’பெண்களுக்கு தொழில்முனைவு மூலம் பொருளாதார அதிகாரத்தை அளித்தல்’- டை க்ளோபல் நடத்தும் அகில இந்திய பயிற்சி பட்டறை!

1

டை க்ளோபல் (டை இன்க்), “பெண்களுக்கு தொழில்முனைவு மூலம் பொருளாதார அதிகாரத்தை அளித்தல் குறித்த அகில இந்திய சாலை நிகழ்ச்சி” (All- ‐India Road Show on Women’s Economic Empowerment through Entrepreneurship) ஒன்றை அறிவித்துள்ளது. இந்த நிகழ்வு இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் வாழும் பெண்களுக்கு தொழில்முனைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக டை க்ளோபல் அறிவித்துள்ளது.   

இந்த நிகழ்விற்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க துறையின் யூஎஸ் மிஷன் இன் இந்தியா நிதி உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது டை க்ளோபல். இது குறித்து டை க்ளோபலின் முன்னாள் உறுப்பினரும் இந்த கண்காட்சியில் தலைவருமான சீமா சதுர்வேதி கூறுகையில்,

“தகுதி வாய்ந்த பெண்களை தொழில்முனைவில் ஊக்குவிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தொழில்முனைவில் உள்ள வாய்ப்புகளை பெண்களுக்கு எடுத்துரைப்பதன் மூலமும், அவர்களுக்குத் தேவையான வழிகளை அளிப்பதாலும், வளர்ச்சி என்னும் கனவை அடைய வழிவகுக்கும். பெண்கள் இருந்த இடத்தில் இருந்தே தங்களை சுற்றியுள்ள பிரச்சனைகளை வாய்ப்பாக அணுகி, அதற்கு தீர்வை உருவாக்க அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதனால் அவர்களை சிறந்த பெண் தொழில்முனைவோர்களாக மாற்ற முடியும்,” என்றார். 

இத்திட்டத்தின் கீழ் டை க்ளோபல் 5 பயிற்சி பட்டறைகளை 5 இந்திய நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. இது தமிழ்நாட்டில்- கோயம்புத்தூர், ஆந்திரா- வாரங்கல், ராஜஸ்தான் - ஜெய்பூர், மகராஷ்டிரா - நாக்பூர், மேற்கு வங்கம் - துர்காபூர் இடங்களில் நடக்கும். இதில் 25 ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோர் ஒவ்வொரு நகரத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொள்வர். இதற்காக தீவிர தேர்வுமுறையை டை க்ளோபல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 

மொத்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட 125 பங்கேற்பாளர்கள், இந்தியா மற்றும் அமெரிக்க வழிகாட்டிகளிடம் அறிமுகப்படுத்தப்படுவர். வழிகாட்டிகளின் அறிவுரைகள் படி, இந்த பெண் தொழில்முனைவோர் தங்கள் தொழில் வாய்ப்பினை கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். ஐந்து நாள் பயிற்சி பட்டறை முடிந்தபின், 5 நகரங்களில் இருந்து ஒவ்வொரு நகருக்கு தலா ஒரு பெண் தொழில்முனைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் ஐந்து பேர் மேலும் ஆறு மாத கூடுதல் வழிகாட்டுதலை பெறுவர். 

டை க்ளோபல் தலைவர் வெங்கடேஷ் சுக்லா இது பற்றி கூறுகையில்,

“அமெரிக்க மாநிலத்துறை எங்களுக்கு ஆதரவு அளிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. புதிய தலைமுறை தொழில்முனைவர்களை உருவாக்குவதில் எங்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு இது உறுதுணை புரியும். நாங்கள் இந்த பணியை தீவிரமாக செய்ய முயற்சித்து வருகிறோம். இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் வசிக்கும் பெண் தொழில்முனைவர்களை ஊக்குவிக்கும் இந்த வாய்ப்பு பலனளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார். 

இளம் பெண்கள் தொழில்முனைவை தேர்ந்தெடுக்க இது போன்ற முயற்சிகள் அவ்வப்பொது தேவைப்படுகிறது. இந்தியா முழுதும் இது செய்யப்படுவதால் நாட்டில் தொழில்முனைவு சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் உதவுகிறது. 1992 இல் டை க்ளோபல் சிலிக்கான் வேலியில் வெற்றிப்பெற்ற தொழில்முனைவர்கள், அலுவலர்கள் மற்றும் துறை வல்லுனர்களால் குழுவாக தொடங்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். 

மேலும் விவரங்களுக்கு : TiE Global