ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானை வென்றது இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணி!

0

மக்கள் ஆவலாக எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஒரு நாள் முன்பு மற்றொரு இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் ஃப்ரெண்ட்ஷிப் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இது யூஏஈ-யில் நடைபெறும் மூன்று ஆட்டங்களைக் கொண்ட தொடர் விளையாட்டில் பங்கேற்ற வீல்சேர் கிரிக்கெட் அணியாகும்.

சோம்ஜீத் சிங் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர்களில் 181/7 ரன் எடுத்தது. பாகிஸ்தான் அணி 16 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்து 89 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஃப்ரெண்ட்ஷிப் கோப்பை மூன்று ஆட்டங்களைக் கொண்ட தொடரில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. 18-ம் தேதி நடைபெற்ற விளையாட்டில் வெற்றியடைந்ததை அடுத்து இந்திய வீல்சேர் கிரிகெட் அணி 1-0 என்கிற கணக்கில் முன்னணி வகிக்கிறது என ’டெய்லி ஹண்ட்’ தெரிவிக்கிறது.

முதல் முறையாக இந்தியாவில் வீல்சேர் கிரிகெட் ஆசிய கோப்பை அக்டோபர் 2018-ல் நடைபெற உள்ளது. 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி பங்களாதேஷில் நடைப்பெற்ற சந்திப்பின்போது ஆசிய வீல்சேர் கிரிக்கெட் சங்கம் (AWCC) இந்த முடிவை எடுத்தது.

இந்திய வீல்சேர் கிரிகெட் அணி 2011-ம் ஆண்டு துவங்கப்பட்டது. சர்வதேச பாரா தடகளவீரர் மற்றும் தேசிய விருது பெற்ற பிரதீப் ராஜ் வீல்சேர் கிரிக்கெட் இந்தியாவிற்கு (WCI) அடித்தளம் அமைத்தார்.

பிரதீப் தென்கொரியா சென்றிருந்தபோது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த வீல்சேர் கிரிக்கெட் பிரதிநிதிகளுடன் உரையாடியபோதுதான் அவருக்கு இந்த எண்ணம் தோன்றியது.

பாரா தடகளவீரர்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் வீல்சேர் கிரிக்கெட் அணி தேவை என அவர் நினைத்தார். எந்தவித கட்டமைப்போ நிதி ஆதரவோ இன்றி WCI தானாகவே இந்த விளையாட்டை ஊக்குவித்தது.

தற்போது இவர் இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் செயலாளராக உள்ளார்.

பிரதீப், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அணுகியபோது அவர் இந்திய அணி பங்களாதேஷ் சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக 4.39 லட்சம் நன்கொடை வழங்கியதாக ’டெக்கான் க்ரோனிக்கல்’ தெரிவிக்கிறது.

WCI-ன் தீவிர முயற்சியே ஆசிய வீல்சேர் கிரிக்கெட் சங்கம் (AWCC) நிறுவ வழிவகுத்தது. இந்த சங்கத்தில் பங்களாதேஷ், நேபால், பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இணைந்துள்ளதாக ’தி பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA