உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஆட்டோ ஓட்டுநரின் மகள்! 

1

தீபிகா குமாரி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியைச் சேர்ந்தவர். இவரது அப்பா ஆட்டோ ஓட்டுநர். 23 வயதான தீபிகாவிற்கு குழந்தைப் பருவம் முதலே வில்வித்தையில் ஆர்வம் இருந்தது. இவரது பெற்றோர் ஏழ்மையான நிலையில் இருந்ததால் தனது கனவை நோக்கி பயணிக்க பெற்றோரிடம் ஆதரவு கோர முடியவில்லை.

மரத்தாலான வில் மற்றும் அம்பைக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார். மரங்களில் இருக்கும் மாங்காயை இலக்காகக் கொண்டு பயிற்சி மேற்கொண்டார். இன்று வில்வித்தையில் உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கிறார். 2012-ம் ஆண்டு உலகக்கோப்பை வில்வித்தையில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார்.

2006-ம் ஆண்டு டாடா வில்வித்தை அகாடமியில் சேர்ந்தபோதுதான் முதலில் முறையான வில் மற்றும் அம்பை கைகளால் தொட்டார் தீபிகா. வெகு விரைவில் ஜூனியர் வில்வித்தை உலக கோப்பையை வென்றார். இந்த போட்டியில் வெற்றிபெற்ற இரண்டாவது இந்தியர் என்கிற பெருமை தீபிகாவைச் சேரும். 2010-ம் ஆண்டு புதுடெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுகளில் வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளார். 

இவர் ஒரு குழந்தை மேதையாக இருந்தபோதும் இந்த விளையாட்டை விருப்பமானதாக தேர்ந்தெடுக்க இவரது குடும்பத்தினர் எளிதாக சம்மதிக்கவில்லை. ஆரம்பத்தில் தீபிகாவின் திறமையை அவரது தந்தையால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ குறிப்பிடுகிறது.

தொடர்ந்து போராடி இறுதியில் தனது அப்பாவின் பாராட்டுதலைப் பெற்றார் தீபிகா.

2012 உலக கோப்பை வில்வித்தை போட்டியில் கொரியாவின் லீ சங் ஜின்னுடன் மோதி வென்று உலக தரவரிசையில் முதலிடத்தை பெற்ற முதல் இந்திய வில்வித்தை வீரரானார். தற்போது உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளார்.

இந்த வருடம் பல வெற்றிகளை கைப்பற்றாதபோதும் பாங்காக்கின் இண்டோர் உலகக்கோப்பை வில்வித்தை போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். மூன்றாவது இடத்திற்கான இந்த போட்டியில் ரஷ்ய வீராங்கனை சயானா தைஷ்ரெம்பிலோவா உடன் போட்டியிட்டு இந்த வருட வில்வித்தை உலகக் கோப்பைக்கான ஒரே பதக்கத்தை இந்தியாவிற்காக வென்றுள்ளார் என்று பிடிஐ தெரிவித்துள்ளது.

கட்டுரை : Think Change India