ஐந்தில் ஒரு குழந்தை ஆன்லைன் வன்முறையை எதிர்கொள்கின்றனர்: பெற்றோர்கள் இதைத் தடுப்பது எப்படி?

1

8 முதல் 16 வயது வரையிலான இந்தியக் குழந்தைகளில் 81% பேர் சமூக ஊடக ஒருங்கிணைப்பில் தீவிரமாக செயல்படுவதாகவும் அதில் 22% பேர் ஆன்லைனில் துன்புறுத்தப்படுவதாகவும் டீன்ஸ், ட்வீன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் 2015-ம் ஆண்டின் ஆய்வு தெரிவிக்கிறது. 

உங்கள் குழந்தை ஸ்மார்ட்ஃபோனில் அதிக நேரம் செலவிடுகிறார்களா? சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுகிறார்களா? ஆஃப்லைனை காட்டிலும் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுகிறார்களா? அப்படியானால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம் இது.

இந்தியா மற்றும் இணையம் வாயிலான துன்புறுத்தல்கள் 

இணையம் வாயிலாக இந்திய குழந்தைகள் துன்புறுத்தப்படுவதற்கான ஆபத்துகள் அதிகரித்துள்ளது. இணையம் வாயிலான கொடுமைகளைப் பொருத்தவரை மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா முன்னணி வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போது பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கையை வைத்து இந்த அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு ஒரு போலியான முகநூல் ப்ரொஃபைலை உருவாக்கி தன்னை அவதூறு செய்வதாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தை தெரிவித்தது. அதேபோல் எட்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியின் முகநூல் கணக்கு தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்காக ஹேக் செய்யப்பட்டுள்ளது.

எட்டு முதல் 17 வயது வரையுள்ள இந்தியக் குழந்தைகளில் 53 சதவீதம் பேர் குறைந்தது ஒரு முறையாவது இணையம் வாயிலான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

2017-ம் ஆண்டு இறுதியில் இந்த வயதினரில் 13 கோடி குழந்தைகள் இணையதள தரவுகளை அணுகுவார்கள் என்று தோராயமாக மதிப்பிடப்படுகிறது. எனவே இந்திய குழந்தைகள் இணையம் வாயிலான துன்புறுத்தல்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறான இணையம் வாயிலான துன்புறுத்தல்கள் சமூகம் மற்றும் உளவியல் சார்ந்த தாக்கத்தை இளம் வயதினரின் மனதில் ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே.

இணைய துன்புறுத்தல்களின் வகைகள்

இணையம் வாயிலான துன்புறுத்துல்களை நேரடி தாக்குதல் மற்றும் வேறொரு நபர் மூலமாக துன்புறுத்துவது. நேரடி இணைய தாக்குதல்களில் தாக்க முற்படுபவர் பாதிக்கப்பட்டவரை நேரடியாக கீழ்கண்ட முறைகளில் தாக்குவார்.

1. மெசென்ஜர் அல்லது வாட்ஸ் அப்பில் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவார்கள்

2. திட்டமிட்டு கருத்துக்களை பதுவு செய்வார்கள். தனிப்பட்ட அந்தரங்க விவரங்கள் அல்லது போலியான தகவல்களை வலைப்பக்கத்தில் பதிவிடுவார்கள்.

3. பாதிக்கப்பட்டவருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் அவரது சாட் ரூமில் ஆபாசமான விஷயங்களையும் வெறுக்கத்தக்க செய்திகளையும் பதிவிடுவார்கள்.

4. பாதிக்கப்பட்டவரின் கணக்கை ஹேக் செய்வார்கள். அல்லது பாஸ்வேர்டை திருடி அவர்களது கணக்கை முடக்கிவிடுவார்கள். அல்லது ஆபாசப்படுத்தவோ அவமதிக்கவோ ஒரு போலியான கணக்கை உருவாக்குவார்கள்.

5. இமெயில், மெசென்ஜர் அல்லது வாட்ஸ் அப் வாயிலாக ஆபாசமான தகவல்களை அனுப்புவார்கள்.

6. பாதிக்கப்பட்டவரின் பெயரில் ஒரு ஆன்லைன் வாக்கெடுப்பை உருவாக்கி அவர்களது உடல் அமைப்பை கேலிசெய்வார்கள் அல்லது சங்கடப்படுத்துவார்கள்.

7. தவறான தகவல்கள், ஆபாசமான புகைப்படங்கள், வெறுக்கத்தக்க மெசேஜ் போன்றவற்றை பகிர்ந்துகொண்டு பாதிக்கப்பட்டவரின் புகழை குலைப்பதற்காக ஒரு தவறான வலைதளத்தை உருவாக்குவார்கள்.

8. பாதிக்கப்பட்டவரின் மெயிலுக்கு ஆபாசமான அல்லது தேவையற்ற மெயில்களை அனுப்புவார்கள்

9. கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது மொபைல் போன்றவற்றிலுள்ள வீடியோ கேமிராவை தவறாக பயன்படுத்துவதற்கு ஆன்லைன் மெசேஜிங் செயலிகள் மற்றும் வலைதளங்கள் போன்றவற்றை ஏதுவாக அமைந்துள்ளது

10. தீங்கிழைக்கும் மென்பொருள் (ட்ரோஜன்ஸ்) கம்ப்யூட்டர் சிஸ்டத்தை யாருக்கும் தெரியாமல் ஹேக் செய்வதுடன் கம்யூட்டர் சிஸ்டத்தின் கேமிராவின் எல்ஈடியை முடக்கிவிடும். இந்த எல்ஈடிதான் கேமிரா இயங்கிக்கொண்டிருப்பதை பயனாளிக்கு தெரிவிக்கும். இதனால் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் இதை அறியாமலேயே தங்களது நடவடிக்கைகளை பதிவிட்டு பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

புதிய அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள்

சமூக ஊடகங்களில் குழந்தைகள் துன்புறுத்தப்படுவது ப்ளூவேல் சவால் மற்றும் சராஹா என வெவ்வேறு வகைகளில் உருமாறி வருகிறது. இதில் ப்ளூவேல் சவால் என்கிற இணையதள விளையாட்டு அதை விளையாடுபவரை 50 கட்டளைகளை நிறைவு செய்ய சவால் விடுக்கும். இதில் பெரும்பாலும் அந்த குழந்தையை தற்கொலை செய்துகொள்ள கட்டாயப்படுத்தும். சராஹா மற்றொரு ஆன்லைன் செயலி. இதில் பெயரை வெளியிடாமல் மோசமான, கடுமையான, சங்கடமான கருத்துக்களை பதிவிடலாம். சராஹாவில் பெயர் வெளியிடப்படாததால் குழந்தைகளை மிரட்டவும் பாலியல் ரீதியாக அச்சுறுத்தவும் இதைப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

குழந்தைகள் வன்முறைக்கு ஆளாவது, துன்புறுத்தப்படுவது அல்லது தற்கொலைக்கு கட்டாயப்படுத்தப்படுதுவது போன்ற நிலைக்கு தள்ளப்படும் ஆபத்திற்கு இப்படிப்பட்ட ஆன்லைன் செயலிகள் வழிவகுக்கிறது.

ஏன் குழந்தைகள் வன்முறைக்கு ஆளாகின்றனர் அல்லது அவர்கள் இலக்காக கொள்ளப்படுகின்றனர்?

நம்மில் பெரும்பாலானோர் நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் யாரும் குறிப்பாக குழந்தைகளை இலக்காகக் கொண்டு அச்சுறுத்த மாட்டார்கள் என்றும் நம்புகிறோம். நாம் நேர்மையாக ஒரு உண்மையை எதிர்கொண்டே தீரவேண்டும். அதாவது முழுமையான ஆன்லைன் பாதுகாப்பு என்பது சாத்தியமில்லாத ஒன்று. ’ஏன் குழந்தைகளை இலக்காக் கொண்டு அச்சுறுத்துகின்றனர்’ என்கிற கேள்விக்கு விடையேதும் இல்லை. ஆனால் குழந்தைகள் வன்முறைக்கு ஆளாகும் சுமையை தாங்கிக்கொண்டே தீரவேண்டிய நிலை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குற்றவாளிகளால் குழந்தைகளையே எளிதாக வன்முறைக்கு உட்படுத்த முடியும் என்பதே முக்கியக் காரணம்.

ஆன்லைன் துன்புறுத்தல்கள் குழந்தைகளுக்கு மனதளவில் தொந்தரவளிக்கும். பாடங்களில் கவனம் செலுத்த முடியாது. மொபைல் மற்றும் இணையதள பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் குழந்தைகள் பயத்தின் காரணமாக அவ்வாறான சம்பவங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்வதில்லை. 

அப்படிப்பட்ட சம்பவங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பாததால் எங்களை நேரடியாக அணுகுகின்றனர். நாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம்.

குழந்தைகள் வன்முறைக்கு ஆளாவதை தடுத்தல்

குழந்தைகள் வன்முறைக்கு ஆளாவதை தடுக்கும் நடவடிக்கையில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு சில வழிகாட்டுதல்களை பின்பற்றலாம்.

• பெற்றோர் கண்காணிக்க உதவும் மென்பொருள் செயலிகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வலைதளங்களை கட்டுப்படுத்தி அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்கவும்

• கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் பிற தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்துவதற்கு விதிமுறைகளை அமைக்கவும்

• இணைய உலகின் சமீபத்திய ட்ரெண்டுகளை தெரிந்துகொள்ளவும்

• உங்கள் குழந்தைகளின் ஆன்லைன் மற்றும் கேமிங் நடவடிக்கைகளை கண்காணிக்கவும்

• நவீன தொழில்நுட்பம் குறித்து அதிகம் தெரிந்துகொள்ளவும். இதைத்தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.

• வன்முறை சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் அது குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்கவும்.

ஆன்லைன் வாயிலாக குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தவிர்க்க பெற்றோர்களுக்கான வழிகாட்டுதல்கள்

தொந்தரவளிக்கும் மெசேஜ்கள், பாலியல் சம்பந்தப்பட்ட படங்கள், அச்சுறுத்தல்கள் போன்றவை குழந்தைகளுக்கு வந்தால் அந்த சான்றுகளை பாதுகாக்கவேண்டும் என்றும் அவற்றிற்கு பதிலளிக்கவேண்டாம் என்றும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

குழந்தைகள் இணையம் குறித்த விழிப்புணர்வு ப்ரோக்ராம்களில் (ஆன்லைன் / ஆஃப்லைன்) கலந்துகொள்ளவேண்டும்

பெற்றோரிடமோ பாதுகாவலரிடமோ அல்லது ஆசிரியரிடமோ ஆன்லைன் வன்கொடுமை குறித்து புகாரளிக்க வழிகாட்டுங்கள்.

• துன்புறுத்துவோரின் இ-மெயில் முகவரி, சமூக ஊடக கணக்கு அல்லது செல்போன் எண் போன்றவற்றை முடக்கவோ அல்லது அவர்களது விவரங்களை மாற்றவோ வலியுறுத்துங்கள்

• அவர்களது தனிப்பட்ட தகவல்களை தனிப்பட்ட முறையிலேயே வைத்துக்கொள்ள கற்றுக்கொடுங்கள். அவர்களது சமூக ஊடக கணக்கின் ப்ரைவசி செட்டிங்கை சரிபார்க்கவும்.

• பெற்றோரிகளின் பெயர், முகவரி அல்லது வீட்டில் தனியாக இருக்கும் தகவல் போன்றவற்றை சமூக தளத்தில் பதிவிடவோ பகிர்ந்துகொள்ளக்கூடாது.

• பெற்றோர்கள் தவிர மற்ற யாரிடமும் பாஸ்வேர்டை பகிர்ந்துகொள்ளக்கூடாது.

• கோபமாக இருக்கையில் எதையும் பதிவிடவோ அல்லது ஆன்லைனில் சாட் செய்யவோ கூடாது.

• ஆன்லைன் நடவடிக்கைகள் குறித்து பெற்றோர்களிடம் வெளிப்படையாக இருக்கவும்.

• பரிச்சயமில்லாதவர்களிடம் சமூக ஊடகங்களில் நட்பு கொள்ளவேண்டாம்.

• துன்புறுத்துவோரிடமும் அமைதி காக்கவும்.

ஆன்லைன் துன்புறுத்தல்கள் ஆபத்தானவை. ஏனெனில் துன்புறுத்தப்படும் குழந்தைகள் குற்றவாளி அவர்களை எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும், குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும் துன்புறுத்தலாம் என்று நினைப்பார்கள். ஆன்லைனில் வக்கிரமான புத்தியுடன் குழந்தைகளை அச்சுறுத்துவோரிடமிருந்து பாதுகாக்க குழந்தைகளின் நம்பிக்கைக்குரியவராக எப்போதும் பெற்றோர்கள் இருப்பதே ஒரே வழியாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : முகேஷ் சௌத்ரி