சிறு வணிகர்கள், வாடிக்கையாளரை ஈர்க்க உதவும் 'டீ'ரிவார்ட்ஸ்'

0

பெருகி வரும் நுகர்வோர் சந்தையில் வாடிக்கையாளர்களை தக்க வைக்க உதவும் சென்னை தொழில்முனை நிறுவனம்

சிறு வணிகம் புரியும் வணிகர்கள் மற்றும் வீட்டிலிருந்தபடியே தொழிலில் ஈடுபடுபவர்களும் தங்களின் பொருட்களை விருத்திசெய்யும் அறிவிப்புகளையும் பதிவுகளையும், முகநூலில் புழங்கும் அனைவரும் அன்றாடம் எதிர்கொள்கிறோம். தேர்ந்தெடுக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளதால் வாடிக்கையாளர்களும் ஒரே வணிகரிடம் தொடர்ந்து வாங்கும் போக்கு மாறி வருகிறது. இத்தகைய சூழலில் வாடிக்கையார்களை தக்க வைத்துக் கொள்ள சிறு வணிகர்களும் மெனக்கட வேண்டி உள்ளது. ஆனால் குறைவான நபர்கள் மற்றும் நிதியை கொண்டு இயங்கும் வணிகர்கள், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பெரும் நேரத்தையோ நிதியோ செலவிட முடியாத சூழலே உள்ளது.

இதற்கெல்லாம் தீர்வாக அமைவது தான் "டீ'ரிவார்ட்ஸ்" (D'Rewards) நிறுவனத்தின் இலக்கு. இந்த முயற்சியே இவர்களை சமீபத்தில் நடைப்பெற்ற பேபால் நடத்திய 'ஸ்டார்ட் டான்க்' (PayPal StartTank) போட்டியில் வெல்லும் வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது.

டீ'ரிவார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான விஜய்கிருஷ்ணா உடன் தமிழ்யுவர் ஸ்டோரி உரையாடியது.

நிறுவனர்: விஜய் க்ருஷ்ணா | இணை-நிறுவனர்: ஷோயப் மொஹமத்
நிறுவனர்: விஜய் க்ருஷ்ணா | இணை-நிறுவனர்: ஷோயப் மொஹமத்

நிறுவனம் உருவான கதை

பொறியியல் படிப்பை சேலம் பாவை கல்லூரியில் முடித்து பல்வேறு நிறுவனங்களில் வணிக வளர்ச்சித் துறையில் பணி புரிந்தேன். சேல்ஸ், வர்த்தகம் என்பது என்னுள் ஊறிய ஒன்று. மூன்று வருடம் முன்பு என்னுடைய திருமணத்தின் போது தேவைப்படும் விற்பனையாளர்களை கண்டறிவது சவாலாக இருந்தது, அதன் காரணமாக 'ஷாதிபல்ஸ்' என்ற முயற்சியை தொடங்கினேன். பல்வேறு காரணத்தால் அதை தொடர்ந்து எடுத்துச் செல்ல இயலவில்லை. 

இதன் பின்பு நிறைய வர்த்தக எண்ணங்கள் தோன்றின. 2014 ஆம் ஆண்டு நானும் என் கல்லூரி நண்பர் ஷோயப் முஹம்மதை பெங்களூருவில் காபி டேவில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம். ஒரு நாளில் எத்தனையோ வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் காபி டே எவ்வாறு இவர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற சிந்தனையில் உருவான எண்ணம் தான் 'டீ'ரிவார்ட்ஸ்' என்றார்.

என்னுடைய வர்த்தக, சேல்ஸ் பின்னணி மற்றும் ஷோயப்பின் தொழில்நுட்ப வல்லமை, இந்த எண்ணத்தை செயல்படுத்த ஏதுவாக்கியது.

சந்தை வாய்ப்பு

இந்தியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் 96 சதவிகிதம் முறைபடுத்தப்படாத துறையாக உள்ளது. இவர்களுக்கென்று பிரத்யேக சேல்ஸ் அல்லது சந்தைபடுத்த உதவும் துறை என்று எதுவும் இல்லை. பொதுவாக இவை தனி நபர்கள் அல்லது மிக சிறிய குழு கொண்ட வர்த்தகமாக இயங்கும். நம் அன்றாடம் செல்லும் சலூன், சிறிய கடைகள் இவையெல்லாம் இதற்கு நல்ல உதாரணம். இவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தக்க வைத்துக் கொள்ளவும் விரும்பினாலும் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இவர்கள் தான் எங்களின் இலக்கு. சிறு வணிக நிறுவனங்களும், பெரு நிறுவனங்களுக்கு இணையாக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் "லாயல்டி திட்டத்தை" மேற்கொள்ள வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

பத்தே நிமிடத்தில் நாட்டின் எந்த இடத்தில்இருந்தாலும் இவர்களுக்கான லாயல்டி திட்டத்தை எங்களால் அமைக்க முடியும், என்கிறார் விஜய்.

லாயல்டி திட்டத்தை மேற்கொள்ளும் முறை

இத்திட்டத்திற்கு செயலி தரவிறக்கம் தேவையில்லை, ஸ்மார்ட் கைபேசி அவசியம் கூட இல்லை. பின் எப்படி?

நாம் அனைவரும் எதிர்கொள்ளும் பெரிய சவால்; ஏகப்பட்ட செயலிகளை இன்று தரவிறக்கம் செய்ய வேண்டி உள்ள நிலைதான். இதுவே வணிகத்தை பொறுத்தவரை வணிகர் மட்டுமல்லாது வாடிக்கையாளரும் அந்தச் செயலியை வைத்திருக்க வேண்டும் என்பது பெரிய இடர்பாடாகவே உள்ளது. இதை நாங்கள் உணர்வுபூர்வமாக உணர்ந்தோம். முதலில் இந்த முறையில் நாங்கள் செயல்பட்ட போது இதிலுள்ள சவாலை அறிந்து கொண்டோம். இத்தகைய சிக்கல் இல்லாமல் இரு தரப்புக்கும் பயனளிக்கும் வண்ணம் எங்களின் திட்டம் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் டாஷ்போர்ட் மூலம் செயல்படுத்தும் முறையை கொண்டு வந்தோம்.

ஒரு வணிக நிறுவனம் லாயல்டி திட்டத்தை மேற்கொள்ள, எத்தனை சதவிகிதம் 'காஷ் பாக் ஆஃபார்' என்ற தகவலுடன் வாடிக்கையாளர்களின் எண்களை எங்களின் டாஷ்போர்டில் ஏற்றி விட்டால் போதும். இதைத் தவிர பண்டிகைக் கால சலுகைகள் அல்லது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை கவர பிரத்யேக திட்டம் என சூழலுக்கேற்ப முடிவெடுக்கலாம். 

வாராந்திரமாகவோ அல்லது மாதம் ஒரு முறை இவர்களின் சலுகைகள் எந்த அளவிற்கு வணிகம் ஈட்டியுள்ளது, எத்தகைய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது போன்ற நுண்ணிய தகல்வளை எங்களால் தர முடியும்.

சந்தித்த சவால்கள்

ஆரம்பத்தில்செயலிவடிவத்தில் அறிமுகப்படுத்தியதால், சிறிது பின்னடைவு ஏற்பட்டது . ஆனால் தேவையறிந்து இதனை விரைவில் நிவர்த்தி செய்ய முடிந்தது. பிப்ரவரி மாதம் 2015 ஆம் ஆண்டு எங்களின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பை வெளியிட்டோம். சென்னையில் வணிகர்களை இதன் பயனை பற்றி புரிய வைப்பதில் சிரமம் இருந்தது. இத்தகைய திட்டத்தை முன்னெடுத்து செல்ல நிறைய செலவாகும் என்கிற எண்ணத்தை உடைக்க சற்று நேரமானது.

வணிகர்களின் தேவையறிந்து அதற்கேற்றார் போல் தங்களின் சேவையை வழங்குவதாக கூறும் விஜய், வெகு விரைவில் ஒருசார்ந்த டாஷ்போர்ட் முறையை அறிமுகப் படுத்தவுள்ளதாக கூறுகிறார்.

வரும் மாதத்தில் இவர்கள் அறிமுகப்படுத்த இருக்கும் B2B செயலி புரட்சிகரமானதாக அமையும் என்கிறார். உலகின் எந்த மூலையில் இருக்கும் சிறு வணிகர்களும் இதன் மூலமாக பயன் பெறுவர் என்று நம்பிக்கை மிளிர கூறும் விஜய், இதனை தோற்றுவிக்க 25 நாட்களே ஆனதாக கூறுகிறார்.

அக்டோபர் 2016 இல் ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் இந்நிறுவனம், இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளிலும் தங்களின் செயலியை விரைவில் கொண்டிருக்கும். பேபால் நிறுவனத்தின் ஆதரவு இதற்கு மேலும் வலு சேர்க்கும் என்கிறார் இவர்.

தொழில்முனையும் ஆர்வம் அதிகரித்துள்ள இந்த வேளையில், சிறு தொழில் புரிவோருக்கு, டிரிவார்ட்ஸ் போன்ற நிறுவனச் சேவை வாடிக்கையாளர்களை கவர உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இணையதள முகவரி: D'rewards

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற புதிய சேவை அளிக்கும் தொழில்முனைவு தொடர்பு கட்டுரைகள்

பவர்பாயிண்ட் பிரசன்டேஷன்களை டிசைன் செய்து அழகுப்படுத்தும் 'ஸ்கெட்ச்பபிள்'

அனைத்து விதமான சேவைகளுக்குமான மக்கள் மேடையாக விளங்கும் 'டாஸ்க்மித்ரா'