‘உஷா - தி லைஃப் சேவர்’: உயிர் காக்கும் 3 கருவிகளை உருவாக்கிய 65 வயது முதியவர்!

0

சென்னை நொளம்பூரைச் சேர்ந்த கே.ஜி.ராதாகிருஷ்ணன் என்ற 65 வயது பொறியாளர் கண்டுபிடித்த கருவி தான் ‘உஷா - தி லைப் சேவர்’. ஓய்வுக்காலத்தையும் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என விரும்பிய ராதாகிருஷ்ணன், முதியவர்கள், இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்துக் காலத்தில் உதவும் வகையில் எளிய அதேசமயம் பயனுள்ள மூன்று கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். வேலை நிமித்தம் சென்னை வந்தவர் இங்கேயே செட்டிலாகி விட்டார். 1976ம் ஆண்டு பொறியியல் பட்டதாரியான இவர், பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளார். சில காலம் சுயத்தொழிலும் செய்து வந்துள்ளார். பின்னர், குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருக்கிறார்.

உண்மையில் ராதாகிருஷ்ணன் ஓய்வில் இருக்கிறார் என்பது நிஜமில்லை. காரணம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வை ரசிக்கிறேன் என முடங்கி விடாமல், தற்போதும் பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்ச்சி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறார் இவர்.

இதுவரை மூன்று கருவிகள் கண்டுபிடித்துள்ளேன். அவற்றிற்கு என் மனைவியின் பெயரான உஷாவைச் சேர்த்து, ‘உஷா தி லைஃப் சேவர்’ எனப் பெயர் வைத்துள்ளேன்.

“இவற்றின் சிறப்பம்சமே ஆபத்துக் காலத்தில் உதவக் கூடியது தான். முதல் கருவி வாட்ச் போன்றது, இரண்டாவது இடுப்பில் கட்டும் பவுச் போன்றது, மூன்றாவது கருவி இருசக்கர வாகனங்களின் கீ செயினில் கோர்க்கக்கூடியது. அளவில் சிறியது என்பதால் திருடர்களால் இக்கருவியை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கண்டுபிடிக்க இயலாது,” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

மூன்று வருட காலம் உழைத்து இந்த ரிமோட்டுடன் கூடிய வாட்ச்சை உருவாக்கி உள்ளார் இவர். வீட்டில் தனியாக இருப்பவர்கள் இந்த வாட்சைக் கையில் கட்டிக் கொள்ளலாம். இது சார்ஜ் போட்டுக் கொள்ளக்கூடிய வகையில் உள்ளதால், 24 மணி நேரமும் இதனை பயன்படுத்தலாம். திருடர்கள் வீட்டிற்குள் வந்து திருட முற்பட்டால், இந்த வாட்ச்சில் உள்ள ரிமோட்டை அழுத்தினால், அது எழுப்பும் அபயக்குரல் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு கேட்கும். இதன்மூலம் ஆபத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் உதவியை எளிதில் பெற முடியும்.

“இந்த வாட்ச்சில் உள்ள ரிமோட்டை எப்போதும் நாம் கையில் கட்டிக் கொள்ள முடியும். தூங்கும்போதும் இதனை நாம் கையில் கட்டிக் கொள்ளலாம். தூக்கத்தில் நம் விரல் பட்டெல்லாம் இதன் அலாரம் இயங்காது. தொடர்ந்து சில நிமிடங்கள் அழுத்திப் பிடித்தால் மட்டுமே அலாரம் ஒலிக்கும். இதனுடன் இணைந்துள்ள ஸ்பீக்கர் வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருக்கும். எனவே, வீட்டிற்குள் ஆபத்தில் சிக்கியவர்கள் இதன் மூலம் வெளியில் இருப்பவர்களை எளிதாக உதவிக்கு அழைக்க முடியும்,” என ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

வாட்ச்சைப் போன்றது தான் இரண்டாவது கருவியும். ஆனால் வாட்ச் வீட்டில் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த முடியும். அப்போது வெளியில் செல்பவர்களின் பாதுகாப்பிற்கு என்ன செய்வது என்ற கேள்விக்கு கிடைத்த பதில் தான் மற்ற இரண்டு கருவிகளும். இதில் ஒரு கருவியின் அமைப்பு பௌவுச் போல் உள்ளது. இதில் உள்ள ஒரு அறையில் ரிமோட் இருக்க, மற்றொரு அறையில் செல்போன், பணம் போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம். வாக்கிங் அல்லது கடைத்தெருவுக்குச் செல்வோர் இதனை இடுப்பில் கட்டிக் கொண்டு செல்லலாம். பெண்களும் சேலை மறைவில் அல்லது சல்வாருக்குள் எளிதாக இதனை கட்டிக் கொள்ள முடியும்.

செயின் பறிப்பு திருடர்கள், பாலியல் கயவர்கள், குழந்தைக் கடத்தல் ஆசாமிகள் போன்றோரிடம் சிக்கிக் கொள்ளும் போது, இந்த பௌச்சில் உள்ள ரிமோட்டை அமுக்கினால், அதில் உள்ள ஸ்பீக்கர் உதவி கேட்டு சத்தம் எழுப்பும். அதன் மூலம் மறைவான இடங்களில் சிக்கிக் கொண்டாலும், மற்றவர்களிடம் இருந்து எளிதாக உதவியைப் பெற இயலும்.

மூன்றாவது கருவி, இருசக்கர வாகனத்தில் உள்ள கீசெயினுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்பீக்கர் வண்டியினுள் மறைவாகப் பொருத்தப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு, வாக்கிங், மார்க்கெட் போன்றவற்றிற்கு செல்லும் போது இந்த கருவி உதவிகரமாக இருக்கும்.

“எங்கள் குடியிருப்பின் அருகே கடந்த சில வருடங்களுக்கு முன் கொலை ஒன்று நடந்தது. நகைகளுக்காக ஆசைப்பட்டு, அந்த வீட்டில் டிரைவராக வேலை பார்த்த நபரே முதலாளியின் மனைவியை கொலை செய்தான். வீட்டின் கீழ்தளத்தில் கணவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, மேல்தளத்தில் இந்த கொலை நடந்துள்ளது. ஆனால், மனைவி கொல்லப்பட்டது சில மணிநேரங்களுக்குப் பிறகே அவரது கணவருக்குத் தெரிந்துள்ளது. காரணம் மனைவியின் அலறல் அவருக்கு கேட்கவில்லை. இல்லையென்றால், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியிருக்கலாம். இந்த சம்பவத்தின் பாதிப்பினால் தான் நான் முதல் கருவியை உருவாக்கினேன்,” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

முதல் கருவியைக் கண்டுபிடிக்க எங்கோ நடந்த கொலை காரணமாக அமைந்தது என்றால், அடுத்த இரண்டு கருவிகளுக்குமான தேவை அவரது வீட்டிலேயே ஏற்பட்டுள்ளது. ராதாகிருஷ்ணனின் இரண்டு மகள்களில் ஒருவர், ஒருமுறை ஈவ்டீசிங்கிற்கு ஆளாகி காயம் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளார். அவரது மனைவியின் செயினை திருடன் பறித்துச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. இதனாலேயே வெளியிடங்களிலும் பாதுகாப்புக்குத் தேவையான வகையில் இந்தக் கருவிகளை அவர் வடிவமைத்துள்ளார்.

முதல் கருவியை ரூ. 9,500க்கும், மற்ற இரண்டு கருவிகளை முறையே ரூ. 4,500க்கும் விற்பனை செய்து வருகிறார் ராதாகிருஷ்ணன்.

மனைவி உஷா உடன் ராதாகிருஷ்ணன்
மனைவி உஷா உடன் ராதாகிருஷ்ணன்
“நமது உயிரின், உடைமைகளின் மதிப்பை ஒப்பிடும் போது இந்தக் கருவிகளின் விலை ஒன்றும் அதிகமில்லை. இவற்றை நான் லாபநோக்கில் விற்கவில்லை. வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் மற்றவர்களைத் தொடர்பு கொள்ள நான் கண்டுபிடித்த இந்தக் கருவிகள் உபயோகமாக இருக்கும். திருடர்களால் இந்தக் கருவிகளை கண்டுபிடித்து அழிப்பது சிரமம்,”

என்கிறார் ராதாகிருஷ்ணனின் மனைவி உஷா. இவர் ஆசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

இவர் கண்டுபிடித்த இந்த மூன்று கருவிகளும் தற்போது தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில், ‘காப்பாத்துங்க, யாராவது இருக்கீங்களா?’ என பெண் குரலில் ஒலி எழுப்புகிறது. இதன் மூலம் மற்றவர்களின் கவனத்தை எளிதில் ஆபத்தில் இருப்பவர்கள் தங்கள் பக்கம் திருப்பிவிட முடியும் என்பது ராதாகிருஷ்ணனின் நம்பிக்கை.