பல கற்றலுக்குப் பிறகு பிசினஸ் மாடலை மாற்றி அமைத்து வெற்றியும், விரிவாக்கமும் கண்ட ’பர்ப்பிள் ஐயர்னிங்’

2

அலுவலகம் மற்றும் வீடு என்று மாறி மாறி ஓடிக்கொண்டு இருக்கும் நமக்கு நம் அன்றாட வாழ்க்கையை இயல்பாக்கியது நவீன இயந்திரங்கள் தான். முடிந்த அளவு எல்லா சுமைகளையும் இயந்திரத்திடம் கொடுக்கும் நம்மால் உடல் வளைத்து இஸ்திரிப்போட முடியவில்லை; அதற்கான நேரமும் கிடைப்பதில்லை. நமது தெருவில் இருக்கும் இஸ்திரிக் கடைக்காரரிடம் கொடுத்து விடுகிறோம், இதை இன்னும் சீரமைத்து நவீன மையம் ஆக்க வந்த நிறுவனம் தான் ’பர்ப்பிள் ஐயர்னிங்

நிறுவனர்கள்
நிறுவனர்கள்

கோவையைச் சேர்ந்த நிறுவனர் விஜய் தனது நண்பர்களுடன் இணைந்து 2013-ல் துவங்கிய நிறுவனம் பர்ப்பிள் ஐயர்னிங். சலவைக்கு என ஒரு சில நிறுவனங்கள் பிராண்டாக வளர்ந்துள்ளது, ஆனால் இஸ்திரிக்கு என்று எந்த ஒரு பிராண்டோ நிறுவனமும் இல்லை. இதைத் தங்களுக்கு சாதகமாக்கி ஓர் பிராண்டை உருவாக்க முடிவு செய்தனர். 2013 முதல் பர்ப்பிள் ஐயர்னிங்கின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை இங்கு படிக்கலாம்.

தற்பொழுது கிட்டத்தட்ட நான்கு வருட பயணத்தை முடித்த இவர்கள், தங்கள் பிசினஸ் மாடலை மாற்றியது பற்றியும் அதற்கான காரணத்தையும் நம்முடன் பகிர்ந்தார் நிறுவனர்களில் ஒருவரான விஜய்.

“முதலில் நாங்கள் இந்த நிறுவனத்தை துவங்கியபோது, எல்லா தெருக்களில் இருக்கும் இஸ்திரி கடைகார்களையும் எங்கள் போட்டியாக தான் பார்த்தோம். ஆனால் ஒரு தொழிலை வளர்க்க அது முறையல்ல என்பதை நாளடைவில் புரிந்துக்கொண்டோம்” என்றார் விஜய்.

தற்போது உள்ள நவீன ஆடைகளுக்கு பழைய கரி ஐயர்னிங் சரி வராது என்று தொழில்நுட்பம் வாய்ந்த ஸ்டீம் ஐயர்னிங் முறையை கொண்டு வந்து, பல ஆண்டுகளாக பழக்கத்தில் இருக்கும் இஸ்திரிக் கடைகாரர்களை போட்டியாக முன்வைத்தனர். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் மற்றும் வலிமை உள்ளது என புரிந்து அவர்களையும் தங்களோடு இணைக்க ஃபிரான்சைஸ் மாடலை துவங்கியுள்ளனர். மேலும் இதன் மூலம் தெரு இஸ்திரிக் கடைகார்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பாக இதை பார்த்தனர்.

நான்கு வருட வளர்ச்சியில் பல படிப்பினைகளை கண்டு, கடந்த மே மாதம் ஃபிரான்சைஸ் மாடலை அறிமுகப்படுத்தினர்.

“எங்களுடன் இணைவது மூலம் அவர்கள் தங்கள் தொழில் முறையை அப்கிரேட் செய்துள்ளனர். தெரு ஓரத்தில் இருந்து ஒரு நவீன கடைக்கு அவர்களை மாற்றுகிறோம், ஸ்டீமிங்கு தேவையான தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்து அவர்களுக்கு ஓர் கடையை அமைத்து தருகிறோம்.”

அவர்கள் காலம் காலமாக இருந்து இஸ்திரி தொழில் செய்த அதே இடத்திலே அவர்கள் இதை தொடர்வதினால் அவர்களுக்கு தொழிலில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இருக்குமதி செய்யப்படும் இயந்திரத்தை பயன்படுத்தி எவ்வாறு தொழில் செய்ய வேண்டும் என்பதையும் பர்ப்பிள் ஐயர்னிங் பயிற்சி அளித்து கற்றுத் தருகிறது.

“பாரம்பரிய பழைய முறையில் ஒரு நாளுக்கு 100 துணிகளை இஸ்திரி செய்தால், புதிய முறை மூலம் 200 துணிகளை தாரளமாக செய்யலாம். இதன் மூலம் அவர்களுக்கு வருமானம் அதிகரிக்கிறது, மேலும் நாங்களே துணியை பெற்று இஸ்திரி முடிந்த பின் நேரடியாக வாடிக்கையாளரிடம் விநியோகமும் செய்கின்றோம்.”

இதற்காக மாதம் நிர்ணயத்த குறிப்பிட்ட ஃபிரான்சைஸ் கட்டணத்தை இந்நிறுவனம் பெறுகிறது. ஆனால் அதிக துணிகள் பெறுவதாலும், இஸ்திரிப் போடும் நேரம் குறைவு என்பதாலும் ஃபிரான்சைஸ் கட்டணம் மற்றும் இதர கடை கட்டணத்தை அளிப்பது அவர்களுக்கு சுமையாக இருப்பதில்லை என்கிறார் விஜய்.

“பெரும்பாலும் இஸ்திரி போடுபவர்கள் தங்களின் அடுத்த தலைமுறையினரை இதில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஆனால் தற்பொழுது இதை ஒரு தொழில் வாய்ப்பாக கருதி பல இளைஞர்கள் எங்களை அணுகுகின்றனர்,” என்றார்.

ரோட்டில் நின்று ஐயர்ன் பண்ணுவதை பலர் விரும்ப மாட்டார்கள், ஆனால் ஒரு பிராண்டாக மாற்றி ப்ரோஃபஷ்னலாக பண்ணும் பொழுது அதை ஏற்க இளைஞர்கள் தயாராக உள்ளனர். தொழில்முனைவர் ஆக வளர முதல் படியாக இதை எண்ணுகின்றனர். இதற்கான முதலீடாக அதிக தொகை தேவையில்லை, அதேபோல் அவர்களின் திறமைக்கு ஏற்ப முதலீட்டு தொகையும் வேறுபடும். முதலீடு செய்ய முடியாதவர்களுக்கும் பல ஏற்பாடுகளை செய்து தருகின்றனர் இவர்கள். 

“பாரத ஸ்டேட் வங்கி மூலம் முத்ரா வங்கிக் கடனையும் கடை அமைக்க நாங்கள் பெற்றுத் தருகிறோம். சில நேரத்தில் நாங்கள் முதலீடு செய்து மாதா மாதம் அதை பின்னர் வசூலித்துக் கொள்கிறோம். முதலீடு இருந்தால் தான் தொழில் ஈடுபாடு இருக்கும்,” என விளக்குகிறார் விஜய்.

இதன் மூலம் கோயம்பத்தூரில் இதுவரை 30 கடைகளை நிறுவியுள்ளனர். இதனை தொடர்ந்து தற்பொழுது சென்னையிலும் கால் பதித்து விட்டனர் இந்த நண்பர்கள். இந்த மாடல் மூலமே தங்கள் வணிகத்தை சென்னையிலும் விரிவாக்கம் செய்ய உள்ளனர். இதன் மூலம் தொழில்முனைவர்களையும் தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்த முடியும் என நம்புகின்றனர்!

Related Stories

Stories by Mahmoodha Nowshin