பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள கைவிட வேண்டிய 3 முக்கிய பழக்கங்கள்!

0

பெண்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும் குறிப்புகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துகொண்டுள்ளேன். நானும் குறைகள் ஏதுமில்லாத நபர் இல்லை என்பதால் இவற்றை பார்க்கும்போது எனக்குள்ளும் குற்ற உணர்வு ஏற்படுகிறது. நான் சுகாதாரப் பிரிவில் மேற்கொண்ட பயணமானது பல்வேறு படிப்பினைகளை எனக்கு அளித்துள்ளது. இந்த அனுபவங்களே நானும் மற்ற பெண்களும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற உதவியது.

பெண்களான நாம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள சில பகுதிகளில் முக்கிய கவனம் செலுத்தவேண்டியது அவசியம். நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சில பொதுவான விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு

உடல் எடையைக் குறைக்க விரும்பி நீங்கள் எந்தவித டயட் முறையையும் பின்பற்றவில்லை எனில் நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் சொல்லிக்கொள்ளலாம். ஏனெனில் நீங்கள் நிச்சயம் மில்லியன் நபர்களில் ஒருவர். உணவுக் கட்டுப்பாட்டை குறிக்கும் ’டயட்டிங்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தாத பெண்களே இல்லை எனும் அளவிற்கு பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறியுள்ளது. இத்தகைய செயல் 13 வயதிலேயே துவங்கப்பட்டு பெண்ணின் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. 

உணவுக் கட்டுப்பாடு என்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த சில குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்ப்பதாகும். துரதிர்ஷ்டவசமாக சிறப்பான ஆரோக்கியம் என்பது உடல் எடையை குறைப்பது என்கிற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுவதில்தான் பிரச்சனை நிலவுகிறது. 

உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவதில் தவறு இல்லை. சில உணவு வகைகளைத் தவிர்ப்பது உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

உணவுகள் தவிர்க்கப்படுவதால் பட்டினியாக இருத்தல், குறைவான ஊட்டச்சத்து, உடல் மற்றும் மனதின் செயல்பாடுகள் பாதிப்படைதல் போன்ற நிலைகளுக்கு வழிவகுப்பதில்தான் பிரச்சனை ஏற்படுகிறது. 

உணவைக் கட்டுப்படுத்துவதால் இந்த நிலைதான் ஏற்படுகிறது. நீங்கள் விரைவாக உடல் எடையைக் மிகவும் குறைந்த அளவிலான உணவை உட்கொள்ள வலியுறுத்தப்படுகிறீர்கள். ஆனால் இதனால் ஹார்மோன் அளவு, வளர்சிதை மாற்றம், தோல், முடி, தெளிவான மனநிலை, உடல் வலிமை போன்றவை பாதிக்கப்படுகிறது. குறுகிய கால பலனுக்கான இத்தகைய செயல்கள் நீண்ட கால அடிப்படையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக கருவுறுதல் மற்றும் தைராய்ட் பிரச்சனை ஏற்பட்ட பல பெண்களையும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய பிற நாள்பட்ட நோய்கள் ஏற்பட்ட பல்வேறு பெண்களையும் நான் சந்தித்துள்ளேன்.

எனவே உணவு கட்டுப்பாடு குறித்து சிந்திப்பதற்கு முன்பு எந்த வகையான உணவை தவிர்க்கப்போகிறோம் என்பதையும் ஏன் தவிர்க்கவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம். அத்துடன் இந்த செயல்முறையால் நீண்ட கால அடிப்படையில் நம் உடலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

எப்போதும் மற்றவர்களை பராமரிப்பதில் கவனம் செலுத்துதல்

நம்மைத் தவிர அனைவரையும் காக்கவேண்டிய பொறுப்பு நம்முடையது என்றே பல பெண்கள் நினைக்கிறார்கள். நம் குழந்தைகள், கணவர், மாமியார்-மாமனார், சக ஊழியர்கள், அக்கம்பக்கத்தினர் என யாருக்கு தேவை ஏற்பட்டாலும் அவரைப் பராமரிக்கத் தயாராகிவிடுகிறோம். ஆனால் நம்மை கவனித்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் அளித்தால் நீங்கள் மோசமானவராக பார்க்கப்படுகிறீர்கள். சுயநலமாக இருப்பதற்கு இப்படிப்பட்ட தவறான அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன.

சுற்றியுள்ள அனைவரையும் பராமரிப்பது நமது கடமை என நம்புவதால் நமது ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்துவதில்லை. எனவே சுயநலத்துடன் இருக்கவேண்டும் என்பதே என் கருத்து. ஏனெனில் உங்களைக் காட்டிலும் மற்றவர்கள் அதிக முக்கியம் இல்லை. 

நீங்கள் மற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க விரும்புகிறீர்கள். ஆனால் உங்களிடம் இருப்பதை மட்டுமே நீங்கள் அடுத்தவருக்கு கொடுக்க முடியும் என்பதுதானே நிதர்சனம்? நீங்கள் உங்களை முறையாக கவனித்துக்கொள்ளவில்லை என்றால் உங்களிடம் வழங்க ஒன்றும் இருக்காது. எனவே சரியான விதத்தில் முன்னுரிமை அளியுங்கள். அதாவது முதல் முன்னுரிமையை உங்களுக்கு வழங்குங்கள்.

தூக்கமின்மை

இன்றைய காலகட்டத்தில் இது கிட்டத்தட்ட அனைவருக்கும் பொருந்தும். நாம் எப்போதும் சமரசம் செய்துகொள்ளும் முதல் விஷயம் தூக்கம். ஆரோக்கியமாக இருப்பதற்கு தூக்கம் அத்தியாவசியமானதாகும். 

நாம் தூங்கும்போதுதான் நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாகிறது. அப்போதுதான் உடலில் உள்ள செல்கள் சீரமைக்கப்பட்டு புத்துணர்வு பெறுகிறது. நம் உடலிலும் மனதிலும் உள்ள நச்சுத்தன்மை நாம் தூங்கும்போதே நீக்கப்படுகிறது.

எனவே தூக்கத்தைத் தவிர்த்தால் எவ்வாறு உடலும் மனதும் முறையாக செயல்படும்? பதட்டம், உடல் எடை கூடுதல், ஹார்மோன் சமநிலையற்ற தன்மை, பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு போன்ற பல்வேறு நிலை ஏற்பட தூக்கமின்மை முக்கிய காரணமாகும். தற்சமயம் உங்களால் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள இயலாமல் போனாலும் கூட தினமும் இரவில் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்குவதை வழக்கமாக்கிக்கொள்ள பரிந்துரைக்கிறேன்.

நாம் வாழும் முறையில் சில சிறிய மாற்றங்களைச் செய்து கொண்டாலே நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சிறப்பான முறையில் மேம்படுத்திக்கொள்ள முடியும். சின்னச்சின்ன மாற்றங்களே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றை புறக்கணித்தோமானால் மிகப்பெரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவிடும். உங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுங்கள். நீண்ட கால அடிப்படையில் அதுவே முக்கியமானதாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : சமரா மஹிந்திரா. இவர் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு உதவும் CARER Program நிறுவனர் மற்றும் சிஇஓ. தமிழில் : ஸ்ரீவித்யா

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் ஆசிரியரின் சொந்த கருத்துகளாகும். எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை.)