குழந்தைகள் பள்ளியில் தொடர உதவும் 12 மாநிலங்களில் உணவு வழங்கும் ’அக்‌ஷய பாத்ரா’

கடந்த 17 ஆண்டுகளாக அக்‌ஷய பாத்ரா அறக்கட்டளை இந்தியாவில் ஒரு குழந்தைகூட பசியினால் கல்வி கற்காமல் இருக்கக்கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது மேலும் பல மாநிலங்களுக்கும் விரிவடைந்து பலரைச் சென்றடைய திட்டமிட்டுள்ளது.

0

கடந்த பத்தாண்டுகளாக மங்களூருவில் உள்ள தண்ணீர்பவி என்கிற தூரத்து கிராமத்தில் உள்ள ’அக்‌ஷய பாத்ரா’ சமையலறையைச் சென்றடைய குருபுரா நதியில் படகில் பயணித்துக் கொண்டிருக்கிறார் ரத்னா ஜே. சுவர்ணா. குழந்தைகளிடையே இவர் மிகவும் பிரபலம். அவர்கள் இவரிடம் தினமும் என்ன சமையல் என்று கேட்டறிவார்கள். 

“புலாவ் அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு. எப்போதும் மதிய உணவிற்கு புலாவ் இருக்கிறதா என கேட்பார்கள்,” என்று புன்னகைத்தவாறே குறிப்பிட்டார்.

அக்‌ஷய பாத்ரா அதன் சமையலறையில் தயாரிக்கும் உணவின் காரணமாக இந்தக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டிய அடுத்த நாளுக்காக புத்துணர்ச்சியுடன் தயாராவார்கள் என ரத்னா நம்பிக்கை தெரிவித்தார்.

ரத்னா பணம் இல்லாமல் போராடிக்கொண்டிருந்தபோது அருகில் வசித்த ஒருவர் குடும்ப வருமானத்தை சற்று பெருக்க அக்‌ஷய பாத்ரா சமையலறையில் பணிபுரியலாம் என பரிந்துரை செய்துள்ளார். புகுந்த வீட்டினர் அவரது முடிவை ஆதரிக்காத நிலையில் அவரது கணவர் ஆதரவளித்துள்ளார். இவர் சமையலறை மேற்பார்வையாளராக உள்ளார். காய்கறி நறுக்குதல், உணவு சமைத்தல், பாத்திரம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களை மேற்பார்வையிடுகிறார். இவரது மகள் படிப்பு முடிந்ததும் அறக்கட்டளையில் இணையவும் உந்துதலளித்துள்ளார்.

”குழந்தைகளுக்காக சேவை செய்யும் உன்னத பணி வாயிலாக விமோசனம் கிடைக்கும் எனும் நிலையில் ஏன் அதை செய்யக்கூடாது?” என்றார்.

அக்‌ஷய பாத்ரா அறக்கட்டளை பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த முழுமையான உணவை வழங்குவது மட்டுமல்லாது அதன் ஊழியர்கள் வருவாய் ஈட்டி சமூகத்தில் பாதுகாப்பாக வாழவும் உதவுகிறது.

அனைவருக்கும் உணவு

அக்‌ஷய பாத்ரா 2001-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1,500 குழந்தைகளுக்கு உணவளித்து சமூக நோக்கத்துடன் செயல்படத் துவங்கியது. இன்று தினமும் 12 மாநிலங்களில் உள்ள 14,314 பள்ளிகளில் படிக்கும் 17 லட்சம் உணவை விநியோகிக்கிறது. 

பெங்களூருவில் தலைமையகத்தைக் கொண்ட இந்த அறக்கட்டளை 2001-ம் ஆண்டு அதன் பயணத்தைத் துவங்கியது. இந்தியாவில் எந்தக் குழந்தையும் பசியினால் கல்வியைத் தவறவிடும் சூழல் ஏற்படக்கூடாது என்பதே இந்த பயணத்தின் நோக்கமாகும். பதினேழு ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்து சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குழந்தைகளின் கல்விக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

உச்சநீதி மன்றம் மதிய உணவை கட்டாயமாக்கியதற்கு சான்றாக சுட்டிக்காட்டிய அரசு சாரா நிறுவனங்களும் இதுவும் ஒன்றாகும். உச்ச நீதிமன்ற ஆணையில், 

“ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் மதிய உணவு வழங்கி மாநில அரசாங்கங்கம் / யூனியன் பிரதேசங்கள் மதிய உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கிறோம்,” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அக்‌ஷய பாத்ரா அதன் பயனாளிகளின் எண்ணிக்கையை 1,500-ல் இருந்து 1.6 மில்லியன் ஆக உயர்த்தியது. 2009-ம் ஆண்டு 500 மில்லியன் உணவை எட்டியதாக இந்த ஃபவுண்டேஷன் தெரிவிக்கிறது.

”அப்போதிருந்து ஃப்ரெஷ்ஷான, ஆரோக்கியமான, இலவச உணவை பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கவேண்டும் என்கிற யோசனை புதிய மைல்கல்லை எட்டி வருகிறது. 2012-ம் ஆண்டு இக்குழுவினர் அதன் பில்லியனாவது உணவை எட்டிக் கொண்டாடினர்,” என அறக்கட்டளையின் தலைவர் மது பண்டிட் தாசா தெரிவித்தார்.

2016-ம் உணவு வழங்கும் அளவு இரண்டு பில்லியனை எட்டியபோது, 2020-ம் ஆண்டிற்குள் ஐந்து மில்லியன் பள்ளி மாணவர்களைச் சென்றடையவேண்டும் என்கிற நோக்கத்திற்காக தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்கள் வருகையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது என்றார்.

மேலும் மதிய உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்த கர்நாடக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டபோது 2003-ம் ஆண்டு அக்‌ஷய பாத்ரா பொது-தனியார் கூட்டணியைத் துவங்கிய முதல் லாப நோக்கமற்ற நிறுவனமானது.

”அரசாங்கம் அதன் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த குறிப்பிட்ட மாநிலத்தின் ஜில்லா பஞ்சாயத்து அல்லது நகராட்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பள்ளிகளை ஒதுக்குகிறது. அரசாங்கம் முதல் பார்ட்டியாகும். நாங்கள் இரண்டாவது பார்ட்டி ஆவோம். இரண்டாம் பார்ட்டியின் திறன் அடிப்படையில் அதற்கு ஒதுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை மாற்றும் உரிமை முதல் பார்ட்டிக்கு உள்ளது,” என மது விவரித்தார்.

மையப்படுத்தப்பட்ட மற்றும் பரவலாக்கப்பட்ட சமையலறைகள்

அக்‌ஷய பாத்ராவின் மையப்படுத்தப்பட்ட சமையலறைகள் வாங்குதல், சேமிப்பு, தயாரிப்பு, விநியோகம், பராமரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை ஒரே மையத்தில் இருந்து நிர்வகிக்கிறது.

இந்த அரை தானியங்கி சமையலறைகள் பெரிய பானைகள், டிராலிகள், ரைஸ் சூட், பருப்பு / சாம்பார் டாங்க், வெட்டுப்பலகை, கத்திகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும்.

”நான்கு மணி நேரங்களில் மிகப்பெரிய அளவில் 1 லட்சம் உணவு சமைக்கப்படுகிறது. அனைத்து இயந்திரங்களும் சுத்தப்படுத்தப்படுகிறது. மனித தொடர்பை குறைத்து அதிக சுத்தத்தை உறுதிசெய்யவேண்டும் என்பதே இயந்திரமயமாக்கலின் நோக்கம்,” என்றார் மது.

மக்களையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும்போது எந்த பிரச்சனைக்கும் தீர்வுகாண முடியும் என அவர் நம்புகிறார். மனித கரங்களால் சப்பாத்தி தயாரிக்கப்படுவதில் இருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டது. இந்த இயந்திரம் தற்போது ஒரு மணி நேரத்தில் 1,200 கிலோ கோதுமை மாவைக் கொண்டு 40,000 சப்பாத்திகளை தயாரிக்கும்.

கடினமான பிரதேசங்களில் உள்ள குழந்தைகளைச் சென்றடைய மாறுபட்ட அணுகுமுறையை அறக்கட்டளை கையாள்கிறது. தற்சமயம் பரான் (ராஜஸ்தான்) மற்றும் நயாகர் (ஒடிசா) ஆகிய இரண்டு பகுதிகளில் பரவலாக்கப்பட்ட மாதிரி செயல்படுகிறது.

சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் அக்‌ஷய பாத்ராவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் சமையலை மேற்கொள்ள இந்த மாதிரி உதவுகிறது. இந்தப் பெண்களுக்கு அந்தந்த மாநில அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஊதிய அறிவிப்பின்படி ஒரு மாதத்திற்கு 5,600 ரூபாய் வழங்கப்படுகிறது.

சமையல், ஊட்டசத்து, சுகாதாரம் ஆகியவற்றில் ஃபவுண்டேஷனின் தரநிலைக்கு ஏற்ப பெண் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. சமையலறை ஊழியர்களும் மேற்பார்வையாளர்களும் சரியான நேரத்தில் உணவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்கின்றனர்.

நவீன அமைப்பு

உணவைப் பாதுகாப்பாக கையாளவும், தயாரிக்கவும், விநியோகம் செய்யவும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தின் (FSSAI) கீழ் உள்ள உணவு பாதுகாப்பு மேலாண்மை முறை (FSMS) பின்பற்றப்படுகிறது. மது கூறுகையில்,

 “உணவை பாதுகாப்பாக கையாளவும், தயாரிக்கவும் விநியோகம் செய்யவும் FSMS-ன் 5S மற்றும் GMP-க்கு ஏற்ப செயல்படுகிறோம்,” என்றார்.

சமைத்த பிறகு உணவு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் பேக் செய்யப்படும். அதன் பிறகு உணவு விநியோகிக்கும் வாகனத்தில் ஏற்றப்பட்டு பள்ளிகளுக்கு எடுத்துச்செல்லப்படும். 

உணவு ஏற்றப்படும் இடத்திற்கும் சென்றடையும் இடத்திற்கு இடையே உள்ள தூரம் 40 கிலோமீட்டர் இருக்கும் வரை இன்சுலேட் செய்யப்பட்ட வாகனம் உணவை சூடாக வைத்திருக்கும். 

நன்கொடையாக பெறப்பட்ட நிதியிலிருந்து இந்த வாகனங்கள் வாங்கப்படுகிறது. சிலர் வாகனத்தையே நன்கொடையாக வழங்குகின்றனர்,” என்றார்.

அக்‌ஷய பாத்ரா விநியோக வேன்கள் நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கும் விதத்தில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வாகனம் விரைவாக செல்வதற்கான பாதை தேர்வு செய்யப்பட்டு திறன் மேம்படுகிறது.

இந்த அறக்கட்டளைக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆய்வகங்கள் உள்ளது. இவை அஹமதாபாத், குஜராத், லக்னோ, உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ளது. இவை ஒவ்வொரு நிலையும் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு இணங்கி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பதினோறு சமையலறைகளும் ஐஎஸ்ஓ 22000:2005 சான்றிதழ் பெற்றுள்ளதாக அக்‌ஷய பாத்ரா தெரிவிக்கிறது.

ஒவ்வொரு நிலையிலும் தர பரிசோதனை

“ரசாயன எச்சம், நோய் உண்டாக்கும் பாக்டீரியா, ஒவ்வாமை, பிற சேர்க்கைகள், ஊட்டச்சத்து உள்ளடக்கம் ஆகியவற்றிற்காக மூலப்பொருள்களும் இறுதி தயாரிப்பும் சோதனை செய்யப்படுகிறது. மூலப்பொருட்கள் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்படுகிறது. விரைவில் அழுகக்கூடிய பொருட்களுக்காக FIFO முறை பின்பற்றப்படுகிறது,” என்றார் மது.

விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டதும் தர உத்தரவாதம் வழங்கும் குழு அவர்களுக்கு தரநிலைகளை எடுத்துரைக்கும். கிடங்கில் செயல்பாட்டுக் குழுவினர் FIFO முறையைப் பின்பற்றுகின்றனர் என்றார்.

இந்த செயல்முறையை மது உதாரணத்துடன் விவரித்தார். ”விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கப்படும் உருளைக்கிழங்கு கிடங்கில் வைக்கப்படும். இவை கெட்டுப்போவதைத் தவிர்க்க முதலில் வாங்கப்படுவது முதலில் பயன்படுத்தப்படும். அதேபோல் அதிக பொருட்கள் வாங்கப்பட்டு அதிகம் சேமிப்பதும் சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே முதலில் வாங்கப்பட்டவை பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்துகொள்கிறோம். மேலும் தேவையின் அடிப்படையில் குறைந்தபட்ச கையிருப்பு அளவு இருக்கும்,” என்றார்.

இந்திய உணவு கழகம் (FCI) அரிசி விநியோகம் செய்கிறது. FCI உணவு தானியங்களை வழங்க பொது விநியோக முறையை பின்பற்றுகிறது. பருப்பும் காய்கறிகளும் மற்ற விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்படுகிறது.

கார்ப்பரேட் கட்டமைப்பு நிறுவனம்

அக்‌ஷய பாத்ரா லாப நோக்கமற்ற நிறுவனமாக உள்ளபோதும் கார்ப்பரேட் அமைப்பைப் பின்பற்றுகிறது. வெவ்வேறு துறைகளில் தலைவர்களை உருவாக்க ட்ரஸ்ட் உறுப்பினர்கள், ஆராய்ச்சி மற்றும் ஆதரவு பிரிவு, கற்றல் மற்றும் மேம்பாடு பிரிவு போன்றவை உள்ளது.

எனவே சமையலறை இயந்திரங்கள் கொள்முதல் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட பிறகு டெண்டர் அடிப்படையில் வாங்கப்படும்.

ஊழியர்கள் பரிந்துரை, ஆன்லைன் வேலை போர்டல்கள், சமூக ஊடக தளங்கள் (லிங்க்ட்இன் போன்றவை), அவர்களது அதிகாரப்பூர்வ வலைதளம் (www.akshayapatra.org) போன்றவை புதிய ப்ரொஃபஷனல்களை பணியிலமர்த்த உதவுகிறது. 

”நிதி உயர்த்த, வலைப்பக்கம் அல்லது சமூக ஊடக தளங்கள் வாயிலாக தகவலைப் பரப்ப மக்கள் தன்னார்வலர்களாக முன்வரலாம்,” என்று மது குறிப்பிட்டார்.

நிதி ஓட்டம்

ஒரு லாப நோக்கமற்ற நிறுவனம் அது உருவாக்கும் சமூக தாக்கத்தை நிர்வகிக்க தொடர் நிதி ஓட்டம் அவசியம்.

”நாங்கள் உயர்த்தும் நிதி நவீன வசதிகளுடன்கூடிய சமையலறையில் பல்வேறு உணவு வகைகளை முறையான சுகாதாரத்துடன் சமைத்து வழங்க உதவுகிறது. அக்‌ஷய பாத்ரா உள்நாட்டில் நிதி உயர்த்த நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் (FCRA) வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது,” என்றார் மது.

”பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கைகள் வாயிலாக அறக்கட்டளைக்கு ஆதரவளிக்கிறது. 2013-ம் ஆண்டு நிறுவனங்கள் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே இன்ஃபோசிஸ் மற்றும் டாடா குழுமம் எங்களுடன் இணைந்துகொண்டது,” என்றார்.

விரிவாக்கம் குறித்து மது பேசுகையில் எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக மது குறிப்பிட்டார். ஸ்வச் வித்யார்த்தி, ஸ்வச் வித்யாலயா, ஸ்வச் க்ருஹா போன்ற புதிய முயற்சிகள் வாயிலாக குழந்தைகளிடையே சுகாதாரத்தை ஊக்குவிக்க விரும்புகிறோம்,” என்றார்.

அறக்கட்டளை அதன் சேவைகளை விரிவுபடுத்த மற்ற மாநில அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. தற்போதைய பார்ட்னர்களுக்கு மாதிரியை வழங்க உள்ளது. பார்ட்னராகியுள்ள மாநிலங்களில் புதிய சமையலறைகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : ஆயிஷா ராய் | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL