திருத்தப்பட்ட வருமான வரி தாக்கலில் கறுப்பு பணத்தை வருவாய் கணக்கில் சேர்க்க முற்பட்டால் தண்டனை!

0

பணம் செல்லாது அறிவிப்பிற்கு பின் திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்யும் வரி செலுத்துவோர்க்கு கவனம் கொள்ளவேண்டிய சில குறிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1961ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்தின் 139(5) வது பிரிவின் கீழ் திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை, வருமான வரிச் சட்டம் பிரிவு 139 (1)ன் படியோ அல்லது தவறான அறிக்கை, விடுபட்டு போதல் போன்ற காரணங்களால் 142(1)ன் கீழ் வழங்கப்பட்ட நோட்டீசுக்கு எதிர்வினையாகவோ ஏற்கனவே வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்துள்ள நபரால் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். பணம் செல்லாது என அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கு பின்னர், சில வரி செலுத்துவோர் தங்களிடமிருக்கும் கணக்கில் காட்டாத (கணக்கில் காட்டாத கையில் இருந்த இந்த ஆண்டு வருமானம் செல்லாத என அறிவிக்கப்பட்ட பணம் உட்பட) பணத்தை காட்டும் நோக்கில், தங்கள் கையிருப்பு பணம், வருமானத் தொகைகளில் குறிப்பிடப்பட்டிருந்த எண்களில் மாற்றம், லாப விபரம் என இந்த சட்ட ஷரத்துக்களை பயன்படுத்தி, கடந்த நிதியாண்டுகளில் தாங்கள் செலுத்திய வருமான வரி விபரங்களை திருத்தி, தங்களிடம் இருந்த கணக்கில் காட்டாத செல்லாத பணத்தை வெள்ளையாக்க வாய்ப்புள்ளது. 

வருமான வரிச்சட்டத்தின் பிரிவு 139 (5) ஆனது விடுபட்ட ஏதேனும் ஒன்றை இணைக்கவோ அல்லது, அசல் அறிக்கையில் தவறாக எதுவும் கொடுக்கப்பட்டிருந்தால் அதை மட்டுமே சரிசெய்து, திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யலாம் . மாறாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வருமான அறிக்கையில் அறிவித்துள்ள வருமானத்தின் அளவிலும், பொருளிலும் மிகப்பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டுவருவதற்காக அல்ல என மத்திய அரசு தனது செய்தி அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தப்படுத்தியுள்ளது.

வருமானத்திலோ, கையிருப்பிலோ அல்லது லாபம் உள்ளிட்ட வேறு வகைகளில் என வருமான வரி கணக்குகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படுத்தியிருந்தால், அத்தகைய கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, சட்ட விதிகளின் படி அபராதம் விதிக்கவோ அல்லது சட்டப்படி வழக்கு தொடரவோ எடுத்துக்கொள்ளப்படும் என வருமானவரித்துறை வரி செலுத்துவோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.