இந்தியாடவின் ‘MeToo’ இயக்கம் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!

0

இறுதியாய், பெருந்திரளாய் பொங்கி எழுந்த பெரும்கோபம் அடங்கி இறந்துவிடும், இந்தியாவின் #MeToo இயக்கம் துரதிருஷ்டவசமாக மற்றொரு செய்தி சுழற்சியாக மாறும். ஆனால், நிகழ்வுகள் கற்றுக்கொடுக்கும் பாடத்தை உணர்ந்து, கற்றுகொள்வதே பிரதானம். உண்மையில், சமீப காலங்களில் மிகப்பெரிய புரட்சியாய் கற்றலையே சொல்லவேண்டும்.

ஓராண்டுக்கு முன் இந்தியா நினைத்துக்கூட பார்க்க முடிந்திராததை இரு வாரங்களுக்கு முன்பு கண்டுள்ளது. அது தான் ’மீ டூ’ ‘MeToo'  இயக்கம். சமூக வலைதளங்கள், குறிப்பாக ட்விட்டரில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ட்வீட்களால் நிரம்பி வழிகின்றது. அத்துடன் அவைகள் இதுவரையிலும் விடைகண்டிராத பெண் வெறுப்பு, ஆணாதிக்கம் மற்றும் பாலின நுணுக்கங்கள் போன்ற பல விவாதங்களை உருவாக்கியுள்ளன.

பத்தாண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நானா படேகர் மற்றும் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி ஆகிய இருவரும் தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள் என்று குற்றசாட்டி, வழக்கும் தொடர்ந்தார். ஆனால், அது அவர் ஒருவருடைய குற்றசாட்டாக மட்டும் முடிந்திராமல், ஒட்டு மொத்த பெண்களும் வெளிப் படையாய் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை கூறுவதற்கான, இந்தியாவின் #MeToo இயக்கத்திற்கான அடித்தளமாய் அமைந்தது.

இதனை தொடர்ந்து, பனிப்பாறை சரிவு போன்று பாலியல் துன்புறத்தல் சம்பவங்கள் கொட்ட தொடங்கின. மீடியா, இசை, சட்டம், சினிமா மற்றும் விளம்பரம் என பல்வேறு துறைகளில் பணிபுரியும் நாடெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறத்தல் சம்பவங்களை, வெளி உலகுக்கு தைரியமாய் தெரியப்படுத்தினர்.

பல ஆண்டுகளாக பணிபுரியும் இடங்களில் துன்புறுத்துதல், கற்பழிப்பு, பாலியல் வன்முறை, தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் கொடூரமான சீண்டல்கள் சம்பவங்கள் போன்றவற்றை பற்றி பேசுவதற்கான தளமாக சமூக வளதளங்களை மேடையாகப்  பயன்படுத்திய பெண்கள், நமது சமூகக் கட்டமைப்பின் பாலியல் இயக்கவியலை வெளிச்சத்துக் கொண்டுவந்தனர்.

’மீ டூ’ இயக்கத்தின் கீழ் தினமும் தினமும் குவியத் தொடங்கின பாலியல் குற்றச்சாட்டுகள். கடந்த 10 நாட்களுக்கு முன் #MeTooIndia என்ற ஹேஷ்டெக் வைரலாகியது. நாள்தோறும் புதுபுது பாலியல் துன்புறத்தல் கொடுங்கதைகள் பகிரப்பட்டுவருகின்றனர். பல பெண்கள் அவர்களது பலத்தை அறிந்துவருகின்றனர். ஆனால், இக்குற்றசாட்டுகள் மெல்ல மங்கி இறந்துவிடும்.

மீ டூ இயக்கத்தின் வழி பகிரப்பட்ட பாலியல் குற்றசாட்டுகள் வெறும் செய்திகளாய் விரைவில் நின்றுவிடும். ஆனால், இவை கற்றுக் கொடுக்கும் பாடத்தை கற்றுகொள்வது அவசியமானது. இக்கற்றல், பணியிடத்தில் உள்ள பெண்ணுரிமையை பற்றிய நல்ல புரிதலை ஏற்படுத்த வழிவகுக்கும்.

இந்நாட்களில் சூப்பர் ஹீரோக்களாய் பணிபுரிந்த செய்தி ஆசிரியர்கள், எதையும் விட்டுவிடக்கூடாது, எதைக் கொண்டும் தப்பித்து விட முடியும் என்று உணர்ந்து, அனைத்தையும் வெளியிட்டனர். 

மீடியா துறையிலிருந்து எழுந்த பல குற்றச் சாட்டுகளின் வழியே, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது பரவலாக இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு ஒரு குறிப்பிடத்தக்க வழக்காகும். ஏனெனில், அதனால் தான் சினிமா, விளம்பரம் மற்றும் இசைத்துறையில் உள்ள பெரும் தலைகளுக்கு எதிராக குற்றச் சாட்டுகள் வெளிவந்தன.

நீங்கள் ஒரு முதலாளி என்றால், உங்கள் அணியின் செயல்திறனுக்கு மட்டும் நீங்கள் பொறுப்பாளி அல்ல, உங்கள் பணியாளர்கள் பணியிடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்களா? சமமான முறையில் நடத்தப்படுகிறார்களா என்பதை உறுதிப் படுத்தி கொள்வதுடன் எவ்வித சார்பற்றதன்மையும் இல்லாமல் இருத்தல் வேண்டும். 

சகோதரித்துவத்தின் பலம்!

தனுஸ்ரீ அவருக்கு நேர்ந்த பாலியல் கொடூரங்களை தைரியமாக ட்விட்டரில் பதிவு செய்திட்டபோது, பிரசுரிப்பாளர் மஹிமா குக்ரஜா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்தியா மேனன், அனு பூயன் மற்றும் பலர் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை உலகுக்கு தெரியப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாகவே அதை பார்த்தனர். மற்ற பெண்கள் அவர்களது கதைகளை பெயரிடப்படாமலோ அல்லது வேறுவிதத்தில் பகிரவேண்டும் என்பதற்காக பல பெண்கள் முன்மாதிரியாய் அவர்களது கதைகளை பகிர்ந்தனர்.

மேலும் பல பெண்கள் ஒவ்வொரு நாளும் மணிநேரத்தை செலவழித்து, பாதிக்கப்பட்ட பெண்களது குரலாய் இருந்து பல பாலியல் முறைகேடுகளுக்கான ஆதாரங்களான போன் உரையாடல்களையும், மெசேஸ் ஸ்கீரின்ஷாட்களையும் பகிர்ந்தனர். சில பெண்களுக்கு அவர்களுக்கு நேர்ந்த கொடூரத்தை வெளியில் சொல்ல சில ஆண்டுகள் தேவைப்பட்டது. 

ஆனால், இந்தச் சகோதரித்துவத்தின் வலிமையையும், ஆறுதலையும் பாதிக்கப்பட்ட பெண்கள் கண்டுணர்ந்து கொண்டபோது, அவர்களது கதைகளை பகிர முன்வந்தனர். பெண் வழக்கறிஞர்கள், உளவியலாளர்கள், மற்றும் சிகிச்சையாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவளித்த அதே சமயத்தில், மறுபுறத்தில், பல பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணியிடங்களில் உள்ள பெண்களே உதவி செய்யத் தவறிவிட்டனர். ஒரு இளம் சகஊழியர் சுட்டிக்காட்டி கூறுகையில்,

 “மீ டூ இயக்கத்தின் மூலம் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரும் பாடம் ஒற்றுமை. நீண்ட காலமாய் பெண்கள் நமக்குள்ளிருந்த சகோதரித்துவத்தை மறந்துவிட்டோம்.'' 

 துஷ்பிரயோகத்தை இயல்பானதாக்குவது சரியற்றது!

ஒரு பெண் பாலியல் தொல்லை அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுகையில், அவள் அடிக்கடி அவமானம், சந்தேகம் மற்றும் குற்றப்பழியால் சிதைப்படுகிறாள். ‘என் ஆடை என்னை அப்படி வெளிப்படுத்தியதா?‘ ‘அவரை நான் வழிநடத்துவதற்கு ஏதாவது செய்தேனா? என்று அவளே அவளுக்குள் பல முறை கேள்வி எழுப்பிக் கொண்டு, இறுதியில் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று உணருகையில் ‘நான் என் வேலையை இழக்க நேரிட்டால் என்னாகும்?’, ‘என் கேரியரே முடிந்துவிடும்!’ போன்ற அடுத்து எழும் கேள்விகளால் அவள் வாய்திறக்காமலே போய் விடுகிறாள். 

துரோகிகள் அதிகாரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள், அவர்களை பற்றி உலகுக்கு வெளிச்சம் போட்டுகாட்ட தைரியத்தை சேகரிக்க முடிந்தால் மட்டுமே, அவர்களது அதிகாரத்தை இழக்க வைக்க முடியும். முன்னாள் பத்திரிக்கையாளரும், தொழில் முனைவருமான ரித்து கோயல் ஹரிஷ் கூறுகையில்,

“பாலியல் துன்புறுத்தலை மறந்துவிட முடியாது. சிறிது காலம் மறைந்திருந்தாலும், ஒரு போது மறக்கப்படவியலாது. நீங்கள் உணர்ந்த பயமும், பாலியல் மீறல் உணர்வும் என்றும் உங்களுக்குள்ளே இருக்கும். குற்றவாளி தண்டிக்கப்பட்டால் மட்டுமே மனம் சமாதானம் அடையும்,” என்றார்.

பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக பெண்கள் பேசுவது எளிதல்ல. ஆனால், தனுஸ்ரீ தத்தா முதல் விந்தா நந்தா, பிரியா  ரமணி, சின்மயி, சந்தியா மிர்துல், சலோனி சோப்ரா வரை பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை வெளிப்படையாய் தெரிவிப்பதற்கான தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது ‘மீ டூ’ இயக்கம். ஆனால், இன்னும் பல கதைகள் சொல்லப்படுவதற்காக காத்திருக்கின்றன.

“ஒரு பெண் அவளுக்கு நேர்ந்த கோரமான அனுபவங்களை பகிரும் போது, அவளுடைய கண்ணியத்தை, மரியாதையை, அவளுடைய இன்றைய மற்றும் எதிர்கால வாழ்க்கையையே பணையம் வைக்கிறாள். எனவே, இப்பெண்களை நாம் நம்ப வேண்டும், ஏனெனில் வெளிப்படையாய் பேசுவதற்காக திடமான தைரியம் தேவைப்படுகிறது.''

உரிமைகளை அறிந்திடு!

விஷாகா வழிகாட்டுதலின் படி, 2013ம் ஆண்டு பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக “பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம் (போஷ்)” நிறைவேற்றப் பட்டது. ஆனால், பல பெண்களும் பணியிடத்தில் உள்ள அவர்களுடைய உரிமைகளை அறிந்து வைத்திருக்கவில்லை.

எனவே, பாலியல் தொல்லை அல்லது துஷ்பிரயோக தொடர்பாக புகார்கள் அளிக்க உங்களது நிறுவனத்தில் Internal Complaints Committee (ICC) செயல்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பெங்களூருவைச் சேர்ந்த பெண்கள் உரிமைகள் வழக்கறிஞர் விபா ஷெல்கர் விளக்கி கூறுகையில்,

“நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறேன் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வந்திடும். பின், அவர்கள் என்னை மதிப்பிடுவார்கள். நான் என் வேலையை இழக்க நேரிடும். என் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும்’ என்பதே பாதிக்கப்பட்டவர்களின் பொதுவான பல்லவியாக உள்ளது. பெண்கள் கண்டிப்பாய் இதை தெரிந்துக்கொள்ளவேண்டும். 
POSH சட்டத்தின் 16வது பிரிவின் படி, உள் புகார் குழு அல்லது உள்ளூர் புகார் குழு பாலியல் புகார் தொடர்பாய் விசாரணை அல்லது நடவடிக்கை மேற்கொள்ளும். அதன்படி, புகாரின் உள்ளடக்கங்களோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம், முகவரி, தொந்தரவு செயலுக்கான சாட்சிகளோ, எடுக்கும் நடவடிக்கைகளும் கூட பொதுமக்கள், பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்களுக்கு எந்த விதத்திலும் வெளியிடப்படவோ அல்லது தெரிவிக்கப்படவோ கூடாது.’ என்கிறார். 

பாலின போரல்ல இது...!

“இந்த அளவிற்கு இதுபோன்றதொரு நிகழ்வு நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், அதே வேளையில் இவ்வியக்கம் பாலின போராக மாறி வருவது வருத்தத்தை அளிக்கிறது. இருபாலரும் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் ஒற்றுணர்வுடன் குரல் கொடுப்பதற்கான அழைப்பு இது என்று எண்ணுகிறேன்.” என்றார் F5escapes-ன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மாலினி கௌரிஷங்கர். 

பெரும்பாலான ஆண்கள் பாலியல் தீண்டல்களை செய்திருந்தாலும், ஒட்டுமொத்த ஆண் இனமே துஷ்பிரயோகிப்பவர்கள், பெண் வெறுப்பாளர்கள் என்ற பொதுவான முத்திரையை குத்திவிட முடியாது.

மீ டூ இயக்கம் பெரும் விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தி இருப்பதை தாண்டி, இளைஞர்கள் மத்தியில் முக்கிய பேசுப்பொருளாகவும் மாறியுள்ளது.

“என் மகன் இந்த உரையாடல்களுக்கு மிகவும் வரவேற்பு அளித்தான். நான் அவனது நண்பர்களிடம் இதைப் பற்றி பேசுவதை ஊக்கப்படுத்துகிறேன். இந்த இயக்கம் முக்கியமானது என்று உணர்கிற இளைஞர்களை நான் காண்கிறேன், இது ஒரு வரவேற்கத்தக்க அடையாளம். ‘எனக்கு அவரை தெரியும். அவர்/அவள் ஒரு மாணிக்கம்’ என்று கூறும் பலரை பார்க்கிறேன். பார்வையாளரான நாம் இரு தரப்பு மக்களையும் மென்மையான உரையாடலுக்கு உட்படுத்தி விஷயத்தை பேசி தீர்க்க உதவ வேண்டும். அதே நேரத்தில், பாலியல் துஷ்பிரயோகம் ஒரு பாலினத்துடன் மட்டுமே நின்றுவிடவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இன்னும் ஆண்களும் அவர்களுக்கு நேர்ந்த அனுபவங்ளை வெளியில் சொல்வதற்கான பலத்தையும், தைரியத்தையும் வளர்த்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்,” என்கிறார் மாலினி.

மீ டூ இயக்கத்தில் இருந்து கற்றுகொள்ள வேண்டிய இன்றிமையாத பாடத்தை முன்னெடுத்து செல்வதன் மூலம், அடுத்த தலைமுறையினர் வெளிப்படையாய் பேச பயப்பட தேவையில்லை. எழுத்தாளர் டயானா ஹார்டி கூறுகையில் 

“ஒரு பனிச்சரிவு துவங்குவதற்கு, சரியான களத்தில் ஒரு குரலை மட்டும் உயர்த்தினாலே போதும்...”