ஒடிசாவில் மலையின மக்களுக்காகத் துவக்கப்பட்ட சமூக நிறுவனம்!

0

பழங்குடி மலையின மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அனுபவித்துப் புரிந்து, பழங்குடி மக்களுடன் தங்கியிருந்து, வாழ்க்கை நடத்தி அவர்களுக்கான சமூக நிறுவனம் ஒன்றை ஒடிசாவில் துவக்கியிருக்கிறார் அற்புதமான மனிதர் ஒருவர். இந்தக் கதை அவரைப் பற்றியது.

ஒடிசா பழங்குடி மலையின மக்களின் கலாச்சாரத்திற்கு எவ்வித இடையூறும் நேராத வண்ணம் நீடித்த வாழ்வாதாரத்தை அளிப்பது "வாட் விருக்க்ஷா" எனும் சமூக நிறுவனம். இதுவரை பழங்குடி மக்கள் வசிக்கும் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 368 குடும்பங்கள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அமைப்பைத் துவக்கிய விகாஷ் தாஸ், அதே ஒடிசா மாநிலத்தில் பிறந்தவர். அதுவொன்றே அந்நிறுவனத்தைத் துவக்குவதற்கான காரணமாக இருக்கிறது.

தனது சாதிக்கு அப்பாற்பட்ட மனிதர்களுடன் எத்தகைய உறவுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற பழைமைக் கட்டுப்பாடு மிக்க கோட்பாடு உடைய ’வாசுதெய்வா குடும்பகம்’ பின்னணியில் வளர்ந்தவர் தாஸ். “அவர்கள் எல்லாம் ஆதிவாசி சாதியைச் சார்ந்தவர்கள் என்பதால் உள்ளூர் மலைச்சாதிக் குழந்தைகளுடன் நான் பழகக் கூடாது, அவர்களுடன் தொட்டு விளையாடக் கூடாது என்று எனது குடும்ப உறவினர்கள் கடுமையான கட்டுப்பாடு விதிப்பார்கள்” என்று தனது இளமைப்பருவத்தை நினைவு கூர்கிறார்.

தொடர்ந்து கூறுகிறார் “நான் சிறுவனாக இருந்தபோது எனது சிறிய நகரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதிய பெண்மணி தனது பேரனுடன் கோவிலுக்குள் நுழைய முயற்சித்தார். அவர் ஆதிவாசி என்பதால் அங்கிருந்த சிலர் அவள் தகுதியான சாதியைச் சேர்ந்தவள் அல்ல, தூய்மையற்றவள் என்று அந்தப் பெண்மணியைத் தடுத்து வெளியேற்றி விட்டனர்” அப்போது எழுந்த எண்ணற்ற கேள்விகள் விகாஷின் மனதை விட்டு அகலவே இல்லை.

ஆதிவாசிப் பெண்கள்
ஆதிவாசிப் பெண்கள்

விகாஷ் வளர்ந்த பின்னர், மென் பொறியலில் முதுநிலைப் பட்டம் பெற்று ஐபிஎம் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பொறுப்பேற்றார். வாழ்க்கை நிறைவாகத் தான் இருந்தது. ஆனால் இளம் வயதில் பழங்குடி மக்களைப் பற்றி அவருள் எழுந்த கேள்விகள் மனதைக் குடைந்து கொண்டே இருந்தன. இளம் வயதில் தோன்றிய நிலையில் மறைவதற்குப் பதிலாகப் பன்மடங்கு வளர்ச்சி பெற்றிருந்தது. 2013 இல் தனது வேலையில் இருந்து வெளியேறி தனது வாழ்க்கையை ஆதிவாசிகளுக்கு அர்ப்பணிப்பது என்று முடிவெடுத்தார். அவர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளவும், அவர்களது வாழ்க்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்ளவும் நேரத்தைச் செலவிட முடிவு செய்தார். அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும் ஆவேசம் அவருள் எழுந்தது.

“நான் வளர் பருவச் சிறுவனாக இருந்தபோதே எனக்குப் பழங்குடிச் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பு இருந்தது என்றாலும் அவர்களுடன் ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்ள முடிந்ததில்லை. அதனால் அவர்களது வாழ்க்கைப் பிரச்சனையைக் கண்ணாடியின் ஊடாகப் பார்ப்பது போலத்தான் இருந்தது. அவர்களது பிரச்சனைகள் குறித்து என்னால் ஆய்வு செய்ய முடிந்தது. ஆனால் எதார்த்தத்தை என்னால் உணர முடிந்ததில்லை. நினைவறியாக் காலம் தொட்டே அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாக இருந்து வந்துள்ளனர். அதைப் புரிந்து கொள்வதற்காகவே அவர்களுடன் இரண்டு மாதங்கள் வாழ்க்கை நடத்துவதென்று முடிவு செய்தேன். அப்போது தான் என்னுள் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்திய ஆழமான பசியை உணர்ந்தேன். அந்த அனுபவதிற்குப் பிறகு தான் அவர்களது பிரச்சனை என்ன என்பதை என்னால் முழுமையாக உணர முடிந்தது. பொருள் உடைமை மட்டுமே மனித மகிழ்ச்சிக்கு உத்திரவாதமாகாது. அவற்றைப் பெற்றுள்ளமைக்காக நாம் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். நமது சமூகத் தளத்தில் முன்னேற்றத்தின் தேவையே, கண்டுபிடிப்புகளுக்கான தாயாக இருந்துள்ளது என்பதை நேரடியாக உணர முடிகிறது.

“பழங்குடிச் சமூகத்தின் பிரச்சனைகள் பல்லடுக்குகள் கொண்டவை. அவற்றை எளிதில் விளக்கி விட முடியாது. அவற்றை ஒரு புத்தகமாகவே எழுதி விடலாம். பொதுவாகப் பார்க்கப்போனால் முதன்மையான பிரச்சனைகளாக இருப்பவை நிலவியல் ரீதியாகவே அந்நியப்பட்டு இருக்கிறார்கள். அடுத்துக் கல்வியின்மை, வேலையின்மை, நிலமின்மை, சத்துப் பற்றாக்குறை, உடல் நலமின்மை, சுகாதாரமின்மை, இலாபம் தராத வேளாண்மை, தரகர்கள், வர்த்தகர்கள், வட்டிக்கு அளிப்பவர்கள் ஆகியோரின் சுரண்டல்கள் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு எங்களது நிறுவனம் பழங்குடி மக்கள் மத்தியில் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது” என்கிறார் விகாஷ்.

அவர்களது அடிப்படைத் தேவைகளை உத்திரவாதப்படுத்தக் கூடிய மாற்று சம்பாத்தியத்திற்குரிய அம்சங்களில் கூடுதலான கவனம் செலுத்துகிறது வாட் விருக்க்ஷா. முதலாவதாக ரூபாய் 2000 ஒவ்வொரு குடும்பத்திற்கும் அளிக்கப்பட்டு விடும். அதனையடுத்து அக்குடும்பங்கள் தம் சக்திக்கு ஏற்றவாறு ஒரு தொகையை ஈட்டிக் கொள்வார்கள். அது பற்றி விகாஷ் விளக்குகிறார் “பயனாளர்கள் குறைவான திறன் பெற்றவர்கள் என்பதால் துவக்க முதல் குறைவாகவே இருந்தது. ஆனால் தேர்ச்சி பெற்ற பின்னர் குறிப்பாக பெண்கள் தங்களது வருமானத்தை மூன்று மடங்கு நான்கு மடங்கு உயர்த்துக் கொண்டார்கள்”

முதல் இலக்கு விவசாயமாகத் தான் இருந்தது. “ஒற்றைப் பயிர் சாகுபடி முறையில் தோல்வி ஏற்படும் போது தற்கொலை செய்து கொள்வதொன்றே தீர்வாக இருந்தது. (ஒற்றைப் பயிர் சாகுபடியில் தோல்வி ஏற்படுகிறபோது விவசாயிகளிடம் மறு சாகுபடிக்குப் போதிய பணம் இருப்பதில்லை). பல பயிர் சாகுபடிக்கு ஏற்ற சரியான வழிமுறையைப் பின்பற்றுவதற்கு உரிய வேளாண்துறை வல்லுனர்களை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். ஆகையால் பல பயிர் சாகுபடி செய்யும் போது ஒரு பயிர் பலன் தரவில்லை என்றாலும் மாற்றுவழி இன்னொன்று அதில் இருக்கவே செய்யும்” என்று விளக்குகிறார் விகாஷ்.

இதனையடுத்து குடும்பத்தை நிர்வகிப்பவளும், குடும்பத்திற்கு உணவளிப்பவளுமான பெண்ணுக்கு உதவிகரமாக திட்டங்களை உருவாக்கியது மேற்படி அமைப்பு. “நகர்ப்புற சந்தைகளில் விற்பனை செய்வதற்கான வழிகளை உருவாக்கினோம். அவ்வங்காடிகளில் பழங்குடிப் பெண்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள், ஊறுகாய், நொறுவிகள், மூலிகைப் பொருட்கள், கிழங்குகள், காட்டு மலர்கள், நறுமண இலைகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுகின்றன” என்கிறார் விகாஷ்.

ஜன்தான் கணக்கு வைப்பு, மான்ய உதவி, கடனுதவி போன்ற அரசு நிதி உதவி உட்பட மேலும் பல திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காளான் வளர்ப்பு போன்றவற்றிற்கு அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அது நல்ல வருமானம் ஈட்டித் தரக்கூடியது. குறுகிய காலப்பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. “அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறபோது சமூக அநீதிக்கு எதிராக பழங்குடி மக்கள் குரல் எழுப்புவதை இப்போது நம்மால் அடிக்கடி காண முடிகிறது. உண்மையில் இது மிகவும் மகிழ்ச்சிக்கு உரிய அம்சம் ஆகும். முன்னர் தங்கள் பிள்ளைகளையும் வேலைகளில் ஈடுபடுத்தி வந்ததால் பள்ளி விடுபடல் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 95% லிருந்து 32% ஆக குறைந்துள்ளது. மாணவர்களின் அறிவுத் திறன் பழங்குடிச் சமூகத்தினுள் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுறுவும் என்று நம்புகிறேன்” என்கிறார் விகாஷ்.

விருக்க்ஷாவிற்கு ஒவ்வொரு தொழிலின் லாபத்தில் இருந்தும் 10 சதவீதம் அளிக்கப்படுகிறது. "அத்தொகை மீண்டும் பழங்குடிச் சமூகத்தின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றின் மேம்பாட்டிற்காகவே செலவிடப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் இடம் பெற்றுள்ள பிரதிநிதிகள் தங்களது பகுதிப் பிரச்சனைகளை முன்வைப்பதால் அவற்றை ஆய்வு செய்து, களைவதற்கான நடவடிக்கைகள் உடனுக்குடனே மேற்கொள்ள முடிகிறது. குழந்தைகளின் (ஒரு மாதக் குழந்தை முதல் ஐந்து வயது வரை) எடை, பள்ளி வருகைப் பதிவு, வருகை விடுபடல், குடும்ப வருமான உயர்வு, வேளாண் உற்பத்தி உட்பட அனைத்து வளர்ச்சித் தகவல்களும் மாதந்தோறும் திரட்டப்படுகிறது. தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அடுத்த மாதத்திற்கான இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது” என்கிறார் விகாஷ். புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் போது பழங்குடிக் கலாச்சாரம் என்று கூறப்படுபவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. “பழங்குடிகளின் கலாச்சாரத்தின் அடிப்படைக் கூறுகளான மொழி, பாரம்பரியம் ஆகியவற்றை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்கிறார் விகாஷ்.

தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் அனைத்தும் புதிய வாய்ப்புகளை திறந்து விடக்கூடியதாக அமைந்தன என்று கூறுகிறார் விகாஷ். “நான் வேலையை விட்டு விட்டு தொலைதூரக் கிராமத்தில் குடியேறப்போவதாகச் சொன்னபோது எனது குடும்பத்தினரும், நண்பர்களும் வேதனைப்பட்டார்கள். ஏழைகளுடன் வாழ்ந்து ஏழைகளுக்கு உதவப்போவதாகக் கூறியதைக் கேட்டு எனது மனநலம் பாதிப்படைந்து விட்டதாக நினைத்தார்கள். எங்களது தொழில் முறை அற்புதமான பலன் அளிப்பதைப் பார்த்த பின்னர் என்னைப் புரிந்து கொண்டார்கள்” அதுபோலவே பழங்குடி மக்களாலும் அவர் அவ்வளவு சாதாரணமாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ”என்னைத் தங்களில் ஒருவராக அவர்கள் ஏற்றுக் கொள்வதற்குப் போதுமான நேரத்தை நான் அளித்தேன். ஆனால் இப்போது அவர்கள் எனக்கு ஆதரவளிப்பதோடு என் மீது அக்கறை காட்டவும் செய்கிறார்கள். எனக்கு இன்னொரு குடும்பம் அமைந்து விட்டது போல் இருக்கிறது. எனக்காக எதையும் செய்வார்கள். அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பார்கள். இத்தகைய குடும்பங்கள் பலவற்றைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும் இந்த மரியாதையைச் சம்பாதிப்பது பெரும் பேறாகவும் நல்லாசிகளாகவும் உள்ளது என்று மிக உறுதியாகக் கூறுகிறேன்” என்கிறார் விகாஷ்.

வாட் விருக்க்ஷாவின் நிதி நிலைத்தன்மை குறித்து கேட்டதற்கு “நாம் நல்ல காரியங்கள் செய்தால் பணம் தானாக நம்மைத் தேடிவரும். அப்படித்தான் நாங்கள் இன்றுவரை நீடித்திருக்கிறோம். நாங்கள் செய்துவரும் வேலைகளை முடிந்த வரை சிறப்பாகவும் அதிக நம்பிக்கையுடனும் செய்து கொண்டிருக்கிறோம். அதேபோது பழங்குடிச் சூழலியலைப் பாதுகாத்துக் கொண்டே எங்களுக்கான வருமானத்தையும் ஈட்டிக் கொள்கிறோம்” என்கிறார் விகாஷ்.

இறுதியாகக் கூறும்போது “வளர்ச்சி என்றால் அது பழங்குடி மக்களை நகரிய வாழ்க்கைக்குள் கொண்டு வருதல் என்பதல்ல. பழங்குடி மக்களை பொது நீரோட்டத்துடன் கொண்டு வந்து இணைப்பது அல்ல. பழங்குடிகளுக்கென்று ஓர் செழுமையான கலாச்சாரம் உள்ளது. அது தனித்துவமிக்கது. ஆனால் அது இன்று நிலைத்திருக்க முடியாத நெருக்கடியை எதிர்கொள்கிறது. அது பாதுகாக்கப்பட வேண்டும். இந்த மண்ணில் 3500 ஆண்டுகளாக நீடித்து வந்துள்ள இயற்கையுடன் இயைந்து வாழும் தனித்துவமான பழங்குடிக் கலாச்சாரத்தின் வேர்களைப் பலப்படுத்துகிறது வாட் விருக்க்ஷா.

ஆங்கிலத்தில்: ஃப்ரான்ஸஸ்கா பெராரியோ|தமிழில்: போப்பு