7 வயதில், அறுவைச் சிகிச்சை புரிந்து உலகப்புகழ் பெற்ற இந்திய மாணவன் ஆக்ரித் ஜஸ்வால்!

0

ஆக்ரித் ஜஸ்வால், 10 மாத குழந்தையாக இருந்தபோதே நடக்கவும், பேசவும் ஆரம்பித்தார். இரண்டு வயது ஆனபோது படிக்கவும், எழுதவும் தொடங்கினார். ஐந்து வயதாக இருந்த போது, ஷேக்‌ஷ்பியர் ஆங்கில புத்தகங்கள் படிக்கலானார். ஆக்ரித் ஒரு ஜீனியஸ் குழந்தை. அவருக்கு 146 அளவிற்கு ஐக்யூ இருக்கிறது. இது சகவயது இந்திய குழந்தைகளை ஒப்பிடும் போது மிக அதிகமாக கருதப்படுகிறது. 

அதோடு இவரது சாதனை முடியவில்லை. ஏழு வயது ஆக இருந்த ஆக்ரித், உலகின் இளம் அறுவைச்சிகிச்சை நிபுணரானார். மருத்துவ ஜீனியஸ் என்ற பெயரையும் பெற்றார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் இருந்த எட்டு வயது பெண்ணிற்கு வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை செய்தார் ஆக்ரித். காயம் காரணமாக அந்த பெண்ணின் விரல்கள் ஒட்டிக்கொண்டிருந்தது. ஆக்ரித் புரிந்த அறுவைச்சிகிச்சை மூலம் அவரின் விரல்கள் பிரிக்கப்பட்டு பழையநிலைக்கு திரும்பியது. 

தர்மஷாலாவின் கல்வித்துறை இயக்குனர் பி.ஆர்.ராஹி, ஆக்ரித்துக்கு நிதியுதவி செய்து வழிகாட்டியாக இருந்துள்ளார். 12 வயதில் ஆக்ரித், சண்டிகர் கல்லூரியில் அறிவியலில் பட்டம் பெற்றார். இந்திய பல்கலைகழகத்தில் பயின்ற இளம் மாணவர் இவரே என்று அச்சிகபரே பத்திரிகை செய்தி வெளியிட்டது. 

புற்றுநோய்க்கு ஆக்ரித் தீர்வு கண்டுபிடிக்க காட்டிய ஆர்வம், உலகத்தின் பார்வையையும், மதிப்பையும் அவருக்கு பெற்றுத்தந்தது. “பயர்க்ராக்கர்ஸ் பிலிம்ஸ்’ இவரை பற்றி நடத்திய ஆராய்ச்சியில், ஆக்ரித்தை லண்டனுக்கு அழைத்து, பிரபல மருத்துவ ஆராய்ச்சியாளர்களை சந்திக்க வைத்தது. ’டீம் போகஸ்’ என்ற அமைப்பை அழைத்து, 12 வயது ஆக்ரித்தின் புத்திசாலித்தனத்தை கணக்கிட ஏற்பாடும் செய்தது. 

ஆக்ரித், வார்த்தைகள் மற்றும் எண்கள் மதிப்பீட்டில் அற்புதமாக உள்ளார் என்றும் ஆனால் செயல்முறையில் அவர் குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ளார் என்றும் ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்தது. பிரபல ஓப்ரா வின்ப்ரே ஷோவில் இடம்பெற்ற இந்த குட்டி ஜீனியஸ், இந்தியாவில் இருந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் இளம் மாணவர் என்ற பெருமையை பெற்றார். ஆக்ரித் மருத்துவத்துறையில் அதீத ஆர்வம் கொண்டவர். குறிப்பாக புற்றுநோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க உழைத்து வருகிறார். ஆக்ரித் தற்போது ஐஐடி கான்பூரில் பயோ-இஞ்சினியரிங் பயின்று வருகிறார். 

கட்டுரை: Think Change India