மனித கடத்தல் உள்ளிட்ட நவீன அடிமைத்தன சிக்கல்களுக்கு தீர்வுகாண சக்கரவியூகம் அவசியம்!

0

சிக்கலான குற்ற நடவடிக்கைகள் பலவும் மறைமுகமாக நடத்தப்படுவதால் கடத்தல் சம்பவங்களில் உண்மையான தீவிர நிலை வெளியுலகிற்குத் தெரிவதில்லை. சமீப காலமாக ’நவீன அடிமைத்தனம்’ என்கிற சொல் பயன்பாட்டில் உள்ளது. இதில் கட்டாய உழைப்பு, கடன் சார்ந்த அடிமைத்தனம், கட்டாய திருமணம், அடிமைத்தனம், மனித கடத்தல் போன்றவை அடங்கும். 

40.3 மில்லியன் பேர் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 25 சதவீதம் பேர் குழந்தைகள் என்றும் நவீன அடிமைத்தனம் குறித்து சமீபத்திய ஐஎல்ஓ க்ளோபல் மதிப்பிடுகிறது. குழந்தைகள் வெவ்வேறு வகையில் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்படுவது குறித்து கிழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் பாலியல் ரீதியான பணிகளுக்காகவே கடத்தல் சம்பவங்கள அதிகளவில் நடப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது. கட்டாய உழைப்பு அல்லது திருமணம் போன்ற காரணங்களுக்கான கடத்தல் குறைவாகவே உள்ளது. ஆய்வாளர்கள் பல வருடங்களாக சேகரித்த தகவல்களின் அடிப்படையில் 70,000 முதல் 30,00,000 பெண்கள் கடத்தப்படுவதாகவும், இதில் 30 முதல் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் தெரிய வருகிறது.

வறுமை, கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, தன் நிலையையும் தனது குடும்பத்தின் நிலையையும் மேம்படுத்தும் ஆர்வம், காதல் விவகாரங்கள், கட்டாய திருமணத்தில் காணப்படும் அழுத்தங்கள், ஆணாதிக்க விதிமுறைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகள், வணிக ரீதியான பாலியல் பணி போன்ற காரணிகளே கடத்தல் சம்பவங்களின் பின்னணியாக உள்ளது. 

இந்தியாவின் ஒரு சில மாநிலங்களிலேயே கடத்தல் தொடர்பான நடவடிக்கைகள் அதிகபட்சமாக பதிவாகின்றன. குழந்தைகள் வணிகரீதியான பாலியல் சுரண்டல்கள், வீட்டு வேலை, தொழிற்சாலை அல்லது விவசாய வேலை போன்றவை, திருமணம், தத்தெடுத்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக கடத்தப்படுகின்றனர்.

எனினும் நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு ஆட்கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு) மசோதா 2018-க்கு மக்களவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் சரியான நேரத்தில் குற்றவாளிகள் மீது வழக்கு தொடர்தல், மறுவாழ்வு ஏஜென்சிகளுக்கு அதிக பொறுப்புடைமை, கடத்தல் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண சிறப்பு யூனிட்களின் ஒருங்கிணைப்பையும் செயல்பாட்டையும் வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். 

அவசர கவனம் தேவைப்படும் பகுதிகளான கட்டாயமாக பிச்சையெடுக்க வைத்தல், குடிபெயர்ந்தவர்கள் தொடர்பான கடத்தல் போன்றவற்றில் இடைவெளி காணப்பட்டாலும் இவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அதே சமயம் குழந்தைகளுக்குத் தேவையான சிறப்பு கவனம் வலுவிழந்துவிடாது எனவும் நம்புகிறேன்.

இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக கடத்தப்படுவதாக மதிப்பிடப்படுவதற்கும் சட்டரீதியாக புகாரளித்தல் அல்லது வழக்குதொடர்வதற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு நிலவுவதால் தொடர்ந்து குழந்தை கடத்தல் தொடர்பான தரவுகளில் மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது. சமூக அல்லது பொருளாதார தேவை, பாலியல் தொழிலில் சகிப்புத்தன்மை, முறையான அமலாக்கமின்மை, அரசியல் தலையீடு, கடத்தல் நடவடிக்கைகளை சமூக-சட்டரீதியான பிரச்சனையாக முன்னுரிமை அளிக்காமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் சட்டரீதியாக கடத்தல் தொடர்பான வழக்குகள் குறைவாக தொடரப்படுகிறது.

2016-ம் ஆண்டு மனித கடத்தல் தொடர்பாக பதிவான வழக்கின் எண்ணிக்கை 8,132 ஆகும். 2014-ம் ஆண்டு வரை ஐபிசி-யின் சட்டப்பிரிவுகளின் கீழ் பாலியல் சுரண்டல்கள் தொடர்பான அதிகளவிலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 1986, ஐடிபிஏ-வின் கீழ் பதிவான வழக்குகளுடம் அடங்கும்.

கட்டாய தொழில் அல்லது உழைப்பை சுரண்டுவதற்காக மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல் போன்றவை தொடர்பான ஒரு சில வழக்குகள் பதிவு செய்யப்படாதபோதும் 2014-ம் ஆண்டு முதல் மனித கடத்தல் தொடர்பாக பதிவான வழக்குகள் புள்ளிவிவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. NCRB வருடாந்திர குற்ற புள்ளிவிவரங்கள் நெறிசாரா மனித விற்பனை (தடுப்பு) சட்டம் 1956 மற்றும் ஐபிசியின் சட்டப்பிரிவு 370-ன் கீழ் அடங்கும் மனித கடத்தல் தொடர்பான புள்ளிவிவரங்களை வழங்குகிறது. அத்துடன் சட்டப்பிரிவு 370 மற்றும் 370A, மைனர் பெண் கடத்தல் (சட்டப்பிரிவு 366-A ஐபிசி) மற்றும் விபச்சாரத்திற்காக மைனர் பெண்களை வாங்குவது, நெறிசாரா மனித விற்பனை (தடுப்பு) சட்டம் 1956 ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் தொகுப்பையும் வழங்குகிறது. 

14 வயதிற்கும் குறைவாக இருப்பவர்களின் தரவுகள் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. 14 முதல் 18 வரையுள்ளவர்களின் தரவுகள் ஏதும் இல்லை. பதிவு செய்யப்பட்டதில் அதிகபட்சமான வழக்குகள் அசாம், மேற்குவங்காளம், பீஹார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்ததாகும் என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தப்பட்ட சட்டம் பல்வேறு நுணுக்களில் கவனம் செலுத்துவதுடன் தரவுகள் தொடர்பான தெளிவற்ற நிலைக்குத் தீர்வுகாண எவ்வாறு பயிற்சிபெற்ற ஊழியர்களையும் தொழில்நுட்பத்தையும் சிறப்பாக ஒன்றிணைக்கலாம் என்பதிலும் கவனம் செலுத்தும் என நம்புகிறேன். முறையாக பதிவுசெய்யப்படுவதே நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

இந்தியாவில் குழந்தை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் பணியாற்றி வரும் நிலையிலும் இந்த பிரச்சனை சிறியளவிலேயே கவனத்தை ஈர்த்து வருகிறது. குழந்தை பாதுகாப்பு அமைப்புகள் வழங்குவதைக் காட்டிலும் குழந்தைகள் அதிகம் பெறத் தகுதியானவர்கள்.

கடத்தல் நடவடிக்கைகள் நேரடியாக மேற்கொள்ளப்படாததால் ஒரு குழந்தை வியாபாரப் பொருள் போல நடத்தப்பட்டு, பல்வேறு நபர்களிடம் கைமாற்றப்பட்டு ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு விதமாக துஷ்பிரயோகப்படுத்தப்படுகின்றனர். இந்த பிரச்சனையின் சிக்கல்தன்மைக்குத் தீர்வுகாண உத்தி நிறைந்த ஒரு அணுகுமுறை அவசியம் என நான் கருதுகிறேன். அதாவது சக்ரவியூகத்தில் இருப்பது போன்று பல்வேறு நிலைகளை உள்ளடக்கிய அணுகுமுறை அவசியம்.

இந்த வர்த்தகத்தில் காணப்படும் தற்போதைய சிக்கலுக்குத் தீர்வுகாண அற்புதமான திட்டமிடலும் செயல்படுத்துவதற்கான திட்டமும் உருவாக்க அரசியல் தலையீடு அவசியம். இந்த சக்கரவியூகத்தை உருவாக்க அதிகளவிலான படைவீரர்களும் வளங்களும் தேவைப்படும். அத்துடன் போரில் வெற்றியடையும் வரை திறம்பட போட்டியிடக்கூடிய விதத்தில் படைவீரர்களுக்கு பயிற்சியளிக்க அதிகளவில் முதலீடு செய்யவேண்டியதும் அவசியம்.

ஆங்கில கட்டுரையாளர் : பூஜா மர்வஹா – இவர் சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ (CRY) நிறுவனத்தின் சிஇஓ. | தமிழில் : ஸ்ரீவித்யா

(பொறுப்புத்துறப்பு : இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளாகும். எந்த விதத்திலும் யுவர் ஸ்டோரியின் கருத்துகளை பிரதிபலிப்பவை அல்ல.)