’வாட்ஸ்-அப் பிசினஸ்’ பிரத்யேக செயலி அறிமுகம்: இந்தியாவில் இந்த சேவை எப்படி செயல்படும்?

0

வாட்ஸ் அப் பிசினஸ் செயலி, சர்வதேச அளவில் அறிமுகம் ஆகியுள்ளது. வரும் வாரங்களில் இந்த செயலி இந்தியாவில் அறிமுகம் ஆகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்-அப் பிசினஸ் செயலி சர்வதேச அளவில் வியாழக்கிழமை அறிமுகமானது.

கடந்த ஆண்டு வாட்ஸ்அப் , வர்த்தகத்திற்கு என்று பிரத்யேகமான செயலியை உருவாக்க  இருப்பதாக அறிவித்தது. மேலும் அண்மையில் தனது தளத்தில் வர்த்தக நிறுவன  கணக்குகளை உறுதி (வெரிபை) செய்வதையும் துவங்கியது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பில் வாட்ஸ் அப் கூறியிருப்பதாவது:

“உலகம் முழுவதும் மக்கள் தாங்கள் அக்கறை கொண்டுள்ள சிறிய வர்த்தகத்துடன் தொடர்பு கொள்ள – இந்தியாவின் துணிக்கடைகள் முதல் பிரேசிலின் ஆட்டோ உதிரிபாக கடைகள் வரை- வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துகின்றனர். ஆனால் வாட்ஸ் அப் சேவை மக்களுக்காக உருவாக்கப்பட்டது. நாங்கள் வர்த்தக அனுபவத்தை மேம்படுத்த விரும்புகிறோம். உதாரணத்திற்கு வர்த்தக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு பதில் அளிக்க, வாடிக்கையாளர் மற்றும் தனிப்பட்ட செய்திகளை பிரித்தறிய மற்றும் அலுவல் நோக்கிலான இருப்பை உண்டாக்க எளிதாக்குவது எங்கள் நோக்கமாகும்.”

மேலும், வாட்ஸ் அப் பிசினஸ் செயலி, இந்தோனேசியா, இத்தாலி, மெக்சிகோ, யு.கே மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உடனடியாக கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் இந்திய குழு, இந்த செயலி இந்தியாவில் படிப்படியாக அறிமுகமாகும்  என்றும், வரும் வாரங்களில் அறிமுகம் ஆகலாம் என்றும் யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தது. ஆனால் இதற்கான கால வரையறை நிர்ணயிக்கப்படவில்லை.

வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளவதையும், வாடிக்கையாளர்களுடன் உரையாடுவதையும் எளிதாக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. 

இதில் வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ள அம்சங்கள்:

பிசினஸ் ப்ரஃ பைல்ஸ் (Business Profiles)

இது வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான அறிமுகம், இ-மெயில் அல்லது கடை முகவரி, இணையதளம் ஆகிய விவரங்களை கொண்டுள்ளது.

மெசேஜிங் வசதிகள்

ஸ்மார்ட் மெசேஜிங் வசதிகள் நேரத்தை மிச்சமாக்கும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு  விரைவாக பதில் அளிக்கும் வசதி, வர்த்தகத்தை அறிமுகம் செய்யும் வகையிலான வரவேற்பு  செய்திகள், நிறுவனம் பிஸியாக இருப்பதை தெரிவிக்கும் வசதி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

மெசேஜிங் புள்ளிவிவரங்கள்

செய்திகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

கணக்கு வகை

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வர்த்தக நிறுவனத்துடன் தொடர்பு கொள்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். வர்த்தக நிறுவனத்தின் தொலைபேசி எண் அதனுடயது என உறுதி செய்யப்பட்ட பின், அந்த கணக்கு உறுதி செய்யப்படும்.

வாட்ஸ் அப் மெசேஜிங் செயலியைப்போலவே, வாஸ்ட் அப் வெப் சேவையும், வாட்ஸ் அப் பிசினஸ் மூலம் டெஸ்க்டாப்பில் இருந்து செய்திகளை அனுப்பி, பெற வழி செய்யும்.

இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் மாற்றம் வருமா?

இல்லை, வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எப்போதும் போல பயன்படுத்தலாம் என வாட்ஸ் அப் தெரிவிக்கிறது. மேலும் எதையும் புதியாக தரவிறக்கம் செய்ய வேண்டாம்.  வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற விரும்பும் செய்திகளை கட்டுப்படுத்தும் வசதி இருக்கும் என்பது முக்கியமான விஷயம். வர்த்தக நிறுவனம் உட்பட எந்த எண்ணையும் ஸ்பேம் என பிளாக் செய்யலாம்.

இந்தியாவில் எந்த அளவு முக்கியம்?

இந்தியா பற்றி குறிப்பிடும் போது, இந்தியாவின் 84 சதவீத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாட்ஸ் அப் சேவை வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள உதவுவதாக கருதுவதாகவும், 80 சதவீத சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாட்ஸ் அப் தங்கள் வர்த்தகம் வளர உதவுவதாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, வாட்ஸ் அப் இந்திய இணைய நிறுவனங்கள் புக்மைஷோ மற்றும் ரெட்பஸ் ஆகியவை சோதனை முறையில் அதன் ஏபிஐ வசதியை அணுகு வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தது. அண்மையில் கோஇபிபோ இந்த வசதியை பயன்படுத்த துவங்கியுள்ளது.

எனினும் இந்த வசதி மூடப்பட்ட பீட்டா வடிவில் உள்ளது. இந்த அறிவிப்பு மூலம் வாட்ஸ் அப்,  வர்த்தக சேவையை தனியே முறைப்படி அறிமுகம் செய்கிறது. எனினும் எற்கனவே குறிப்பிட்டபடி வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு எந்த மாற்றமும் இருக்காது. வாட்ஸ் அப் கணக்கில் வர்த்தகம் சார்ந்த கணக்குகள் இடம்பெறும் அவ்வளவு தான்.

வாட்ஸ் அப்பின் பெரும் வாடிக்கையாளர் பரப்பை பார்த்து, 2014-ல் ஃபேஸ்புக் இந்த செயலியை 19 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கில கட்டுரையாளர்: தாருஷ் பல்லா