கல்லூரியில் படித்துக் கொண்டே தொழில்முனைவில் கலக்கும் ரோஹன் ஆஷிக்!

6

கல்லூரி படிப்பை முடித்தவுடன், வேலையை தேடும் இளைஞர்களுக்கு மத்தியில், "நான் படிப்பை முடிக்கும்போது நானே காம்பஸ் இன்டர்வியூ வைத்து, பலருக்கு வேலை கொடுக்க வேண்டும்; மற்றவருக்கு கீழ் வேலை பார்ப்பது எனக்கு பிடிக்காது" என்று தன்னம்பிக்கை நிறைந்த உறுதியுடன் பேசும் 19 வயது மாணவனாகிய ரோஹன் ஆஷிக்-இன் புதுயுக தொழில்முனைவு முயற்சியைப் பற்றி நீங்கள் அறிவீரா?

16 வயதினிலே!

திருநெல்வேலியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, இன்று திருச்சியில் உள்ள எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியில், தன்னார்வதோடு இரண்டாம் வருட கம்ப்யூட்டர் பொறியியல் படிப்பை படித்து வருகிறார், ரோஹன். அவரது 16 வயதில் பதினோராம் வகுப்பு படிக்கும்போது, அவர் நண்பன் நபில் அஹ்மத் உடன் இணைந்து விதைத்தது தான், ரெடிபில்.ஆர்க் (Redible.org).

ரெடிபில்.ஆர்க் ஆனது, ஒருவகைப்பட்ட எண்ணங்கள் மற்றும் ஆர்வம் கொண்ட மக்கள், அவர்களது சிந்தனைகள் மற்றும் சந்தேகங்களை பகிர்ந்து கொள்ள, கலந்துரையாட, வெளியிட பயன்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தளம் ஆகும். ஒருவருக்கு தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் இருந்தால், ஆரம்பத்தில் இருந்து சமீப கால தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து இந்த வலைத்தளத்தின் மூலம் எளிதில் தெரிந்து கொள்ளலாம், பகிர்ந்து கொள்ளலாம் என்று தன் இணையதள செயல்பாட்டை விவரித்தார் ரோஹன்.

முதல் முயற்சிக்கு வழிகாட்டிய முதலீடு!

இந்தியாவின் நடைமுறையில் உள்ள மனப்பாட கல்வி அமைப்பிற்கு மாறாக, பொழுதுபோக்கான ஒரு கல்வி முறையை உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் இவரை ரெடிபில்.ஆர்க் உருவாக்க ஊக்கப்படுத்தியுள்ளது. தான் நான்காம் வகுப்பு படிக்கும்போது, தன் தந்தை வாங்கி தந்த கணினி, இவர் கனவிற்கு வழிகாட்டியுள்ளது. சிறுவயதில் கம்ப்யூட்டர் கேம்ஸ் அதிகமாக விளையாடுவாராம். காலம் கடக்க, கணினியுடன் நண்பனாகி விட்டார். 

ஒருநாள் எதிர்பாராதவிதமாக உறவினர் ஒருவர் என் வங்கி கணக்கில் 1200 ருபாய் பணம் போட்டார். அந்த பணத்தை வீணாக்காமல், www.rohanashik.org மற்றும் http://ralive.net/ எனும் இரண்டு இணையதளங்களுக்கு, நண்பர் நஃபில் அஹமது உடன் சேர்ந்து டொமைன் வாங்கினேன் . 

ஆரம்பத்தில், தான் அறிந்த தகவல்களையும் செய்திகளையும் இந்த தளங்களில் ரோஹன் பகிர்ந்து வந்தார். அம்முயற்சிதான் இன்று ரெடிபில் .ஆர்க் ஆக வளர்ந்துள்ளது.

ரெடிபில்.ஆர்க் -இன் சுவடுகள்!

இதுவரையில் இந்த வலைத்தளம் நான்கு பதிப்புகளில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஐந்தாம் பதிப்புக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இணையதளத்திற்கான கோடிங் வேலைகளை ரோஹன் தனியாக செய்து வருகிறார். இவரது நண்பன் நஃபில் அஹ்மத் இவருக்கு துணை நின்று, உதவி செய்து வருகிறார். சென்ற வருடம் ஏப்ரல் 14-ந் தேதி, ரெடிபில்.ஆர்க் தளத்தை வெளியிட்டனர்.

விடாமுயற்சிக்கு கிடைத்த பலனாக, இந்த வலைத்தளத்தின் பார்வையாளர்கள் அதிகரித்து வந்தனர். முதலில், ஃபேஸ்புக்-இல் பணம் செலுத்தி ரெடிபில்.ஆர்க் தளத்திற்கு மார்கெடிங் செய்தனர். அதன் மூலம், எட்டு பயன்பாட்டாளர்கள் மட்டும் தான் சேர்ந்தனர். பின், இவர்களால் பணம் செலுத்த இயலவில்லை. ஆனாலும் சுய முயற்சியின் பலனாக இதுவரையில் 17,000 பயன்பாட்டாளர்களை ரெடிபில்.ஆர்க் பெற்றுள்ளது, இவர்கள் வெற்றியின் உச்சகட்டமாகும். ஆனால் பயன்படுத்த சற்று கடினமாக இருப்பதாக பயன்படுத்துவோர் கருத்து தெரிவித்ததால், ரெடிபில்.ஆர்க்-ஐ மேலும் மேம்படுத்துவதற்காக சிறிது காலத்திற்கு அதன் செயற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வலைத்தளம் பயன்படுத்த எளிதாக (User-friendly) இருக்க வேண்டுமென்பதால், ரோஹன் அல்லும் பகலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மாதா! பிதா! குரு!

ஆரம்பகட்டத்தில் என் அம்மா ஏன் இரவெல்லாம் கண்விழித்து இருக்கிறாய்? என்று திட்டுவார், ஆதனால் நான் ஒன்பது மணிக்கே தூங்க சென்றுவிடுவேன்; என் அம்மா உறங்கியதற்கு பின், அவருக்குத் தெரியாமல் எழுந்து மெதுவாக ரூம்முக்கு சென்று என் வேலையைப் பார்ப்பேன் என்று தன் சிறுவயது சேட்டையை பகிர்ந்துகொண்டார்,ரோஹன். இப்பொழுது தளத்தின் மேம்பாட்டு வேலைக்காக ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டும்தான் தூங்குகிறார் என்பது இவரது ஈடுபாட்டை காட்டுகிறது.

என் தந்தை ஒரு ஓவிய ஆசிரியர். எனக்கு சொல்லி கொடுப்பதற்காக கணினியை பற்றி, அவர் தெரிந்து கொண்டார். சிறுவயதில் நான் தேர்வில் பெயில் ஆன போதெல்லாம் கூட, உனக்கு பிடித்தை படி என்றே கூறினார். என் தந்தை தான் எனக்கு முன்மாதிரி. அவரைப் பிரிந்து இருப்பது கவலையாக இருக்கிறது",

என்று தான் தன் தந்தை மேல் கொண்ட அன்பை வெளிக்காட்டினார், ரோஹன் ஆஷிக்.

இந்த வருடத்திற்குள் மொபைல் ஆப்பாகவும், புதுபொலிவுடன் ரெடிபில்.ஆர்க் இணையதளம் வெளியிடப்படும் என ரோஹன் உறுதியுடன் கூறுகிறார். அதற்காக இதே துறையில் ஆர்வம் கொண்டு முதலீடு செய்யும் நல்ல முதலீட்டாளர்களை எதிர்நோக்கி உள்ளார். தன் கல்லூரி நண்பர்களை ஒரு குழுவாய் அமைத்து, அவர்களுக்கு கோடிங் கற்றுத் தருகிறார். பள்ளியில், தன் முயற்சிக்கு நல்ல வரவேற்பு இல்லையென்றாலும், கல்லூரியில் இவருக்கு நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது. சில நாளெல்லாம் இவரையே வகுப்புகளில் பாடம் எடுக்க சொல்வார்களாம் இவரது ஆசிரியர்கள். சீனியர்ஸும் இவரிடம் சந்தேகங்கள் கேட்பதுண்டு. இப்பொதெல்லாம் பள்ளிக்கு சென்றால், எனக்கு தனி மரியாதை கிடைக்கிறது என்று நகைத்தார், ரோஹன்.

எல்லாரும் தொழில் முனைவோராகி விட முடியாது; ஆனால் எல்லா பொறியாளராலும் புது கண்டுப்பிடிப்புகள் மேற்கொள்ள முடியும். பொறியாளனாய் இருந்தால், நிச்சயம் அவர்கள் ஆர்வம் சார்ந்த துறையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ப எதாவது கண்டுப்பிடிக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மிங், கோடிங் லாங்குவேஜ்களை அனைவரும் அவசியமாக பயில வேண்டும். அது அவர்களின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். எப்பொழுதும் பயனாய் இருக்கும்.

சமீபத்தில் இவரது சீனியர்கள் தேவைக்காக இவர் வடிவமைத்த ஆப்-டு-பிக் எனும் செயலி வெளியாகியுள்ளது. ரெடிபில்.ஆர்க் இணையதளம், கூளிள்-ஐ விட பெரிதாக வரவேண்டும் என்று கனவு காண்கிறார். இன்னும் நிறைய புது ஐடியாக்களை பிற்காலத்தில் செயல்படுத்த திட்டம்தீட்டி உள்ளேன் என்று பல ஆசைகளுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்த மாணவனின் கனவுகள் மெய்ப்பட தமிழ் யுவர்ஸ்டோரியின் வாழ்த்துக்கள்! 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்