உங்கள் புதிய நிறுவனத்திற்கு சிறந்த ஊழியர்களை கண்டறிவது எப்படி?  

0

வர்த்தகத்தை துவக்கும் போது சிறந்த ஊழியர்களை கண்டறிவதற்கான மூன்று முத்தான வழிகள்:

வர்த்தகத்தை துவக்குவது என வரும் போது, சிறந்த ஊழியர்களை கண்டறிவது அத்தனை எளிதல்ல. முதல் சிக்கல் என்னவெனில், உங்களைப்பற்றி அதிகம் தெரியாத நிலையில், நீங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கத் தயாராக இருப்பது போலவே அவர்களையும் உங்கள் மீது நம்பிக்கை வைக்க கோருகிறீர்கள். சிறந்த ஊழியர்களை நிச்சயம் கண்டறியலாம் என்றாலும், நிலையான வர்த்தகத்தை நிறுவிய நிலையில் இருந்து தேடுவதை விட, வர்த்தகத்தை புதிதாக துவக்கும் போது சிறந்த ஊழியர்களை கண்டறியவது மிகவும் கடினமானது. 

புதிதாக வர்த்தகத்தை துவக்கும் போது, சிறந்த ஊழியர்களை கண்டறிய தேவையான மூன்று அம்சங்கள்:

கல்லூரிகள்

நீங்கள் எந்த வகையான ஊழியர்களை எதிர்பார்க்கிறீர்களோ அதற்கேற்ப உள்ளூர் பல்கலைக்கழகங்கள், வர்த்தக கல்லூரிகள் அல்லது உங்கள் துறையில் பட்டப்படிப்பு வழங்கும் கல்லூரிகளை நாடலாம். நிர்வாகிகளை அணுகி திறமையான மாணவர்களை பரிந்துரைக்குமாறு கேட்கலாம்.

வேலைவாய்ப்பு சேவை

சிறந்த ஊழியர்களை தேடி கண்டுபிடிப்பதில் எஞ்ஜினியர் நெக்சஸ் போன்ற சேவைகள் உதவியாக இருக்கும். இவர்களிடம் உள்ள பர்ந்த தரவுகளில் இருந்து, ரெஸ்யூம்களை தேர்வு செய்து அதிலிருந்து திறமையானவர்களை கண்டறியலாம். குறிப்பிட்ட துறைகளில் மட்டும் இத்தகைய சேவையை அளிக்கும் நிறுவனங்களை நாடுவதும் பொருத்தமாக இருக்கும்.

வெளிப்படையாக இருங்கள்

வளர்ந்த நிறுவனத்தில் பணியாற்றுவதை விட, புதிதாக துவங்கப்பட்டுள்ள நிறுவனத்தில் ஊழியர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கும் சூழல் இருக்கும். எனவே துவக்கத்திலேயே உங்கள் எதிர்பார்ப்பு குறித்து வெளிப்படையாக தெரிவிப்பது நல்லது. அவர்கள் பணியாற்ற உள்ள சூழல் குறித்தும் தெரிவிக்க வேண்டும். நீங்கள் வீட்டையே அலுவலகமாக பயன்படுத்த திட்டமிட்டிருந்தால், அதையும் தெரிவிக்க வேண்டும். அதிக நேரம் அல்லது, மாறக்கூடிய நேரங்களில் பணியாற்ற வேண்டியிருக்கும் என எதிர்பார்த்தால் அதையும் குறிப்பிட வேண்டும். நீங்கள் நேர்மையான ஊழியர்களை எதிர்பார்த்தால், முதலில் நீங்கள் நேர்மையாக நடந்து கொள்வதே சரியாக இருக்கும்.

புதிய வர்த்தகம் துவங்குபவர்கள் சிறந்த ஊழியர்களை கண்டறிவது முடியாத காரியம் இல்லை. ஆனால் இது கடினமாக அமையலாம். ஊழியர்கள் நிலைப்பெற்ற வர்த்தகம் அல்லது நிறுவனத்தில் பணியாற்றுவதால் அதிக பலன் பெறலாம் என்றாலும், மகத்தான வாய்ப்பின் ஆரம்பமாக அமையக்கூடிய சூழலில் ஆரம்பத்தில் இருந்து பணியாற்றும் வாய்ப்பை நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்கள். சிலருக்கு நிலையான வாய்ப்பு தேவை. அதில் தவறில்லை. ஆனால் வாய்ப்புகளை பற்றிக்கொண்டு உங்களுடன் இணைந்து வளர விரும்புகின்றவர்களை கண்டறியுங்கள்.

(இது எங்கள் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட யுவர்ஸ்டோரி சமூக பதிவு. இதன் உள்ளடக்கம் மற்றும் புகைப்படம் அவர்களுக்கு உரியது. இதில் உள்ள தகவல்கள் காப்புரிமை மீறல் என உணர்ந்தால் எங்களுக்கு எழுதவும்.)

ஆங்கிலத்தில்: காரா மாஸ்டர்சன், தமிழில்: சைபர்சிம்மன்