75 வருட குடும்ப காபி வர்த்தக பாரம்பரியத்தை பிரபல ப்ராண்ட் ஆக்கிய ஏற்காடு தொழில் முனைவர்!

உலகளவில் காபி அருந்துவோர் அதிகரித்து வரும் நிலையில் ஐந்தாம் தலைமுறை தொழில்முனைவோரான விஷ்ணு ராஜேஷ், ஏற்காட்டின் தோட்டத்தில் விளையும் காபியை இந்தியா முழுவதும் மின் வணிகம் வாயிலாக விற்பனை செய்கிறார்.

0

ஏற்காடு பகுதியைச் சேர்ந்த ’காவேரி பீக்’ (Cauvery Peak) மின் வணிகம் வாயிலாக குறிப்பிட்ட பகுதியில் பயிரிடப்படும் காபியை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சுய நிதியில் இயங்கும் இந்நிறுவனம் 2017-ம் ஆண்டு விஜயன் மற்றும் விஷ்ணு ராஜேஷ் ஆகியோரால் துவங்கப்பட்டது.

காபி உற்பத்தியில் 150 வருட கால மரபு இருக்குமானால் அதைக்கொண்டு மின் வணிகத்தை உருவாக்கி காபி விற்பனையில் சிறப்பிக்கலாம் என்பதை விஷ்ணுவின் பயணம் காட்டுகிறது. ’காவேரி பீக்’கின் ’தி க்ளென்ஃபெல் எஸ்டேட் க்ளாசிக் அரேபிகா காபி’ அமேசானில் ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்றுள்ளது. காவேரி பீக் வலைதளத்தை பார்வையிட்டால் உயர்தர பிரீமியம் காபி வகைகளைப் பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் சிக்கரியுடன் காபி அருந்தி பழக்கப்பட்டிருந்தால் காவேரி பீக் உங்களுக்கானதல்ல.

ஐந்தாம் தலைமுறை தொழில்முனைவோரான விஷ்ணு ராஜேஷ் இந்தியாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை கவனித்தார். விஷ்ணு ஏர்காட்டில் அமைந்திருக்கும் தனது குடும்ப வணிகமான எம்எஸ்பி ப்ளாண்டேஷன் நிறுவனத்தின் பொறுப்பேற்று காபி வர்த்தகத்தில் ஈடுபட தயார்படுத்தப்பட்டார். ஆனால் அவர் அமெரிக்காவின் வாஷிங்டன் கல்லூரியில் சிறிது காலம் இருந்தபோது வர்த்தகத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும் ப்ராண்டை உருவாக்குவதற்கான முக்கியத் தேவை இருப்பதை உணர்ந்தார். 

அவர் இந்தியா திரும்பியதும் தனது தோட்டத்தில் காபி பயிரிட்டார். அதன் பிறகு குறுகிய காலத்திலேயே 2017-ம் ஆண்டு மத்தியில் காவேரி பீக் என்கிற தனது வலைதளத்தை அறிமுகப்படுத்தினார்.

இதில் காபி உருவாக்கப்பட்ட விதமே முக்கிய அம்சமாகும்.

”உலகளவில் காபி நிபுணர்களுக்கான சந்தை அதிகம் காணப்படுகிறது. இந்தியாவிலும் ப்ரீமியம் காபிகள் சிறப்பாக சந்தைப்படுத்தப்படவில்லை,”

என்றார் காவேரி பீக் இணை நிறுவனர் விஷ்ணு. காபியின் மணம் மற்றும் சுவையின் அடிப்படையில் காபியை வகைப்படுத்தத் தொடங்கினார்.

”நாங்கள் காபி கொட்டைகளை வர்த்தகர்களுக்கு விநியோகிக்கிறோம். அவர்கள் காபி நிறுவனங்களுக்கு அவற்றை விற்பனை செய்கின்றனர். எனவே ஒரு ப்ராண்டை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்பட்டது,” என்றார்.

எனினும் விஷ்ணுவிற்கு முதலீடு தேவைப்பட்டது. அவரது அப்பா விஜயன் ராஜேஷை அணுகினார். அவருக்கும் இந்த முயற்சியில் ஆர்வம் இருந்ததால் அவர் முதலீட்டாளராகவும் இணை நிறுவனராகவும் இணைந்துகொண்டார். விஷ்ணுவின் வணிகத்திற்காக சீட் நிதியாக 50 லட்ச ரூபாய் வழங்கினார்.

வணிகத்தின் துவக்கப்புள்ளி

75 வருடங்களாக இவரது குடும்பம் இந்த வணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும் பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பிறகு காபியின் வகை அமெரிக்க கண்டத்துடன் தொடர்புடையதாகவே உள்ளது. காபி வகையை மேம்படுத்த விஷ்ணுவின் தாத்தா அதிக சுவையை சேர்க்கக்கூடிய காபி கொட்டை செடியைத் தேடி உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார்.

ஏற்காடு தோட்டத்தில் இருக்கும் காபி வகை கோஸ்டா ரிக்காவைச் சேர்ந்ததாகும். ஒரு முறை விஷ்ணு ராஜேஷின் தாத்தா புகழ்பெற்ற அமெரிக்க நடிகை ஜூடி கார்லேண்ட் அவர்களின் தோட்டத்திற்குச் சென்றார். ஜூடி கோஸ்டா ரிக்கா செடியை வாங்குமாறு அறிவுறுத்தினார். அப்போது முதல் இவர்களது நிறுவனம் இந்த கோஸ்டா ரிக்கா செடியை அடிப்படையாகக் கொண்ட காபி கொட்டைகளையே வர்த்தகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

காவேரி பீக்கின் மூன்று வகையான காபியின் மணமும் சுவையும் வேறுபட்டிருக்கும். காவேரி பீக் உலகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் டிஜிட்டல் வாயிலாக வாங்கும் நவீன வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கிறது.

”காபி கொட்டைகள் ஒரே தோட்டத்தில் நடப்பட்டு, பறிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, வறுக்கப்பட்டு, பேக் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. காபி ஃப்ரெஷ்ஷாகவும் தரமாகவும் இருப்பதை உறுதிசெய்ய உங்களுக்கு நேரடியாக தோட்டத்திலிருந்து விநியோகிக்கப்படுகிறது,” என்றார் விஷ்ணு. 

ஆன்லைனில் செயல்படுவதால் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய முடிவதாக விஷ்ணு தெரிவிக்கிறார். இவரது வலைதளத்தில் ஷெவ்ராய்ஸ் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த காபி போன்ற குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த காபி வகைகள் கிடைக்கின்றன. இவர்களது காபி வகைகள் காபி பிரியர்களுக்கு அருமையான மணம், சுவை, நிறம் ஆகியவற்றை அளிக்கிறது.

பிறகு க்லென்ஃபெல் தோட்டத்தில் அரேபிகா மற்றும் ரோபஸ்டா வகைகள் பயிரிடப்பட்டன. கிராம்பு, ஜாதிக்காய், மிளகு கொடிகள் போன்றவை இடையிடையே பயிரிடப்பட்டன.

போட்டி மற்றும் வாய்ப்பு

விஷ்ணு மெல்ல மெல்ல அதிக வாடிக்கையாளர்களை சென்றடைந்து வருகிறார். ஏர்காட்டில் மூன்று சில்லறை விற்பனை மையங்களைத் திறந்துள்ளார். நாடு முழுவதும் ஆறு உணவகங்களுக்கு தனது காபியை விநியோகித்து வருகிறார். தற்போது ப்ராண்ட் துவங்கப்பட்டு ஒன்பது மாதங்கள் மட்டுமே ஆகிறது என்பதால் விற்பனை குறித்து அவர் கவலைப்படவில்லை. அவர் இந்திய காபி வாரியம் போன்ற அமைப்புகளுக்கும் காபி சார்ந்த மாநாடுகளுக்கும் தனது ப்ராண்டை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பல்வேறு காபி சார்ந்த சில்லறை வர்த்தக நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. கூர்க் மற்றும் சிக்மகளூர் பகுதியைச் சேர்ந்த ஃப்ளையிங் ஸ்க்விரில் (Flying Squirrel) டெல்லியைச் சேர்ந்த ப்ளூ தோகாய் (Blue Tokai) போன்றவை ஆன்லைனில் காபி விற்பனை செய்யும் ஸ்டார்ட் அப்களாகும். இந்த ப்ராண்டுகள் ஒரே பகுதியைச் சேர்ந்த காபி வகைளை விற்பனை செய்கிறது.

பேக்கேஜ் செய்யப்பட்ட காபிக்கான சந்தை அடுத்த ஐந்தாண்டுகளில் 10-15 சதவீத சராசரி ஆண்டு வளர்ச்சியுடன் இருக்கும் என மதிப்பிடப்படுவதாக ரிசர்ச் அண்ட் மார்கெட்ஸ் தனது இந்தியா பேக்கேஜ்ட் காபி & கஃபே செயின் மார்கெட் ஓவர்வியூ-வில் குறிப்பிட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே பானங்களுக்காக செலவிடும் நுகர்வோரின் மொத்த எண்ணிக்கை அதிகரித்து காபி ஒரு பிரிவாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளாக பல கிளைகளைக் கொண்ட கஃபேக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் காபி இந்திய நுகர்வோரை அதிகளவில் சென்றடைந்து தனிநபர் நுகர்வையும் அதிகரித்துள்ளது. கஃபே காபி டே, பாரிஸ்டா, டாடா ஸ்டார்பக்ஸ் போன்றவை கஃபே சந்தையில் செயல்படும் பிரபல நிறுவனங்களாகும்.

தென்னிந்தியாவில் காபி பயன்படுத்துவோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். எனினும் மற்ற பகுதிகளிலும் இதன் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அரேபிகாவைக் காட்டிலும் ரோபஸ்டா காபி உற்பத்தி அதிகமாகும். வருங்காலத்தில் இது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காபி மற்றும் தேயிலை துறை 2013-ம் ஆண்டு 25,166 கோடி ரூபாயாக இருந்து 2017-ம் ஆண்டு 41,800 கோடி ரூபாயாக அபார வளர்ச்சியடைந்துள்ளது.

ஐந்தாண்டுகளுக்குள்ளாகவே இந்தத் துறை மும்மடங்கு வளர்ச்சியடைந்து தேயிலை மற்றும் காபி பிரிவில் பல்வேறு வணிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. பல கிளைகளைக் கொண்ட ஒழுங்குபடுத்துப்பட்ட கஃபேக்களின் மொத்த எண்ணிக்கை தற்போதிருக்கும் 3,500-லிருந்து 2020-ம் ஆண்டில் 6,200-ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையானது ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு உள்ள சிறப்பான வாய்ப்பினை சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் விஷ்ணு ராஜேஷின் பயணம் தற்போதுதான் துவங்கியுள்ளது. அவர்கள் தங்களது ப்ராண்டிற்கு காவேரி பீக் என பெயரிடக் காரணம் அவர்களது தோட்டத்தின் மலை உச்சியில் இருந்து காவேரி ஆற்றைப் பார்க்கலாம். பாரம்பரியமான இந்த ப்ராண்ட் உள்ளூரில் வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ப்ராண்டை உலகளவில் பிரபலப்படுத்த தற்போது விஷ்ணு திட்டமிட்டு வருகிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : விஷ்ணு கிருஷ்ணா | தமிழில் : ஸ்ரீவித்யா