கலைந்த கலெக்டர் கனவை ஏழை மாணவர்களை ஐஏஎஸ் ஆக்கி நினைவாக்கிய சங்கர்! 

‘ஐ.ஏ.எஸ் பயிற்சிக்கு டில்லிக்குல போவனும்!’ என்ற மாணவர்களின் ஏக்கப் பேச்சை இல்லாமலாக்கிய, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் சங்கரின் சோகக் கதை. 

0

எவ்வித சந்தேகத்துக்கும் தீர்வு அளிக்கும் கூகுள் நண்பனிடம், ‘சென்னையில் உள்ள சிறந்த ஐ.ஏ.எஸ் பயிற்சி அகாடமி எது?’. ‘சென்னையின் டாப் 10 சிறந்த ஐ.ஏ.எஸ் அகாடமி பட்டியல்’ கேட்டால், அதில் முதன்மையான இடத்தை பெற்றிருக்கும் ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’. அகாடமிக்கு மட்டுமின்றி, அதன் நிறுவனர் சங்கருக்கும் மக்கள் மனதிலும் ஸ்பெஷல் இடமுண்டு. அதனால் தான், அவர் தற்கொலை செய்து இறந்த செய்தி அறிந்து, தன் வீட்டு துக்கமாய் எண்ணி கலங்கி வருகின்றனர். ஆம், குடும்ப பிரச்னையின் காரணமாக தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்டார் அவர்.

கலெக்டர் கனவோடு உளவாடி வரும் பலரை ஐ.ஏ.எஸ் ஆக்கிய பெருமைக்குரிய, சங்கரது கனவும் அதுவே. நாமக்கல் மாவட்டம் திருசெங்கோட்டில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர். பள்ளிக் காலங்களில் சங்கர் படிப்பில் கெட்டிகார பய்யனெல்லாம் இல்லை. 

“நீ படிக்கவே லாயிக்கு இல்லாதவன்’ என்று கூறி அவருடைய தாத்தா வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் சங்கருடைய அப்பா. தாத்தா வீட்டில் கிட்டதட்ட ஒரு வருடம், லாரி மற்றும் தறியில் வேலை செய்துள்ளார். பின்னே, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். புதிய பள்ளியில் இருந்த ஆங்கில ஆசிரியர், சங்கரின் சிறுசிறு செயல் பாடுகளையும் பாராட்டியுள்ளார். அப்பாராட்டு கொடுத்த உத்வேகத்தால், படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். விளைவாய், பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாகவும், பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாம் மாணவனாகவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கல்லூரியில் பி.எஸ்சி அக்ரி படித்துள்ளார். கல்லூரியில் ஒரு பெண்ணை ராகிங் செய்ததில், ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அப்பெண் அவருடைய மனைவி வைஷ்ணவி. சஸ்பெண்ட் முடிந்து கல்லூரிக்கு திரும்பியவர், வெறிக்கொண்டு படித்துள்ளார். அச்சமயத்திலே வைஷ்ணவியும், சங்கரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். கல்லூரி முடிந்த சமயம் மேற்படிப்பா? பணியா? என்று சிந்திக்கையில் சினிமா மீதான காதலால், சென்னைக்கு சென்றிருக்கிறார். 

சினிமா ஆசையுடன் சுற்றிக் கொண்டிருக்கையில், ஒரு நாள் உறவினர் ஒருவரை சந்தித்துள்ளார். அவர், மோகமுள் திரைப்படத்தை ஞானசேகர் என்ற ஐ.ஏ.எஸ் இயக்கவில்லையா? ‘நீயும் முதலில் படிப்பில் கவனம் செலுத்து, பின்பு சினிமாவுக்குள் செல்’ என்று கூறியுள்ளார். அவ்வார்த்தைகள் மீது கண்ட நம்பிக்கையால், எம்.எஸ்சி அக்ரி படிப்புக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஹாரியானாவில் படிக்க சீட் கிடைத்துள்ளது. 

எம்.எஸ்சியும் முடித்த தருணத்தில் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு சென்று சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். ஆனால், வீட்டின் நிலைமையோ சங்கர் வேலைக்கு சென்றால், நிமிர்ந்து நிற்கலாம் என்றிருக்க, அவருடைய காதலி டெல்லிக்கு சென்று வேலை செய்து, சங்கரை படிக்க வைத்திருக்கிறார். 2001ம் ஆண்டில் முதல் முயற்சி. பலனிக்கவில்லை. அடுத்தாண்டு, அதற்கடுத்தாண்டு என தொடர்ச்சியாய் தேர்வு எழுதி, நேர்முகத் தேர்வு வரை சென்று தோல்வி அடைந்து திரும்பியுள்ளார். அச்சமயத்தில் அவருடைய அப்பாவும் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்.

ஒரு புறம் அவருக்காக ஒருபெண் காத்திருக்க, மறுபுறம் சங்கரின் சம்பளத்தை எதிர்நோக்கி காத்திருந்துள்ளது அவரது குடும்பம். வேறு வழியே இன்றி, வேலைக்கு செல்ல தீர்மானித்தபோது, ஏன், தனக்குக் கிடைத்த அனுபவங்களை கொண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் தொடங்கக்கூடாது? என்று தோன்றியுள்ளது. இறுதியாய், 2004ம் ஆண்டு சென்னை அண்ணாநகரில் சங்கரது அம்மாவின் சிறுசேமிப்பு 720 ரூபாயுடன் ’சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’ உதயமாகியுள்ளது. 

முதல் ஆண்டு சேர்க்கையாக 36 மாணவர்கள் இணைந்தனர். முதல் ஆண்டிலே 36 பேரில், 11 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். பின், வென்றவர்களே விளம்பரதாரர்களாயினர். மாணக்கர்கள் தேடிவரத் தொடங்கியுள்ளனர். தோல்வி அடைந்தவர்களும், சங்கரின் உத்வேக பேச்சால் விடாமுயற்சியுடன் படித்துள்ளனர். அவருடைய ஹீயூமர் சென்சால், மிமிக்ரி செய்து மாணவர்களின் களைப்புகளை கலைத்துள்ளார். ஆனாலும், அவர் பெற்றோர்களிடம்

‘குழந்தைகளை மார்க் பின் ஓட வைக்காதீர்கள். நல்ல தலைமை பண்பை கற்றுக்கொடுங்கள்’ என்றே எப்போதும் வலியுறுத்தியுள்ளார். 

சிவில் சர்வீஸ் கோச்சிங் என்றாலே, வடநாட்டுக்கு செல்லவேண்டும் என்ற நிலையை அப்படியே தலைகீழாக்கி வடநாட்டினரை சென்னையை நோக்கி பயணிக்க வைத்தார். சென்னை மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் கிளைகள் பரவியுள்ளன. 

இதுவரை, கிட்டதட்ட ஒரு லட்சம் மாணவ, மாணவியர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளனர். தவிர, ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளித்துள்ளார் என்பதே அவருடைய மாணவர்கள் வெற்றி பெற்றபின், பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் பேட்டியில் கூறுவதன் மூலம் அறிய முடிந்தது. இன்று பலநூறுக்கான அரசு அதிகாரிகளை உருவாக்கி இருப்பினும், அவர் ஐ.ஏ.எஸ் ஆகவில்லை என்பதில் வருத்தம் கலந்த மகிழ்ச்சியே அடைந்துள்ளார். ஏனெனில், அடிக்கடி அவர் கூறுவது,

“வெற்றி பெற்றிருந்தால், நான் ஐ.ஏ.எஸ் ஆகியிருப்பேன். ஆனால், தோற்றதினால் தான் இன்று பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை உருவாக்க முடிந்தது.”

இப்படி எப்பொழுதும் நம்பிக்கை வார்த்தைகளையே உதிர்க்கும் அவரது இழப்பால், முன்னாள், இன்னாள் என ஒட்டுமொத்த அவருடைய மாணக்கர் கூட்டமே பெரும் துயரில் உள்ளது. 

தகவல் உதவி: விகடன்

Related Stories

Stories by jaishree