம் 137 மாற்றுத் திறனாளிகளை பல்வேறு பொருளுற்பத்தியில் ஈடுபடுத்தி அவர்கள் வருமானம் பெற வழி செய்கிறது. அந்த மையம், மதுமிதாவின் “குழந்தைகள் மேம்பாட்டுக்கான சமூகம் (Society for Child Development)” எனும் தொண்டு நிறுவனத்தின் ஆதரவில் இயங்குகிறது. மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பதற்காக மதுமிதா அந்தத் தொண்டு நிறுவனத்தை 1992ல் துவக்கினார். எனினும் பெரியவர்களின் திறனை மேம்படுத்தி அவர்களின் வருமானத்திற்கு வழி செய்யாமல் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி என்பது அடைய முடியாத ஒரு கனவாகவே இருக்கும் என்று மதுமிதா விரைவிலேயே புரிந்து கொண்டார். ஏழ்மையில் உள்ள குடும்பங்களுக்கு சம்பாதிக்க வழி செய்து விட்டால் போதும். அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராகி விடுவார்கள் என்பது தங்களது நம்பிக்கை என்கிறார் மதுமிதா.