ரயில்வே பிளாட்பாரத்தில் தங்கிப் படித்து ஐஏஎஸ் ஆன ‘விவசாயி மகன்’ சிவகுரு!

0

வெற்றியாளர்களின் கதைகள் எப்போதுமே முயற்சி செய்பவர்களுக்கு, விடாமுயற்சியைப் போதிக்கும் பாடமாகவே அமைந்து விடுகின்றன. அந்தவகையில் இந்தாண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பலர், எந்த சூழ்நிலையிலும் விடாமுயற்சியோடு படித்தால் வெற்றிக்கனியைத் தட்டிப் பறித்து விடலாம் என்பதை நிரூபித்துள்ளனர்.

2017ம் ஆண்டிற்கான அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு முடிவுகள் கடந்தவாரம் வெளியானது. இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த துருஷெட்டி அனுதீப் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழக அளவில் முதலிடத்தை கீர்த்தி வாசன் பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 29 வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோல், அகில இந்திய அளவில் 71 வது இடத்தை மதுபாலனும், 101-வது இடத்தை சிவகுரு பிரபாகரனும் பிடித்துள்ளனர்.

இவர்களில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சிவகுரு, கடந்தாண்டு ஐஆர்எஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தாண்டு அவர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் புனல்வாசலை சேர்ந்தவர் சிவகுரு பிரபாகரன். ஏழ்மையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா விவசாயத்தோடு, சொந்தமாக சிறிய அளவில் மர அறுவை மில் ஒன்றையும் நடத்தி வந்தார். ஆனாலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததால், ஏழ்மையான சூழ்நிலையிலேயே சிவகுருவின் குடும்பம் இருந்தது.

சிவகுருவுடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரி, ஒரு சகோதரன் ஆவர். பள்ளிப் படிப்பை அரசு உதவி பெறும் பள்ளியில் முடித்தார். ஆனபோதும், புத்தகம் மற்றும் இதர கல்விச் செலவுக்கு மிகவும் சிரமப்பட்டே வளர்ந்துள்ளார் சிவகுரு.

”2004ம் ஆண்டு பிளஸ் 2 முடித்தேன். என்ஜினியர் ஆக வேண்டும் என்பது தான் எனது ஆசை. ஆனால், ஆசிரியர் பயிற்சியில் சேர முடிந்தது. ஆனபோதும், முழு ஈடுபாட்டோடு படித்து 2006ம் ஆண்டு அதில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்தேன். இருந்தாலும் விரும்பிய படிப்பை படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள் அப்படியே இருந்தது. அப்போது தான் சிவில் சர்வீஸ் தேர்வுகள் குறித்த அறிமுகம் எனக்கு கிடைத்தது,”

என ஐஏஎஸ் விதை எப்படி தன் மனதில் விழுந்தது என மனம் திறக்கிறார் சிவகுரு. ஆசிரியர் பயிற்சியை முடித்த சிவகுருவுக்கு உடனடியாக சொல்லிக் கொள்ளும்படி எந்த வேலையும் கிடைக்கவில்லை. எனவே, அப்பாவின் மர அறுவை மில்லில் அவர் வேலைக்குச் செல்லத் தொடங்கினார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் அங்கேயே அவர் வேலை பார்த்துள்ளார். அப்போது கிடைத்த சொற்ப வருமானம், அவருக்கு மேற்படிப்பு படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, மீண்டும் தனது என்ஜினியர் கனவை நிஜமாக்க, 2008-ம் ஆண்டு என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார் சிவகுரு. அதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்தது. கல்விக் கடன் உதவியோடு அங்கு படிக்கத் தொடங்கினார் சிவகுரு.

“கல்விக்கடன் மூலம் எனது கல்லூரி கட்டணங்களை கட்ட முடிந்தாலும், இதர செலவுகளுக்காக மிகவும் கஷ்டப்பட்டேன். சக மாணவர்களுக்கு செல்போன் ரீசார்ஜ் செய்து கொடுத்து, அதில் கிடைத்த கமிஷன் தொகையில் சிறிது செலவுகளை சமாளித்தேன்,” என்கிறார் சிவகுரு.

பணப் பிரச்சினை துரத்திய போதும், தன் கனவுகளைத் துரத்த மறக்கவில்லை சிவகுரு. ஐஐடியில் படிக்க விரும்பி, அதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கு ஆயத்தமாகத் தொடங்கினார் அவர். 2011ம் ஆண்டு கல்லூரி நண்பர் ரூபன் உதவியுடன், சென்னையில் வார இறுதி நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார்.

வார நாட்களில் கல்லூரிப் படிப்பு, வார இறுதி நாட்களில் சென்னையில் பயிற்சி வகுப்பு என வேலூருக்கும், சென்னைக்கும் மாறி மாறி அவர் அலையத் தொடங்கினார். சென்னையில் அறை எடுத்து தங்கும் அளவிற்கு பணம் இல்லாததால், பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட நேரம்போக, பரங்கிமலை ரயில்நிலையத்திலேயே தங்கினார் சிவகுரு. பிளாட்பாரத்திலேயே சுமார் நான்கு மாதங்கள் கழித்தார்.

இரவு தூக்கத்தை தியாகம் செய்து கல்லூரிப் படிப்போடு, நுழைவுத் தேர்வுக்கும் தீவிரமாக படித்தார். அதன்பலன், 2012ம் ஆண்டு ஐஐடி நுழைவுத் தேர்வில் அவர் தேர்ச்சி அடைந்தார். சென்னை ஐஐடியிலேயே இடம் கிடைக்க, என்ஜினியரீங் முடித்த கையோடு, ஐஐடியில் சேர்ந்தார்.

“2012-2014-ம் ஆண்டு எம்.டெக். சிவில் என்ஜினீயரிங் ஜியோ டெக்னாலஜி படிப்பை முடித்தேன். இதற்கிடையில் இந்தியன் சிவில் என்ஜினீயரிங் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, ரயில்வே துறையில் பணியில் சேர்ந்தேன். அப்போது தான் ஐஏஎஸ் ஆசை எனக்குள் வந்தது.” 

2004-ம் ஆண்டு தற்போது சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தஞ்சாவூர் கலெக்டராக இருந்தார். நான் பார்த்த முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி அவர் தான். அவரை பார்த்த பிறகு தான், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்ற உத்வேகம் வந்தது,” என்கிறார் சிவகுரு.

எனவே, ஐஏஎஸ் தேர்வுகளுக்காக 2014-ம் ஆண்டு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தின் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார் சிவகுரு. 2016-ம் ஆண்டு நடந்த முதல்நிலை, மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஐஆர்எஸ் பணிக்கு தேர்வானார். ஆனால் அவரது கனவு ஐஏஎஸ் பதவி மீதே இருந்தது. எனவே. கடந்தமுறை தான் என்ன தவறு செய்தோம் என சுய ஆய்வு செய்தார் சிவகுரு. மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு புதிய உத்வேகத்துடன் படிக்கத் தொடங்கினார்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என ஒவ்வொரு தேர்விலும் அவர் தேர்ச்சி பெற்றார். அகில இந்திய அளவில் 101வது இடத்தைப் பெற்று தற்போது ஐஏஎஸ் ஆகியுள்ளார் சிவகுரு.

“இன்றைய தலைமுறையினர் ஒரு நோக்கத்தோடு தங்கள் பயணத்தை தொடரும்போது அதற்கு தேவையான முயற்சிகளை அன்றே தொடங்க வேண்டும். நாளை என்ற வார்த்தையை எப்போது பிரயோகிக்காமல் பயணத்தை தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்.”

 இது தான் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு சிவகுரு கூறும் வெற்றிக்கான சூத்திரம்.

Related Stories

Stories by jayachitra