இந்தியாவில் இரண்டு இசைக் கூடங்களை அமைக்க ஏ.ஆர். ரஹ்மானுடன் கைகோர்த்தது ஆப்பிள்

0

சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் நிறுவிய கே எம் மியூசிக் கன்சர்வேட்டரிஸ் (KMMC) மற்றும் மும்பையில் அமைக்கப்படவுள்ள ஒரு வளாகம் ஆகிய இடங்களில் மேக் லேப்ஸை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது ஆப்பிள் மியூசிக்.

ஆப்பிளின் ப்ரொஃபஷனல் இசை உருவாக்கும் செயலி லாஜிக் ப்ரோ எக்ஸ் (Logic Pro X). இதைப் பயன்படுத்தி எவ்வாறு இசையை உருவாக்குவது என்று ’தி மேக் லேப்ஸ்’ கற்றுக்கொடுக்கும். நலிந்த பின்னணியைக் கொண்ட 10 மாணவர்கள் முழு நேரமாக இசை பயில நிதியுதவி வழங்கப்போவதாகவும் ஆப்பிள் மியூசிக் அறிவித்துள்ளது.

”இன்றைய உலகில் இசைதான் மருந்தாக விளங்குகிறது. இசை மீதான ஆர்வத்தைப் பொருத்தவரை எங்களுக்கும் ஆப்பிள் மியூசிக்கிற்கும் இடையே ஒத்த சிந்தனையும் ஆர்வமும் உள்ளது,” என்றார் ரஹ்மான். ஆஸ்கர் விருது பெற்ற இந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் குறிப்பிடுகையில்,

”வருங்காலத்தில் திறமையான இசைக்கலைஞர்களையும் இசையமைப்பாளர்களையும் உருவாக்க உதவும் வகையில் KMMC-யின் லேப்களும் ஸ்காலர்ஷிப்களும் அமைந்துள்ளது. 20 வருடங்களுக்கும் மேலாக லாஜிக் ப்ரோ பயன்படுத்தி வருகிறேன். ஆப்பிளுடன் இணைந்து பயணிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்.”

இந்தியாவிலுள்ள இசைக்கலைஞர்களுக்கான எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் 2008-ம் ஆண்டு தி கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரியை நிறுவினார் ரஹ்மான். இந்திய இசைக்கலையை வலுப்படுத்துவதுடன் மேற்கத்திய இசை மற்றும் இசை தொழில்நுட்பம் குறித்த கல்வியையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

”புகழ்பெற்ற திறமைசாலியான ஏ ஆர் ரஹ்மான் முன்னிலையில் மும்பையில் அவருடன் இணைந்து இந்த அறிவிப்பை பணிவுடன் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.”

என்றார் ஆப்பிளின் இணைய மென்பொருள் மற்றும் சேவையின் மூத்த துணைத் தலைவர் எட்டி க்யூ.

”இசையில் திறமைகளை கண்டறிந்து, பகிர்ந்துகொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் உதவவேண்டும் என்று விரும்புகிறது ஆப்பிள் மியூசிக் மற்றும் தி கே எம் மியூசிக் கன்சர்வேட்டரி. வருங்கால கலை மற்றும் இசை சமூகத்தினரின் வளர்ச்சிக்கு உதவும் நிறுவனத்திற்கு உறுதுணையாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்,” என்றார் கியூ.

ஆப்பிள் 1984-ம் ஆண்டு Macintosh-ஐ அறிமுகப்படுத்தியது.